PUBLISHED ON : ஆக 23, 2015
மலச்சிக்கலால் அவதிப்படாதவர்கள் இருக்க முடியாது. தினமும் காலையில் மலம் வெளியேறாவிட்டால், அன்றைய தினம் ஏதோ ஒரு சிக்கலோடுதான் நகரும். குறித்த நேரத்தில் உட்கொள்ளும் நார்ச்சத்துள்ள உணவும், தண்ணீருமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு.
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். அதேபோல் முளைக்கீரையையும் சாப்பிடலாம். தினமும் ஆகாரத்திற்கு பின் பப்பாளிபழம், 100 கிராம் அளவிற்கு உட்கொண்டாலும் மலச்சிக்கல் தீரும்.
ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும், திரிபலாச்சூரணம், வைச்னாவர சூரணம், அவிபத்தி சூரணம் போன்றவற்றை மருத்துவரின் அறிவுரைப்படி உட்கொண்டாலும் மலச்சிக்கல் தீரும்.
ரத்த அழுத்தம் குறைய...
இஞ்சியின் மேல் தோலை நீக்கி, நன்றாக கழுவி சிறு துண்டுகளாக்கி தேனில், ஆறு நாட்கள் ஊற வைத்து, அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டு வந்தால், எல்லா வகை பித்தமும், உயர் ரத்த அழுத்தமும் குறையும். கொத்தமல்லிக்கீரை,
கறிவேப்பிலை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ரத்த அழுத்தம் மற்றும் பித்த தலைச்சுற்று குறையும்.
எலுமிச்சை, வில்வம் இலை, கீழாநெல்லி இலைகளை கொண்டு, எண்ணெய் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தாலும், ரத்த அழுத்தம் குறையும்.
பப்பாளிக்காயை சமைத்து உட்கொண்டால் உடல் எடை குறையும். அடிக்கடி சோம்பு நீர் பருகினால், ஊளைச் சதை குறையும்.
பூண்டு, வெங்காயம் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொண்டால், தேவையற்ற கொழுப்பு குறையும்.
