PUBLISHED ON : ஜன 27, 2013

மாதக்கணக்கில், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு சத்தால் தொப்பை ஏற்படுகிறது. இதை, சில மணி நேரத்திலேயே கரைக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி போன்றவற்றால், சிறிது சிறிதாக தொப்பையை கரைப்பதே நல்லது.
ஒருவருக்கு, வயிற்றில் புண் இருந்தால் தான், அடிக்கடி வாய்ப்புண் வருமா? வாய் துர்நாற்றம் வீசுவதற்கு, வயிறு கோளாறு காரணமா?
ஒருவருக்கு, வாய்ப்புண் வருவதற்கு, விட்டமின், 'பி' பற்றாக்குறை தான் முக்கிய காரணம். வாய்ப்புண்ணுடன், வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, எடைக் குறைவுபோன்ற பிரச்னைகள் இருந்தால், அவருக்கு, வயிற்றில் புண் இருக்கலாம். வயிற்றில் புண் இருந்தால் தான், வாய்ப்புண் வரும் என்பது தவறு. பல், ஈறுகளில் ஏற்படும் தொற்றினால், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.
'சிசேரியன்' மூலம் குழந்தை பெறும் பெண்களில் சிலருக்கு, பிரசவத்திற்கு பின், வயிற்றுக்குள் நீர் சேர்ந்தது போல், வயிறு உப்பி, 'தொளதொள'வென இருக்க என்ன காரணம்?
'சிசேரியன்' பிரசவத்திற்கும், வயிறு உப்புவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில பெண்களுக்கு, இயற்கையாகவே, வயிற்றின் சுவர் பகுதி, பலவீனமாக இருக்கலாம். இக்குறை பெரும்பாலும், பிரசவத்திற்கு பின் வெளிப்படுவதால், இவ்வாறு எண்ண தோன்றுகிறது. பெண்கள், பிரசவத்திற்கு பிந்தைய உடற்பயிற்சிகளை முறையாக மேற்கொள்வதால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம். இதற்கென, அறுவை சிகிச்சைகளும் உள்ளன.
திருமணம் செய்த புதிதில், சில ஆண்களுக்கு, திடீரென தொப்பை விழுகிறதே?
அளவிற்கு அதிகமாக உணவு உட்கொண்டு, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பதாலோ அல்லது குறைவான உடற்பயிற்சி செய்வதாலோ தொப்பை விழுகிறது. திருமணம் ஆன புதிதில், உறவினர்கள் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதுடன், ருசியான வீட்டு சாப்பாடு கிடைப்பதால், ஆண்கள், வழக்கத்தை விட சற்று அதிகம் உண்பது இயல்பே. அதற்கேற்ப உடற்பயிற்சிகளை
மேற்கொண்டால், 'புதுமாப்பிள்ளை'கள் தொப்பை பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.
சில மணி நேரத்திலேயே, தொப்பையை கரைப்பதாக விளம்பரம் செய்யப்படும், நவீன உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தலாமா?
மாதக்கணக்கில், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு சத்தால் தொப்பை ஏற்படுகிறது. இதை, சில மணி நேரத்திலேயே கரைக்க வேண்டிய அவசியம் இல்லை. முறையான, உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி போன்றவற்றால், சிறிது சிறிதாக தொப்பையை கரைப்பதே நல்லது.
சிலருக்கு, ஒவ்வொரு முறை உணவு அருந்தியதும், மலம் செல்லும் பிரச்னை உள்ளதே?
பெருங்குடலில் ஏற்படும் தொற்றால், 'அமீபியாசிஸ்' எனும் நோய் உண்டாகிறது. இதுவே, மல பிரச்னைக்கு முக்கிய காரணம். மல பரிசோதனையில், இந்நோயை உறுதி செய்து, உரிய சிகிச்சை மேற்கொண்டால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
இரைப்பை புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன?
தமிழகத்தில், புற்றுநோய்களால் பாதிக்கப்படுவோரில், 10 முதல் 20 சதவீதம் பேருக்கு, இரைப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. புகைபிடிப்பது, புகையிலை பொருட்களை உட்கொள்வது, அளவிற்கு அதிகமாக வறுத்த உணவுகளை உண்பது, 'எச் - பைலோரி' எனும் பாக்டீரியா தொற்று ஆகியவற்றால், இரைப்பை புற்றுநோய் உண்டாகிறது.
டாக்டர்ஜீவன்குமார்,
குடல் மருத்துவ நிபுணர்,
அரசு புறநகர் மருத்துவமனை, அண்ணாநகர்,
சென்னை. 93810 10088