தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/லட்டு தின்ன ஆசையா!

லட்டு தின்ன ஆசையா!

லட்டு தின்ன ஆசையா!


PUBLISHED ON : மார் 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மது பழக்கம் இல்லாதவர்களுக்கும், 'சிரோசிஸ்' எனப்படும், கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவது, தற்போது அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது.

கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால், கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து, 'பேட்டி லிவர்' என்ற நிலை வருகிறது. கல்லீரல் செல்கள், திசுக்களில் கொழுப்பு சேர்ந்து, நாளடைவில் அதைச் செயிலிழக்கச் செய்கிறது. இந்த நிலை தான், 'சிரோசிஸ்!'இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், பேட்டி லிவர் கோளாறை பார்ப்பதே அபூர்வம். ஆனால் இன்று, கல்லீரல் துறையில், உள் நோயாளிகள் பிரிவில் இருக்கும், 10 பேரில், ஆறு பேருக்கு, மது பழக்கத்தால் சிரோசிஸ் பாதிப்பும், மூன்று பேருக்கு, பேட்டி லிவரால், சிரோசிஸ் பாதிப்பும் உள்ளது.மீதிமுள்ள ஒருவருக்கு, மரபியல் காரணங்களால், கல்லீரல் செயலிழப்பு இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது, 'அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனை செய்பவர்களில், குறிப்பாக பெண்களில், 70 சதவீதம் பேருக்கு, பேட்டி லிவர் பிரச்னை உள்ளது என்பது தான்.

'பேட்டி லிவர்' ஏன் வருகிறது?



'கார்போ ஹைட்ரேட்' உணவுகள் அதிகம் உண்பது, முக்கிய காரணம். சாப்பாட்டை தவிர்த்து எல்லா நேரமும், 'ஸ்நாக்ஸ்' எனப்படும் நொறுக்கு தீனிகளை, இனிப்பு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது. இதில், அதிகளவு கார்போ ஹைட்ரேட், கரையாத கொழுப்பு உள்ளது. முக்கியமாக ஒரு நாளைக்கு, ஒருவருக்கு எவ்வளவு கலோரி தேவையோ, அதைவிட அதிகம் சாப்பிடுவது. அதிகப்படியான கலோரி, கொழுப்பாக மாறி, உடலிலேயே தங்கிவிடும்.

எவ்வளவு கலோரி சாப்பிட வேண்டும்?



இது, நபருக்கு நபர், வயது, செய்யும் வேலை, பாலின வேறுபாட்டைப் பொறுத்து மாறுபடும். இளம் வயதாக இருந்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்தால், தினசரி, 2,500 கலோரி தேவைப்படும். இதுவே, களப்பணி செய்தால், 2,500 - 3,000 ஆயிரம் கலோரி தேவைப்படலாம்.நாள் முழுவதும் வெயிலில் வேலை செய்தாலும், அதிகபட்சம், 3,500 கலோரி வேண்டியிருக்கும். ஆனால், நாம் இதைவிட அதிகமாக சாப்பிடுகிறோம்.பேட்டி லிவர், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இளம் வயதினர், பள்ளி செல்லும் குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருப்பது கவலைக்குரியது.

கொழுப்பு சத்து உடனடியாக கல்லீரலில் தங்கி விடுமா?



என்றைக்கோ ஒரு நாள், வழக்கத்தை விடவும் அதிகமாக சாப்பிட்டு, அதனால் எடை அதிகரித்து விட்டது என்று சொல்ல முடியாது. இது, மிக மிக மெதுவாக நடக்கும், உடல் உள் செயல்பாடு. தேவைக்கு அதிகமாக சாப்பிடும் கலோரி, சிறிது சிறிதாக கொழுப்பாக மாறி, கல்லீரலில் சேர்ந்து, திசுக்களை செயலிழக்கச் செய்வதற்கு, 15-20 ஆண்டுகள் ஆகலாம்.

திசு செயலிழப்பை எப்படி கண்டுபிடிப்பது?



ஸ்கேன் சோதனையில், பேட்டி லிவர் என்று இருந்தால், அடுத்து, 'பைப்ரோ ஸ்கேன்' பரிசோதனை செய்து, கல்லீரல் செல்களில் எந்த அளவு பாதிப்பு உள்ளது; எவ்வளவு செல்கள் நல்ல நிலையில் உள்ளன; எத்தனை சதவீதம் உள்ளது என்பது தெரிந்து விடும். இதில், கல்லீரலில் உள்ள திசுக்கள், எந்த அளவு செயலிழந்து இருக்கிறது என்பதை, முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். செல்கள் அழிந்த இடத்தில், மீண்டும் புதிய செல்கள் உருவாகாது. ஏற்கனவே உயிர்ப்புடன் இருக்கும் செல்கள் மட்டுமே, குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, புதிய செல்கள் தோன்றும்.

முழு உடல் பரிசோதனையில் தெரியுமா?



மது குடித்தால், கல்லீரல் செல்கள் செயலிழக்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், முறையற்ற உணவு பழக்கத்தால், எதிர்பாராமல் ஒரு நாள் வயிறு வீங்கி, கால்களில் நீர் கோர்த்து வரும்போது, சிரோசிஸ் வந்திருக்கும். 'இதற்கு முன் பரிசோதித்ததில், எல்லாமே நன்றாக இருப்பதாக சொன்னார்கள். இப்போது, 80 சதவீதம் செயலிழந்து விட்டது என்கிறீர்களே' என்பது தான், பொதுவான புகாராக உள்ளது.சிலர், 'முழு உடல் பரிசோதனை, ஆண்டுதோறும் செய்கிறேன். அதில் எல்லாமே, சரியாக இருந்ததே' என்பர்.

முழு உடல் பரிசோதனையில், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை அளவு இருக்கிறதா என்று பார்ப்பர். அதன்பின், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வர். அதில், பேட்டி லிவர் என்று வந்திருக்கும். இதை, டாக்டர்களே அலட்சியப்படுத்தி இருப்பர்.அரசு மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில், இதுபோல் வந்தால், உடனடியாக ஜீரண மண்டல மருத்துவர் அல்லது கல்லீரல் சிறப்பு மருத்துவரை பார்க்கச் சொல்லி அறிவுறுத்துவர்.

சர்க்கரை கோளாறுக்கென்றே இருக்கும் பிரத்யேக மையங்களிலும், இது போல் சொல்கின்றனர்.தேசிய அளவில் நடக்கும் கருத்தரங்குகளில், பேட்டி லிவர் இருந்தால், 'மைப்ரோ ஸ்கேன்' செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நீண்ட நாட்கள் சர்க்கரை கோளாறு இருந்தால், கால்கள், கண்கள், சிறுநீரகங்களின் செயல்பாடுகளை பரிசோதிப்பது அவசியம். அதோடு சேர்த்து, கல்லீரல் கொழுப்பையும், அனுபவம் பெற்ற சர்க்கரை நோய் நிபுணர்கள், தற்போது பரிசோதிக்கச் சொல்கின்றனர்.

உணவு பழக்கத்தில் மாற்றம் செய்தால், பேட்டி லிவர் சரியாகுமா?



உணவு பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி செய்தால், அதிகப்படியான கொழுப்பு கரைந்து சரியாகி விடும். இதற்கு, ஆறு மாதத்தில் இருந்து, ஓராண்டு வரை ஆகும்.

இதற்காக, உணவில் பத்தியம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நபருக்கு, 2,500 கலோரி தேவை எனில், தங்களுக்கு பிடித்த உணவை, குறிப்பிட்ட கலோரி மட்டும் சாப்பிட்டாலே போதும்.லட்டு மிகவும் பிடிக்கும் என்றால், ஒரு லட்டில் சராசரியாக, 300 கலோரி உள்ளது. லட்டு பிரியர்கள், ஒன்றுடன் நிறுத்த முடியாமல், இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டால், அதுவே சராசரியாக, 900 கலோரியாகி விடும். இரண்டு கிலோ கீரை சாப்பிட்டால் கூட, 100 கலோரியைத் தாண்டாது.

ஆனால், அவ்வளவு கீரையை, யாராலும் சாப்பிட முடியாது. பிடித்த உணவை மட்டும் சாப்பிட்டு, போதுமான கலோரி வந்து விட்டது என்று, வேறு எதையும் சாப்பிடாமல் இருப்பதும் இல்லை.சாப்பிடும் உணவு, சக்தியாக வீணாகி விட்டால் பிரச்னை இல்லை. அப்படி இல்லாமல், உடலிலேயே தங்கி விடுவது தான் பிரச்னையே.'ஜிம்'மிற்கு சென்று, தசைகளின் வலிமையை அதிகப்படுத்தும் உடற்பயிற்சி செய்தால், 50 கிலோ இருப்பவர் அதிகபட்சம், 60 கிலோவாக முடியும். ஓரளவிற்கு மேல், உடற்பயிற்சியால், உடல் வலிமையை ஏற்ற முடியாது.

ஆனால், நன்றாக சாப்பிட்டு விட்டு, உடல் உழைப்பே இல்லாமல், எளிதாக, 100 கிலோவை தொட முடியும்.உடல் பருமன் இல்லாமல் இருப்பவர்களில், 10 - 15 சதவீதம் பேருக்கே, கொழுப்பு கல்லீரல் இருக்கும். ஆனால், உடல் பருமன் உள்ளவர்களில், 95 சதவீதம் பேருக்கு, கொழுப்பு கல்லீரல் இருக்கும். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாத அனைவரும், ஸ்கேன் செய்து, கல்லீரலின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். சிலர், ஒல்லியாக இருப்பர். ஆனால், அவர்களின் ரத்தத்தில், கெட்ட கொழுப்பு அதிக அளவில் இருக்கும். இது, மரபியல் காரணங்களால் ஏற்படுவது. இப்படிப்பட்டவர்கள், கொழுப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க, உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.உணவு, உடற்பயிற்சி செய்தும் கொழுப்பு குறையாவிட்டால், அதற்கான மாத்திரையை, இரவு மட்டும் சாப்பிடலாம்.

டாக்டர் ஜாய் வர்கீஸ், இயக்குனர்,

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு,

குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை

044 - 4477 7000

joyvargese@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us