தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை கோளாறால் குழந்தைகள் பாதிப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது

சர்க்கரை கோளாறால் குழந்தைகள் பாதிப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது

சர்க்கரை கோளாறால் குழந்தைகள் பாதிப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது


PUBLISHED ON : நவ 27, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்க்கரை கோளாறு குழந்தைகளை பாதிக்குமா?

சர்க்கரை கோளாறு என்பது நோயல்ல. கணையம் சுரக்கும் இன்சுலினை, நம் உடம்பு தேவையான அளவு பயன்படுத்தத் தவறுவது அல்லது போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் போவதே சர்க்கரை கோளாறு என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளிலும், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.சர்க்கரை கோளாறு, குழந்தைகளையும் பாதிக்கும். ஆண்டுதோறும், சர்க்கரை கோளாறால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. 10 - 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், சர்க்கரை கோளாறால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சர்க்கரை கோளாறின் வகைகள் என்ன?

டைப் - 1: கணையம், இன்சுலின் ஹார்மோனை அறவே சுரக்காத நிலை இது. இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது ஒன்று தான் இதற்கு தீர்வு. பிறந்த குழந்தைகளுக்கும், இந்தப் பிரச்னை வரலாம்.

டைப் - 2: கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்காதது. சிலருக்கு, இன்சுலின் சுரந்தாலும், அது ரத்தத்தில், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வேலையை சரிவர செய்யாது. வாய் வழியாக மருந்துகளை சாப்பிட்டு, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.வளர்ந்தவர்களிடம் இப்பிரச்னை அதிகம் உள்ளது. மரபியல் காரணிகளால் வரும் சர்க்கரை கோளாறை, டைப் - 1 அல்லது டைப் - 2 என்றும், பிறந்து ஆறு மாதங்களுக்குள் உள்ள சில குழந்தைகளுக்கு, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதை, டைப் - 1 சர்க்கரை கோளாறு என்றும், பல நேரங்களில் தவறாக முடிவு செய்கின்றனர்.

இன்னும் சிலருக்கு, வேறு பல காரணங்களால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பது தெரிந்தாலே, டைப் - 2 சர்க்கரை கோளாறு என்று முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு, குறைந்த அளவு மருந்து அல்லது பல நேரங்களில் மருந்து இல்லாமல், வாழ்க்கை முறை மாற்றத்திலேயே, ரத்த சர்க்கரை கட்டுக்குள் வந்து விடும்.எனவே, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தாலே, சர்க்கரை கோளாறு என்று முடிவு செய்யாமல், என்ன நிலையில் இருக்கிறது என்பதை உறுதி செய்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.

பொதுவான அறிகுறிகள் என்ன?

சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அளவிற்கு அதிகமான தாகம், உடல் எடை குறைவது உள்ளிட்டவை, பொதுவான அறிகுறிகள். இவற்றை கவனிக்காமல் விட்டால், 'டயாபடிக் கீடோஅசிடோசிஸ்' என்ற இன்சுலின் பற்றாக்குறையால், ரத்தத்தில், 'கீடோன்' எனப்படும், அமிலங்கள் அதிகமாக சேர்ந்து, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கு நிலை ஏற்படலாம்.

குழந்தைளுக்கான உணவு முறைகள்?

வளரும் பருவத்தில், ஊட்டச்சத்து மிக்க உணவை, குழந்தைகளுக்கு தர வேண்டும். அதே நேரம், வெள்ளை நிற உணவுகளான, ரொட்டி, பாஸ்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அத்துடன், சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரையில் செய்த உணவுகளான, பிஸ்கட், கேக், சாக்லெட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை, ரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும். பதிலாக, பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் சாப்பிட தர வேண்டும். இவற்றில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து அதிகம் உள்ளன.ஒவ்வோர் உணவிலும், முழு தானியங்கள், காய்கறிகள் இடம் பெற வேண்டும். சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால், ரத்த சர்க்கரை அளவு குறைந்து, 'ஹைப்போகிளைசீமியா' என்ற நிலை ஏற்படலாம்.

குழந்தைகளின் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவையா?

டைப் - 1 கோளாறு இருக்கும் குழந்தைகள், அடிக்கடி ரத்த சர்க்கரையின் அளவை, பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். திட்டமிட்டு, முறையான, தேவையின் அடிப்படையில் உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இன்சுலின் உட்பட, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும். சர்க்கரை கோளாறு, 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்து, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காமல் இருந்தால், ரத்த நாளங்களை அதிகமாக பாதிக்கும். இதனால், கண்கள், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் வரலாம்.

டாக்டர் வசந்தி திருவேங்கடம்

குழந்தைகள் சர்க்கரை கோளாறு மருத்துவ ஆலோசகர்,

காஞ்சி காமகோடி சைலட் டிரஸ்ட் மருத்துவமனை,

சென்னை

044- 4200 1800


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us