PUBLISHED ON : பிப் 28, 2020

நாம் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, நோய்க்கான காரணம் உடலில் இருந்து தோன்றியதா அல்லது மனம் தான் காரணமா என்ற சந்தேகம், ஏதாவது ஒரு தருணத்தில் ஏற்படும்.
உடல் உறுப்புகளில் தோன்றும் கோளாறுகளை நீக்கினால் போதும், நோய் நீங்கி விடும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. தனக்கு ஏற்பட்ட நோய் குணமாகாமல் நீடிக்கும்போது தான், 'இந்த நோய்க்கு, மனம் காரணமாக இருக்குமோ?' என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில், நோயாளிகள் கூறும் குறிகளால், மருத்துவர் குழம்பிப் போய், 'நீங்கள் ஒரு, மனநல மருத்துவரை சென்று பாருங்கள்' என, பரிந்துரை செய்து விடுவர். இதற்கு காரணம், தான் மேற்கொண்ட பரிசோதனைகளில், நோயை கண்டறிய முடியாமல் போவதும், கொடுத்த மருந்துகள் பயன் இல்லாமல் போவதும் தான்.
நம் உடல் நலத்தின் மையமாக செயல்படுவது, ரத்த ஓட்டம் தான் என்ற எண்ணம், அனைவரின் மனதிலும் பதிந்து போன கருத்தாக இருக்கிறது. எனவே தான், நோய்களை கண்டுபிடிக்கவும், நோய்களை குணப்படுத்துவதைமேற்கொள்வதிலும், ஏராளமான ரத்த பரிசோதனைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.ஆனால், உண்மை அதுவல்ல...!உடல் ஆரோக்கியத்தின் மையப் பகுதி, நரம்பு மண்டலம் தான். மூளை பிறப்பிக்கும் ஆணைகளுக்கு தக்கவாறு, நம் உடல் நலம் பேணப்படுகிறது. உடல் உறுப்புகளில், எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படலாம். உடலில் பின்னிப் பிணைந்து கிடக்கும் நரம்புகள், நோய் பற்றிய சமிக்சைகளை, மூளைக்கு எடுத்து செல்லும்.
நோய் எதிர்ப்பு திறனை கூட்ட, மூளை உரிய கட்டளைகளை பிறப்பித்து, நோய்களை எதிர்த்து போராட வைக்கும். நோய் எதிர்ப்பு திறன் செல் அணுக்கள் உருவாக்கி, ரத்த ஓட்டத்தின் ஊடே சென்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; நோயும் குணமாகும்.நீண்ட நாட்களாக நோய் நீடித்து இருப்பதற்கு, நாளமில்லா சுரப்பிகளின் சீரற்ற செயல்பாடே முக்கிய காரணம். இதை சரி செய்யும் போது, நரம்பு மண்டலம் சீராக செயல்படுகிறது. இதனால், சாதாரண காய்ச்சல் முதல், புற்றுநோய் வரை எந்த நோயாக இருந்தாலும், விரைவில் குணம் தெரிகிறது.மனிதன் நோய்வாய்ப்படும்போது, நோய்க்குரிய அடிப்படை குறிகளை மட்டும் கூறுவர். ஒரு சிலர், உடல் நலத்தில் பிரத்யேக குறிகளையும், மனநல குறிகளையும், தனக்கே உரித்தான பாணியில், மருத்துவர்களிடம் சொல்வர்.
உதாரணமாக, 'தைராய்டு' பாதிப்பை எடுத்துக் கொள்வோம். தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால், உடல் பருமன் கூடுவது இயல்பு. அதோடு, சருமம் வறண்டு, வியர்வை இருக்காது; மனதளவில் மந்தமாக, சுறுசுறுப்பின்றி இருப்பர்.அதே சமயத்தில், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால், உடல் இளைக்கும். படபடப்பு, அதிக வியர்வை உடலளவில் காணப்படும். இதில், மனதளவு பாதிப்பு மற்றும் பதற்றத்தால், நிலைக் கொள்ளாமல் இருப்பர்.ஒரு நோய் என்பது, உடல் உறுப்பு அளவில் மட்டுமல்ல; மன அளவிலும் பாதிப்புகளை பிரதிபலிக்கும். ஒவ்வொருவரின் தனித் தன்மைக்கேற்ப, அதை வெளிப்படுத்துவர்.ஒருவருக்கொருவர் மாறுபடும் இன்றைய காலத்தில், உறுப்புகளின் அடிப்படையில் மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் இயக்கம் முழுமையாக ஆராயப்படுவதில்லை. எனவே, நோயும் உடலை விட்டு நீங்குவதில்லை.
முழுமையாக விடுதலை பெற, உடல் குறிகளையும், மனக்குறிகளையும் மையமாக கொண்டு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நோயை, நம் உடல் தன்னை தானே சரி செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்வது, மிகக் குறைவு. நோய் எதிர்ப்பு திறனை உடலில் ஏற்படுத்தி, நோய்களை தடுக்கவும், நிரந்தரமாக குணப்படுத்த முயல்வதும், மிக சொற்பமே!பரிசோதனை கூடத்தில் படபடப்புடன் நின்று, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது என்று அறிந்தவுடன், ஒரே மாதத்தில் உடல் இளைத்து, மன உளைச்சலில் அல்லல்படுவோர் ஏராளம். இதுவே, பல நோய்களுக்கும் பொருந்தும். உடலும், மனமும் இணைந்து செயல்படுவதை, ஒவ்வொரு தனி மனிதனிடமும், வித்தியாசமான குறிகளுடன் காண முடியும்.மருத்துவ துறைகளில், ஹோமியோபதி மருத்துவத்தில், நோய்குறிகளை மட்டும் வைத்து, சிகிச்சை அளிப்பதில்லை. உடல் குறிகளுக்கும், மனக் குறிகளுக்கும் சேர்த்து முக்கியத்துவம் அளித்து, மருந்துகளை பரிந்துரை செய்கிறோம். ஒரு நோய் ஆற்றல் சக்தியாக உடலில் தோன்றுவது, படிப்படியாகத்தான் தோன்றும்.
அப்படிப்பட்ட நோய் ஆற்றல், ஒரு தனி மனிதனின் உடல் இயக்கத்திலோ அல்லது பரம்பரை தன்மை கொண்டதாகவோ இருக்கும். இந்த பாதிப்புகளை முதலில் வெளிப்பாடாக கொண்டு வருவது, மனம் மட்டுமே.அப்படிப்பட்ட நோய் சக்தியை, வேதிப் பொருட்களை, மருந்துகளை மூலப் பொருட்களாக கொண்டு சிகிச்சை பெற்றால், தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். நிரந்தர குணம் பெற, இயற்கையில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் வைத்து தயாராகும், இயற்கை சக்தி வடிவில், மருந்துகளை தர வேண்டும்.இவை, இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி, உடலும், மனமும் தன்னைத் தானே தயார் செய்து, ஆரோக்கிய நிலையை அடையச் செய்யும் என்பதை, பல்வேறு சிகிச்சை முறைகளில் தெளிவாக அறியலாம்.
டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம்
ஹோமியோ டைம்ஸ்,
சென்னை.
044 - 2811 3300
