தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பேரணியால் ஏற்பட்ட முன்னேற்றம்!

பேரணியால் ஏற்பட்ட முன்னேற்றம்!

பேரணியால் ஏற்பட்ட முன்னேற்றம்!


PUBLISHED ON : மார் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீப ஆண்டுகளில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக, மாரத்தான் ஓட்டம், சைக்கிள் பேரணி என்று சமூக நல அமைப்புகள் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்நிகழ்வுகள் வழக்கமான பின், பெண்களிடம் நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மார்பகங்களில் லேசான மாற்றம் தெரிந்தாலோ அல்லது ரத்த சொந்தங்களுக்கு மார்பக புற்றுநோய் இருந்தாலோ, தாங்களும் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள், தொடர்ந்து நடக்க வேண்டும். அப்போது தான், பெண்கள் கவனமாக இருப்பர். 100 சதவீதம் எல்லா பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசால் மட்டும் தான் முடியும்.காரணம், மற்ற நாடுகளில், 45 வயதில் கண்டிப்பாக அனைத்து பெண்களுக்கும், மார்பக புற்றுநோயை கண்டறியும், 'மேமோகிராம்' பரிசோதனை செய்ய வேண்டும். 65 வயது வரை, குறிப்பிட்ட இடைவெளியில், தேவைக்கு ஏற்ப தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டும்.இப்போது தான், மருத்துவக் காப்பீட்டில் இதைச் சேர்க்க முடியும் என்ற விதி உள்ளது. நம் அரசும் இதுபோல் செய்ய வேண்டும். மாதத்தில், குறிப்பிட்ட நாட்களில், அனைவரும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தால், அந்த நாளில் வேலைக்கு செல்ல வேண்டும்.

ஊதியம் வராது என்பதால், பெரும்பாலும் வர மாட்டார்கள். இதையெல்லாம் மீறி தான், செயல்படுத்த வேண்டியிருக்கும்.'மாஸ் ஸ்கிரீனிங்' எனும், மொத்தமாக அனைவரையும் பரிசோதிக்கும் நடைமுறை வருவதற்கு, இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். தற்போதைக்கு, எங்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோமோ, அவர்களுக்கு பரிசோதிப்பது என்று செய்கிறோம். உதாரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் என்று, 30 சதவீத பெண்களை பரிசோதிக்க முடியும். இப்படி செய்யும் போது, இவர்களை சார்ந்தவர்களுக்கும், புற்றுநோய் பற்றிய புரிதல் வரும்.

மரபியல் காரணிகள்



ரத்த சொந்தத்தில் புற்றுநோய் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கும் பாதிப்பு வருவது, குறிப்பாக, மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது, வெறும், 3 சதவீதம் தான்.பெரும்பாலானோருக்கு புற்றுநோய் வருவது, மது, புகையிலை, அதிக கொழுப்பு சார்ந்த உணவுகள், துரித, பதப்படுத்திய உணவுகள் சாப்பிடுவது, சுய சுகாதாரம் இல்லாதது போன்ற, மோசமான பழக்கங்களால் தான். யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம்.

வெளிக் காரணிகள்



சூரிய ஒளி உடலில் படும் போது, 'மெலனோமா' என்ற நிறமி போதுமான அளவு இல்லாமல் இருந்தால், புற்றுநோய் வரலாம். இந்த அபாயம், நமக்குக் கிடையாது. காரணம், நம் தோல் அடர்த்தியான நிறம் கொண்டது.வெளிறிய தோல் இருந்தால், இது குறைவாக இருக்கும்; புற்றுநோய் வரும் அபயமும் அதிகம். நம்மைப் பொறுத்தவரை, கதிரியக்கம் போன்ற கதிர்கள் அதிக அளவு தோலில் படும் வாய்ப்பு இருந்தால் வரலாம்.புகையிலை, மது போன்ற வேதிப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், அதன் துாண்டுதல் காரணமாக, பல்வேறு புற்றுநோய் பாதிப்புகள் வரலாம். புகையிலை பொருட்களில், ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள் கலந்து உள்ளன. சிகரெட் பழக்கத்தால், நுரையீரல் புற்றுநோய் வரும் என்று தெரியும். தற்போது, மார்பக புற்றுநோய், சிறுநீரக பையில் புற்றுநோய் வரும் என்பதும் தெரிய வந்துள்ளது. வயிற்றிலும் வரலாம். அதேபோல், மதுவால், கல்லீரல் மட்டுமல்ல, கணையம், ஜீரண மண்டலத்திலும் வரும்.அதிகக் கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு, உடல் பருமனுடன் இருந்தால், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், பிராஸ்ட்ரேட் புற்றுநோய் வரலாம்.

வேலை செய்வது உடற்பயிற்சியா!



'நாள் முழுவதும் வேலை செய்கிறேன்; இது, உடலுக்கு பயிற்சி இல்லையா?' என்று கேட்கின்றனர். என்ன மாதிரியான வேலை என்பதைப் பொருத்தே, உடற்பயிற்சியா, இல்லையா என்று சொல்ல முடியும்.வயலில் உழுபவர் செய்வது உடற்பயிற்சி. டாக்டர் ஆபரேஷன் செய்வது, உடற்பயிற்சி கிடையாது. ஐ.டி., துறையில், நாள் ஒன்றுக்கு, 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கின்றனர். ஆனால், 'ஏசி'யில் உட்கார்ந்தே பணிபுரிகின்றனர். இதனால், முதுகு, கை, கழுத்து வலி போன்ற, உடல் கோளாறுகள் தான் வருகின்றன. வியர்வை வெளியேறுவதே இல்லை.வயலில் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்பவர்களுடன், நகரத்தில் இருப்பவர்களை ஒப்பிடவே முடியாது. பலருக்கு, குனிந்தால் எழுந்திருக்கவே முடியாது. நாம் செய்யும் வேலையை, உடலுழைப்பாக எடுத்துக் கொள்ளவே கூடாது.

உடலுழைப்பு எப்படி இருக்க வேண்டும்?



குறைந்தது ஒரு நாளில், 45 நிமிடங்கள், நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நன்கு வியர்த்து வழிய செய்ய வேண்டியது அவசியம்.

வைரஸ் தொற்று



'ஹீயுமன் பேப்பிலோனா' என்ற வைரஸ் தொற்றால், தொண்டை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தொற்றால், கல்லீரல் புற்றுநோய், எச்.ஐ.வி., தொற்று இருந்தால், சில வகை புற்றுநோய் பாதிப்பு வரலாம். முதலில் ஏற்படும் வைரஸ் தொற்று, இரண்டாம் நிலை தொற்றாக மாறும் போது, புற்றுநோய் பாதிப்பை உடலில் ஏற்படுத்தும்.

தடுப்பு ஊசி



எல்லா பெண் குழந்தைகளுக்கும், மாதவிடாய் ஆரம்பித்த பின், முதல் தடுப்பூசி போட வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் இரண்டாவதும், மூன்றாவது ஊசி, ஆறு மாதங்கள் கழித்தும், போட வேண்டும். இப்படிச் செய்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை, 75 சதவீதம் தடுக்க முடியும்.சுய சுகாதாரம் மேம்பட்டு இருப்பதால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், நகர்ப்புறங்களில் வெகுவாக குறைந்துள்ளது. கிராமப்புறங்களிலும், குறைந்து கொண்டே வருகிறது.கிராமம், நகரம் என்று, எந்த பாகுபாடும் இல்லாமல், மேற்கத்திய கலாசார தாக்கம் அதிகமாகி வருவதால், மார்பக புற்றுநோய் அதிகமாகியபடி இருக்கிறது. இது தவிர, கர்ப்பப்பை புற்றுநோய், பெருங்குடல், மலக்குடல், பிராஸ்ட்ரேட் புற்றுநோயும் அதிகரித்து வருகிறது.

பேராசிரியர் எஸ்.ராஜாசுந்தரம்,

புற்றுநோய் சிறப்பு மருத்துவர்,

சென்னை.

98400 76834/ 98410 14445


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us