PUBLISHED ON : ஜன 20, 2013

உப்பு கலந்த சுடுநீர், நல்லெண்ணெய் ஆகியவற்றால் வாய் கொப்பளிப்பதால், பல் வலி, வாய்ப்புண்ணால் ஏற்படும் வலி குறையும். மேலும், சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், பல் ஈறுகளில், நுண்ணுயிரிகள் தங்குவது தவிர்க்கப்படுகிறது.
ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை கடித்து சாப்பிடும்போது, சிலருக்கு, பற்களில் ரத்தம் வர என்ன காரணம்?
பற்களை தாங்கி நிற்கும் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தால், ரத்தம் வருகிறது. பல் இடுக்குகளில் தங்கும் உணவுப் பொருட்கள், சுற்றுசூழல் மாசுக்கள் போன்றவற்றால், வாய்க்குள் தோன்றும் பாக்டீரியாக்களால் ஈறு வீக்கம் ஏற்படுகிறது. முறையாக பல் துலக்குவதே, ஈறுகளில் ரத்தம் வருவதை நிறுத்த சிறந்த வழி. இதை கண்டு கொள்ளாமல் விட்டால், நாளடைவில் பற்கள் விழும் அபாயம் உள்ளது.
சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகளை உட்கொள்ளும்போது, அவை பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இவற்றை, சிறு ஊசி, குச்சி மூலம் அகற்றுவது சரியா?
சீரான பல்வரிசை உள்ளவர்களுக்கும், இயற்கையாகவே, பற்களுக்கு இடையே சிறிய இடைவெளி இருக்கும். இதனால், சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகள், பல் இடுக்குகளில் தங்குவது இயல்பே. அவற்றை, கடைகளில் கிடைக்கும் பிரத்யேக மெல்லிழையை கொண்டு தான் அகற்ற வேண்டும். மாறாக, ஊசி, குச்சி போன்றவற்றின் மூலம் அகற்றினால், ஈறுகளில் தொற்று, காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
பல்வலி, வாய்ப்புண் ஏற்படும்போது, உப்புநீர், நல்லெண்ணெய் ஆகியவற்றால் வாய் கொப்பளிக்கலாமா?
உப்பு கலந்த சுடுநீர், நல்லெண்ணெய் ஆகியவற்றால் வாய் கொப்பளிப்பதால், பல் வலி, வாய்ப்புண்ணால் ஏற்படும் வலி குறையும். மேலும், சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், பல் ஈறுகளில், நுண்ணுயிரிகள் தங்குவது தவிர்க்கப்படுகிறது.பல்வலி, வாய்ப்புண் ஏற்படும்போது மட்டுமின்றி, தினமும், உப்பு கலந்த சுடுநீர், நல்லெண்ணெயால், வாய் கொப்பளிக்கலாம்.
பல் துலக்கப் பயன்படுத்தப்படும் பிரஷ்களை, எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்?
பொதுவாக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இக்கால வரையறை, ஒருவர், பல் துலக்கும் முறையை பொருத்து மாறுபடும்.முன்வரிசை பற்களை மேலும், கீழும்; பின் வரிசை பற்களை, கடிகார சுழற்சி முறையிலும்; பக்கவாட்டு பற்களை, முன்னும் பின்னும் என்ற முறையிலும், 3 முதல் 5 நிமிடம் வரை, பல் துலக்கினால் போதும். இம்முறையில் பல் துலக்குவோரின் பிரஷ், ஆறு மாதம் வரை தாங்கும்.
பால் பற்கள் விழுந்து, பற்கள் முளைக்கும்போது, சிலருக்கு, 'பொக்கை' ஏற்பட என்ன காரணம்?
மனிதர்களுக்கு, பிறந்ததில் இருந்து, 13 வயதிற்குள், பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்கின்றன. ஈறுகளின் கடினத்தன்மை காரணமாக, சிலருக்கு, முறையாக பற்கள் முளைக்காமல், 'பொக்கை' ஏற்படுகிறது. ஈறுகளின் கடினத்தன்மையை போக்க, கிராமப்புறங்களில் நெற்கதிர்களைக் கொண்டு, பல் முளைக்காத இடத்தில் தேய்க்கும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதில் தவறு இல்லை. எனினும், பல் மருத்துவரை அணுகினால், இயற்கையாக பல்லை வளர செய்தோ, செயற்கையாக பல்லை பொருத்தியோ, 'பொக்கை' பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
உறக்கத்தில் பல்லை கடிக்கும் பழக்கம் சிலருக்கு உள்ளது. இதனால் பற்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
சில சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள், உறக்கத்தில் பற்களை கடிப்பதற்கு, மனஅழுத்தம் காரணமாக இருக்கலாம். இதனால், பல்லில் உள்ள, 'எனாமல்' எனும் பகுதிப்பொருள் தேய்ந்து, பற்கள், மஞ்சள் நிறத்தை அடையும். குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடும்போது, பற்கூச்சம் உண்டாகும். நாளடைவில், தண்ணீர் சாப்பிட்டால் கூட, பல் கூசும்.பற்களுக்கு இடையே, 'நைட் கார்டு' எனும் சாதனத்தை பொருத்தி, உறங்குவதன் மூலம், இப்பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடலாம்.
வாய்ப் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றின் அறிகுறிகளை, வாயின் மூலம் அறிய முடியுமா?
கன்னம் மற்றும் உதட்டின் உட்பகுதி, நாக்கு ஆகிய இடங்களில், வெண்ணிற புள்ளிகள் தென்படுவோருக்கு, வாய்ப் புற்றுநோய் ஏற்படலாம். புகையிலை பழக்கம் உள்ளோருக்கு, இந்த அறிகுறி அதிகம் தென்படும்.அவ்வப்போது, உதடுகள் உலர்வது, ஈறு வீக்கம், பேசும்போது துர்நாற்றம் வீசுவது போன்றவை, நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள். பெரிய அளவில் வாய்ப்புண் இருந்தும், வலிக்காமல் இருந்தால், அது, எச்.ஐ.வி.,க்கான அறிகுறியாக இருக்கலாம்.
டாக்டர் ஜனனி,
வாய் நோய்குறி அறிதல் நிபுணர்.
98401 33904