PUBLISHED ON : பிப் 29, 2020

ஆஸ்துமா என்பது, வியாதி அல்ல; தலைவலி, காய்ச்சல் போல், இதுவும் ஒரு அறிகுறி. தலைவலிக்கு, நிறைய காரணங்கள் உள்ளன; அதை கண்டறிந்து, தவிர்த்தால் மட்டுமே, வலி வராது. உடம்பில் ஏற்படும் தொற்று அல்லது வேறு காரணங்களின் அறிகுறியாகவே, காய்ச்சல் வருகிறது. அதுபோலத்தான், ஆஸ்துமாவும்.ஆஸ்துமா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கான காரணங்கள், அந்தந்தபகுதிக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில், வாகனங்களால் ஏற்படும் துாசு, மாசு மிக அதிகம். இதன் காரணமாக, ஆஸ்துமா பாதிப்பு அதிகம் இருக்கும்.அதே நேரத்தில், பெங்களூரு பக்கம் போனால், வாகனங்களால் ஏற்படும் மாசு, சென்னையை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும், செடி, கொடிகள், பூக்கள் உற்பத்தி அதிகம் என்பதால், பூக்களில் இருந்து வரும் மகரந்தங்கள், ஆஸ்துமா பாதிப்பிற்கு காரணமாக உள்ளன.கோயமுத்துார் போன்ற கொங்கு மண்டலத்தில், போக்குவரத்தால் ஏற்படும் மாசை விடவும், தொழிற்சாலை மாசு, மக்கள் நெருக்கடி இவையே, ஆஸ்துமாவிற்கு பிரதான காரணங்களாக உள்ளன. பல்வேறு காரணங்களால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும், தவிர்க்கக் கூடியது, தவிர்க்க முடியாதது என்று, இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
தவிர்க்கக் கூடியவை
ஆஸ்துமாவிற்கான, 90 சதவீத காரணங்கள், நாமாகவே உருவாக்கிக் கொள்வது தான். தொழிற்சாலை மாசு, வாகன புகை இதில் முக்கியமானவை. தவிர, ஊதுபத்தி, சாம்பிராணி புகை, வாசனை திரவியங்கள், பெயின்ட் போன்றவற்றால், ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு, மூச்சிரைப்பு, மூச்சு திணறல் அதிகமாகி விடும். இவற்றின் பாதிப்பு நேரடியாக தாக்காமல் இருக்க, முகக்கவசம் அணியலாம். முடிந்த வரை, புகை போடுவதை தவிர்க்கலாம்.
மன அழுத்தம்
ஆஸ்துமா கோளாறு வருவதற்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, மன அழுத்தம். இதை, 'எமோஷனல் ஆஸ்துமா' என்று சொல்வோம். அளவுக்கு அதிகமான சந்தோஷம், அளவுக்கு அதிகமான துக்கம் இரண்டுமே, ஆஸ்துமாவை உண்டாக்கலாம்.குறிப்பாக, மதிப்பெண் குறைவாகப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அந்த மன அழுத்தத்தில், ஆஸ்துமா வரலாம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது, நம் கையில் தான் உள்ளது.
தவிர்க்க முடியாதவை
மழை, பனி காலம் வந்தாலே சிலருக்கு மூச்சிரைப்பு வந்து விடும். அதற்காக, மழை, பனி பொழிவை நம்மால் நிறுத்த முடியாது. இந்த காலங்களில், 'இன்ஹேலர்' உபயோகித்து, பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன், கோடை காலத்தில், ஆஸ்துமா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கோடை துவங்கியதிலிருந்து, அதிக நோயாளிகள் வருகின்றனர்.இவர்களுக்கு, வழக்கமான ஆஸ்துமா பிரச்னையோடு, மூச்சுத் திணறலும் சேர்ந்தே இருந்தது. மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் அளவிற்கு, நிலைமை மோசமாக இருந்தது.
சிகிச்சை
எந்த நோயாக இருந்தாலும், முறையான பரிசோதனை செய்து, உறுதி செய்யாமல், மருந்து, சிகிச்சை தர முடியாது. மூச்சிரைப்புடன் வரும் ஒருவருக்கு, எதன் அடிப்படையில் ஆஸ்துமா என்று முடிவு செய்கிறோம் என்பதற்கு, சரியான காரணம் இருக்க வேண்டும். இதற்கு, 'ஸ்பைரோமெட்ரி' என்ற பரிசோதனை செய்து, நுரையீரல் எந்த அளவுக்கு பாதித்து உள்ளது; ஆஸ்துமா பாதிப்பு உள்ளதா, இல்லையா; பாதிப்பு எந்த அளவு உள்ளது; மருந்து சாப்பிட்டால் சரியாகுமா, எத்தனை நாட்களுக்கு மருந்துகள் தேவை என்று அனைத்தையும், இந்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமா மருந்துகள்
ஆஸ்துமா என்பது, நுரையீரலை பாதிப்பது; மூச்சுக்குழாய் சுருங்கி உள்ளது. சுருங்கிய மூச்சுக்குழாயை விரிவடைய வைப்பதற்கு, மருந்துகள் தர வேண்டும்.மாத்திரை, ஊசி அல்லது இன்ஹேலர் மூலம், நேரடியாக நுரையீரலுக்கு மருந்து செலுத்துவது என்ற மூன்று வழிகளில், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்.இதில், மாத்திரைகள் அல்லது ஊசி மூலம் மருந்துகள் தரும் போது, அது ரத்தத்தில் கலந்து, நுரையீரலுக்குச் சென்று வேலை செய்யும். ரத்தம் உடல் முழுவதும் செல்வதால், மருந்துகளும் செல்லும்.நீண்ட நாட்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடும் போது, கை, கால் நடுக்கம், மார்பு படபடப்பு, பொட்டாசியம் அளவு குறைவது, ரத்த சர்க்கரை அளவு அதிகமாவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். இன்ஹேலர் என்றால், நேரடியாக மருந்து நுரையீரலுக்கே செல்லும். இதனால், பக்க விளைவுகள் மிகக் குறைவு.மாத்திரை சாப்பிட்டால், அதன் பலன் தெரிவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ஊசி போட்டால், அரை மணி நேரத்தில் நிவாரணம் தெரியும். ஆனால், இன்ஹேலர் இரண்டு நிமிடங்களில் வேலை செய்யும்.நுரையீரலுக்கு நேரடியாக செல்வதால், மருந்தின் அளவும் குறைவாக இருந்தால் போதும். இன்ஹேலரில், 100 மைக்ரோ கிராம் தரும் மருந்தை, மாத்திரையாக தந்தால், 4 மில்லி கிராம்; அதாவது, 4,000 மைக்ரோ கிராம் தர வேண்டியிருக்கும்.எங்கு சென்றாலும், இன்ஹேரை கையில் எடுத்துச் செல்ல முடியும். ஆஸ்துமா கோளாறு இருப்பவர்களுக்கு, இன்ஹேலர் தான் சிறந்த தீர்வு.
ஆஸ்துமா வரும் வாய்ப்பு
ஆஸ்துமா, குறிப்பிட்ட காரணங்களால் வருவதில்லை. யாருக்கெல்லாம், சுவாசக் குழாய் சுருங்கும் தன்மை உள்ளதோ, அவர்களுக்கெல்லாம் ஆஸ்துமா கோளாறு வரலாம். மரபியல் காரணங்களால் ஆஸ்துமா வருவதற்கு, 25 சதவீதம் வாய்ப்பு உள்ளது.பெற்றோருக்கு ஆஸ்துமா இருக்கிறது. அவர்களின் குழந்தைக்கு, துாசி, மாசு போன்ற வெளிக் காரணங்களால், அடிக்கடி தும்மல், சளி பிரச்னை ஏற்படுகிறது என்றால், ஆஸ்துமாவை உண்டாக்கும் மரபணுவை இது துாண்டி, கோளாறை ஏற்படுத்தும்.வாழ்நாள் முழுவதும் இன்ஹேலர் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதில், துளியும் உண்மை இல்லை. உதாரணமாக, துாசி, மாசு ஆஸ்துமாவை உண்டாக்குகிறது என்றால், அது போன்ற இடங்களுக்கே தினமும் சென்றால், செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து, இன்ஹேலர் பயன்படுத்த வேண்டியிருக்கும். இது போன்ற சூழலை தவித்தால், தேவை இருக்காது.அதைச் செய்யாமல், நான் எங்கு சென்றாலும், எனக்கு மூச்சிரைப்பு வருகிறது; இன்ஹேலர் தேவைப்படுகிறது என்பது தவறான எண்ணம். இன்ஹேலரை முறையாக தெரிந்து பயன்படுத்தினால், 90 சதவீதம் பேருக்கு, ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இருக்கும்.நுரையீரல் அழற்சி எனப்படும் வீக்கத்தால் ஏற்படுவது ஆஸ்துமா. இதை குறைப்பதற்கு, குறிப்பிட்ட வாரங்கள் மருந்துகள் தேவைப்படலாம். அதன்பின், என்ன காரணத்தால் ஆஸ்துமா வருகிறதோ, அதை தவிர்த்தால் மருந்துகள் தேவைப்படாது.எந்த பருவத்தில் ஆஸ்துமா அதிகம் வருகிறதோ, அந்த பருவ காலம் துவங்குவதற்கு முன், இன்ஹேலரை பயன்படுத்துவது நல்லது.
அறிகுறிகள்
நபருக்கு நபர், அறிகுறிகள் மாறுபடும். 90 சதவீதம், மூச்சிரைப்பு சப்தம், பூனை கத்துவது போல் கேட்கும். எல்லாருக்கும் இது இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சிலருக்கு, இருமல் வரலாம். ஆஸ்துமாவால் வரும் இருமல், வறட்டு இருமலாக, இரவில், அதிகாலையில் படுத்திருக்கும் போது அதிகம் வரும்.இது போன்ற இருமலுக்கு, இருமல் மருந்தை லிட்டர் கணக்கில் குடித்தாலும் சரியாகாது. மார்பு சளி மட்டும் இருந்தால், ஒரு வாரம், 10 நாளில், இருமல் மருந்து குடித்தால் சரியாக வேண்டும்.அப்படி இல்லாமல், இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால், ஆஸ்துமாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் வர வேண்டும். சிலருக்கு, மார்பு பகுதி, தொண்டையை இறுக்குவது போன்ற உணர்வு வரும்.
உணவு, பிராணிகள்
செயற்கை நிறமிகள், வேதிப் பொருட்கள் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாக்லேட்டில் இருக்கும் கோகோ, மிக மோசமாக ஆஸ்துமாவை துாண்டக் கூடியது. சாப்பிட்ட உடனேயே, மூச்சிரைப்பு வரும்.ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, சாக்லேட் கொடுப்பதை தவிர்க்க முடியாவிட்டால், கோகோ இல்லாத வெள்ளை சாக்லேட் தரலாம்.ஆஸ்துமா கோளாறு உள்ள பக்கத்து வீட்டுக்காரருக்கு, தக்காளி ஒத்துக்காது; நானும் சாப்பிடக் கூடாதா என்று கேட்கக் கூடாது. சிலருக்கு தக்காளி, சிலருக்கு ஆரஞ்சு என்று, ஒவ்வொருவருக்கும், ஒரு உணவு ஒத்துக் கொள்ளாது. அதைத் தெரிந்து தவிர்ப்பது அவசியம்.செல்லப் பிராணிகளால் சிலருக்கு, ஆஸ்துமா வரலாம். அவற்றின் மேலிருந்து உதிரும், கண்ணுக்குத் தெரியாத ரோமம், சுவாசக் குழாயில் அழற்சியை ஏற்படுத்தலாம்.பல ஆண்டுகளாக, இந்த நாயை வளர்க்கிறேன்; விட முடியவில்லை என்பர். ஆனால், பிரச்னைக்கு காரணமாக இருப்பதை தவிர்ப்பதே நல்லது.
டாக்டர் எஸ்.பாலமுருகன்
இயக்குனர்,
நெஞ்சக பிரிவு,
ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,
சென்னை.
98410 90860
