PUBLISHED ON : ஆக 13, 2023

'பேட்டி லிவர்' எனப்படும் கொழுப்பு கல்லீரலில் சேரும் பிரச்னையால் எட்டு வயது முதல் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பேட்டி லிவருக்கு காரணம் அதிக கலோரி உள்ள உணவுகள். அதிக உடல் பருமனால், எட்டு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பேட்டி லிவர் பிரச்னை வருகிறது. தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது. 10 குழந்தைகள் ஒரு இடத்தில் சேர்ந்து இருந்தாலும், ஆளுக்கு ஒரு மொபைல் போனில் விளையாடுகின்றனர்.
உடல் பருமனோடு இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் 'பைப்ரோ ஸ்கேன்' செய்து, பேட்டி லிவர் இருக்கிறதா என்று துவக்கத்திலேயே பார்த்து விட வேண்டும். காரணம், இது 100 சதவீதம் சரி செய்யக் கூடியது. உடல் பருமன் இருந்தால் ஒரு உறுப்பை மட்டும் பாதிக்காது. மொத்த உடலையும் பாதிக்கும். வயது, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை நிர்வகிப்பது அவசியம்.
எதிர்கால சந்ததியினர் அதிக அளவில் கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகப் போவதாக பல ஆய்வுகளில் கணிக்கப்படுகிறது. கண்ணுக்கு தெரியாமல் அதிகரித்து வரும் கல்லீரல் தொடர்பான நோய்கள், பொது சுகாதார பிரச்னையாக மாறி வருவதாக கூறப்படுகிறது.
'கிரேடு 1 பேட்டி லிவர்' எனப்படும் 10 சதவீதம் கொழுப்பு கல்லீரலில் இருந்தால், சிகிச்சை தேவையில்லை. 20 சதவீதத்திற்கு மேல் சென்றால், ஆபத்தான நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
காரணம், 'சிரோசிஸ்' எனப்படும் செயலிழப்பு ஏற்படும். அதன்பின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு.
மிகவும் பொறுமையாக செயல்படும் உறுப்பு கல்லீரல். அதனால் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் தன்னால் முடிந்தவரை இயங்கும். முடியாத பட்சத்தில் தான் அறிகுறிகள் வெளிப்படும்.
பைப்ரோ ஸ்கேன்
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்தால், பேட்டி லிவர் இருப்பது தெரியலாம். ஆனால், பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெரியாது. பைப்ரோ ஸ்கேன் செய்யும் போது, எந்தனை சதவீதம் கொழுப்பு இருக்கிறது என்பதை துல்லியமாக அறிய முடியும்.
கல்லீரல் மென்மையாக உள்ளதா, தழும்புகள் ஏற்பட்டு கடினமாக உள்ளதா என்று கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனையில் ஆரம்ப நிலை 'பேட்டி லிவர்' தெரியாது. தெரிகிறது என்றால், ஏற்கனவே செயலிழப்பு துவங்கி விட்டது என்று அர்த்தம்.
டாக்டர் கார்த்திக் மதிவாணன், கல்லீரல் சிறப்பு மருத்துவ ஆலோசகர், சென்னை

