PUBLISHED ON : நவ 27, 2019

அல்சர் என்றால் என்ன?
வயிற்று புண்கள் 'அல்சர்' என அழைக்கப்படுகிறது. உணவுக்குழாய், இரைப்பை மற்றும் முன் சிறுகுடலின் முன் பகுதியில் இருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களை வயிற்று புண் என்கிறோம்.
அல்சர் வரக் காரணம் ?
அல்சர் தானாக வருவதில்லை. நம்மால்தான் வருகிறது. தவறான உணவு பழக்கம், துாக்கமின்மை, புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம், மன உளைச்சல், அதிக புளிப்பு மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவது, கடினமாக உழைப்பது, சாப்பிடாமல் இருத்தல், நேரம் தவறி சாப்பிடுதல், கவலைப்படுதல் காரணமாக அல்சர் வருகிறது.
அல்சர் அறிகுறி என்ன?
பசியின்மை, எதுக்களித்தல், வயிற்றெரிச்சல், செரிமானமின்மை, சாப்பிட பிடிக்காதது, வயிற்று வலி ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள். அறிகுறி தெரிந்தவுடன் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். எளிய 'எண்டாஸ்கோபி' சோதனை மூலம் அல்சரை உறுதி செய்யலாம்.
அல்சரின் உச்சகட்டம் என்ன?
குறிப்பாக 15 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் அல்சரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது நாகரீக வளர்ச்சி, பழக்க வழக்க மாற்றம், பாஸ்ட் புட் சாப்பிடுவதால் குழந்தைகளும் அல்சரால் பாதிக்கப்படுகின்றனர். பாஸ்ட் புட், பாக்கெட்களில் அடைத்து விற்கும் உணவுகளை சாப்பிட கொடுக்கக் கூடாது.
சாப்பிட்ட உடன் துாங்க கூடாது. குறைந்தது 2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். அல்சரின் உச்சகட்டத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவே சரி செய்ய முடியும்.
வராமல் தடுக்க வழிகள்?
உணவுப் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும். தினமும் சீரான உணவுகளை சாப்பிட வேண்டும். நேரத்திற்கு துாங்க வேண்டும். புகை பிடித்தல், மதுவை தவிர்க்க வேண்டும். அதிகமாக காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
காரமான உணவு, ஊறுகாய் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இறைச்சியை அளவாக சாப்பிட வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும். தயிர் சாப்பிடுவதால் அதிலுள்ள பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நோயை குணப்படுத்த உதவும். தொடர்ந்து ஒரு மாதம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். குணமானாலும் மீண்டும் அல்சர் வரும். அதனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம். இதை பின்பற்றினால் அல்சரை எளிதில் விரட்டலாம்.
டாக்டர் வீ.திருலோக சந்திரன்
பொது அறுவை சிகிச்சை நிபுணர்
திண்டுக்கல்.
98421 13392
