PUBLISHED ON : ஜன 19, 2025

நம்மிடம் இருக்கும் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தில், மூளை பற்றி தெரிந்தது மிகவும் குறைவு.
மூளையின் அமைப்பு எப்படி உள்ளது? படிப்படியாக எப்படி உருவாகிறது என்பது தெரிந்தால் மட்டுமே மூளையின் செயல்பாடுகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
இதற்கு கருவில் மூளை உருவாவதில் துவங்கி, அதன் அமைப்பு, வளர்ச்சி தெரிய வேண்டும்.
ஒரு சிறிய அணுவில் இருந்து தான் கரு உருவாகிறது. அணு என்பது ஒரு குண்டூசியின் முனையை விட சிறியது; கண்ணுக்கே தெரியாது. 12 - 13 வாரங்களில் இந்த அணு மனித உருவ வடிவமாக மெதுவாக மாறத் துவங்கும். 24 - 26 வாரத்தில், ஓரளவிற்கு எல்லா உறுப்புகளும் உருவாகி இருக்கும்.
நவீன தொழில்நுட்பத்தில், முப்பரிமாணத்தில் ஸ்கேன் செய்து பார்த்தாலும், மூளையின் எல்லா பக்கமும் வெளிப்புறத்தில் தெளிவாக பார்க்கலாமே தவிர, உள்பக்கம் தெரியாது. மூளையை தனியே எடுத்து நீளவாக்கில் வெட்டினால் மட்டுமே பார்க்க முடியும்.
மூளை மையம்
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் என்ற ஐ.ஐ.டி., மெட்ராஸ் முன்னாள் மாணவர், மூளை ஆராய்ச்சிக்காக அவரின் மனைவி பெயரில் 2015ல் இந்த மையத்தை ஆரம்பித்தார். இதன் தலைவராக நான் பொறுப்பேற்றதும், அவசியமான தொழில்நுட்பத்தை உருவாக்கி, மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்றுயோசித்தோம்.
கருவில் துவங்கி, 100 வயது வரை மூளையின் வரைபடம் இருந்தால் தான், மூளையை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.
ஆராய்ச்சியை ஆரம்பித்த போதே எந்த அளவு இது கடினமான வேலை என்பது புரிந்தது. முதலில் நேரடியாக மனித மூளையை ஆராய முடியாது. முதலில் 1 செ.மீ., ஒரு சிறிய பூண்டு பல் அளவுள்ள சுண்டெலி மூளை, அடுத்து எலி, குரங்கு, அதன்பின் தான் மனித மூளையை ஆராய முடியும். தவிர, முழுமையான பொறியியல் தொழில்நுட்ப சவால் என்பதும் தெரிந்தது.
மூளை உருவாக துவங்கும் கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில், 12 - -24 வாரத்தில், மூளையை செல் அளவில் இதுவரை முழுமையாக யாரும் பார்த்ததில்லை.
இந்த அளவில் இருந்து மூளை வரைபடத்தை உருவாக்கினால் தான், அல்ட்ரா சவுண்டு செய்யும் போது, குறிப்பிட்ட பகுதி இயல்புக்கு மாறாக இருந்தால், மூளையின் உள்ளே இப்படித்தான் இருக்கும் என்று அறிய முடியும்.
இது போன்ற வரைபடம் இல்லாததால் தான், அல்சைமர் எனப்படும் மறதி நோய், டிஸ்லெக்சியா என்கிற கற்றல் குறைபாடு, ஆட்டிசம் உட்பட மூளை தொடர்புடைய பல வளர்ச்சி குறைபாடுகள், கோளாறுகள் ஏன் வருகின்றன என்பது இதுவரையிலும் புரியவில்லை.
ஆராய்ச்சிக்கு தேவையான மனித மூளையை, 'இன்ட்ரா யூட்ரைன் டெத்' எனப்படும் கர்ப்பத்தில் இறந்த கருவின் மூளையை எடுக்க வேண்டும்.
இதை சவீதா மருத்துவக் கல்லுாரியில் டாக்டர் குமுதாவுடன் இணைந்து சேகரித்து, மைனஸ் 80 டிகிரி குளிர்பதனத்தில் வைத்து பாதுகாத்தோம். ஒரு கருவின் மூளை, 2-3 ஆயிரம், இளம் வயதினர் மூளையை 10, 20 மைக்ரான் அளவில் 10,000 நுண்ணிய துண்டுகளாக வெட்டி கண்ணாடி ஸ்லைடில் வைத்து, மைக்ரோஸ்கோபில் முப்பரிமாண கோணத்தில் படம் பிடித்து, பாதுகாக்கிறோம்.
இதன்பின், 'அட்லஸ் அனடேஷன்' எனப்படும் மூளையின் எந்தப் பகுதியில் என்ன இருக்கிறது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
இதில், கர்ப்பத்தின் இரண்டு, மூன்று மாதங்களில், 14, 17, 21, 22, 24 வாரங்களில் எடுத்த ஐந்து விதமான மூளையின் வரை படத்தை டிரைலராக தற்போது வெளியிட்டு உள்ளோம்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் வேறுபட்ட வயதினரின் மூளை வரைபடங்களை வெளியிட உள்ளோம்.
அல்ட்ரா சவுண்டு கருவியில் 1,000 மில்லி மீட்டர் அளவில் மூளையை பார்க்க முடியும். எங்களின் வரைபடத்தில் 1,000த்தில் 1 மி.மீ., துல்லியமாக மூளையை பார்க்கலாம்.
ஒரு தலைமுடியின் அளவு 50 - -100 மைக்ரான். 13 வார கருவின் இரண்டரை செ.மீ., அளவுள்ள மூளையை ஒரு தலைமுடியின் அளவில் 100ல் ஒரு பங்கு துல்லியமாக வரைபடம் செய்துள்ளோம்.
கண் தானம் போன்று மூளை தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், இறப்புக்கு பின் பலரும் மூளை தானம் செய்ய முன்வருவர். இறந்த 12 மணி நேரத்திற்குள் தானம் செய்ய வேண்டும்.
தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, வேலுார் சி.எம்.சி., மெடி ஸ்கேன், சவீதா மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.
மூளையின் ஒவ்வொரு செல்லிலும் ஒரு வகையான கெமிக்கல், புரதம் உள்ளது. அதை எல்லாம் கண்டறிய முடியும்.
எந்த இடத்தில் எந்த கெமிக்கல், செல்கள் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துவதால் குறிப்பிட்ட மனநல பிரச்னை வருகிறது என்பதை அறியவும் எங்களின் ஆராய்ச்சி உதவும்.
'ஜர்னல் ஆப் கம்பேரிடிவ் நியூராலஜி' என்ற 130 ஆண்டுகள் பழமையான சர்வதேச மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது.
பேராசிரியர் மோகனசங்கர் சிவபிரகாசம்,
தலைவர்,
சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் சென்டர்,
ஐ.ஐ.டி., மெட்ராஸ்
044 - 2257 9785media.iitmadras.ac.in