தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்


PUBLISHED ON : டிச 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு அடிக்கடி தலைவலி வருகிறது. மாத்திரை போட்டால், அந்த நேரத்திற்கு சரியாகிவிடும். அதன்பின் திரும்பவும் வந்து விடுகிறது. இதற்கு என்ன தான் தீர்வு?

ப.பிரீத்தி, திருவாரூர்

தலைவலி இல்லாத மனிதர்கள் அபூர்வம். தலைவலி நம்மில், 90 சதவீதம் பேருக்கு வருகிறது. இதில், 25 சதவீதம் பேருக்கு, தலைவலி திரும்பத் திரும்ப வருகிறது. 70 முதல் 80 சதவீத தலைவலி குணப்படுத்தக் கூடியது. தலை வலிக்கும்போது தெரியும் அறிகுறிகளை வைத்து, எந்த வகை தலைவலி என, சொல்லிவிட முடியும். மூளையில் நடக்கும் ரசாயன மாற்றம், தலையின்

மேற்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள், கழுத்து, தலைப்பகுதியில் உள்ள தசைகள் இவற்றில் ஏற்படும் மாற்றம் தலைவலியை உண்டு பண்ணலாம். தலைவலிக்கான காரணங்களை வைத்து, முதல் வகை, இரண்டாம் வகை என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை: மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி இது. மைக்ரேன் தலைவலிக்கு சாப்பாடு ஒவ்வாமையில் துவங்கி, பார்க்கும் பொருட்கள், வாசனை, வண்ணங்கள், புறச்சூழல்கள் என, எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். குறிப்பிட்ட செயலை செய்யும்போது சிலருக்கு தலைவலி வரும். வாழ்க்கை முறை மாற்றங்களினால் தலைவலி வரலாம். பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன், ஹார்மோன் மாற்றங்களினால் தலைவலி வரலாம்.

இரண்டாம் வகை: குறிப்பிட்ட நோயின் அறிகுறியாக இந்த வகை தலைவலி இருக்கலாம். நோய் பாதிப்பின் காரணமாக, மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்பைத் துாண்டுவதால், தலைவலி அதிகமாக இருக்கும். சைனசைடிஸ், மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தம் கட்டிக் கொள்வது, மூளைக் காய்ச்சல் காரணமாக மூளையைச் சுற்றியுள்ள திரவத்தால் ஏற்படும் வைரஸ் தொற்று, தலைக்குப் போகும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சி, மூளை ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றம், பற்கள், காதில் ஏற்படும் தொற்று, 'க்ளைக்கோமா' எனப்படும் கண் அழுத்தம், அதிக அளவு வலி நிவாரணிகளை

பயன்படுத்துவதால் இந்த வகை தலைவலி வரலாம்.இதுதவிர உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், காசநோய் இருந்தால் தலைவலி வரும். ஆஸ்துமா இருப்பவர்களுக்கு தலைவலி அபூர்வமாக வரும்.காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது: குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் திரும்ப, திரும்ப தலைவலி வருவது, ஒருமுறை வந்தால் அதிக நேரம் இருப்பது, நேரம் ஆக, ஆக தலைவலி அதிகரிப்பது, தொடர்ந்து சில நாட்கள் வலி இருப்பது, பார்வை மங்குவது, தலைசுற்றல், வாந்தி, மயக்கம், காலையில் எழுந்தவுடன் வாந்தியுடன் தலைவலி என இருந்தால், உடனடியாக

மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.என்ன காரணத்திற்காக மைக்ரேன் தலைவலி வருகிறது என்பது தெரியவில்லை என்றாலும், அதை வராமல் தடுக்க மருந்துகள் இருக்கின்றன. குறிப்பிட்ட வாரங்களுக்கு தொடர்ந்து இந்த மருந்துகளை சாப்பிட வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால், வாரத்திற்கு, இரண்டு நாட்கள் வரும் தலைவலியை மாதத்திற்கு, இரண்டு முறை என, படிப்படியாகக் குறைத்து தலைவலியே வராமல் செய்யலாம்.

காரணத்தை தெரிந்து கொண்டால் தலைவலியே இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதேநேரத்தில் காரணத்தை தெரிந்து கொள்ளாமலேயே தலைவலியை அலட்சியப்படுத்தினால் ஆபத்தில் முடியலாம்.

டாக்டர் பாரத், பொதுநல மருத்துவர், பாளையங்கோட்டை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us