PUBLISHED ON : ஜன 20, 2013
கே.மாதவன், மதுரை: இரண்டு வாரங்களுக்கு முன், சைக்கிளில் செல்லும் போது கீழே விழுந்து விட்டேன். இடது நெஞ்சில் அடிபட்டது. அப்போதிருந்து இடது மார்பில் வலி இருக்கிறது. இது இருதய வலியா?
கடுமையாக அடிபட்டால் அன்றி, கீழே விழுந்ததாலேயே இருதயம் பாதிக்கும் தன்மை குறைவு. உடனடியாக நெஞ்சகப்பகுதி 'எக்ஸ்ரே', எக்கோ கார்டியோகிராம், தேவைப்பட்டால் நெஞ்சு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் எலும்பு, தசை அல்லது நுரையீரலில் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம். இந்த முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில், சாதாரண வலி மாத்திரைகள் போதும்.
சையது அப்துல்லா, அலங்காநல்லூர்: என் வயது 69. நான்காண்டுகளாக ரத்த அழுத்தத்திற்கு தினம் ஒரு 'அம்லோடிபின்' மாத்திரை சாப்பிடுகிறேன். தொடர்ந்து சாப்பிடலாமா? இடது கால் பாதம் தரையில் படும் போது வலியும், மதமதப்பும் ஏற்படுகிறது. இது எதனால்?
ரத்தக்கொதிப்பிற்கு 'அம்லோடிபின்' மாத்திரை, சிறந்தது. தொடர்ந்து சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் வராது. இடது பாதத்தில் வலி மற்றும் மதமதப்பு ஏற்படுவதற்கு, சர்க்கரை நோய், நரம்புக் கோளாறு உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதற்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, நரம்பு, எலும்பு பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை முடிவிற்கேற்ப, சிகிச்சை முறை அமையும்.
கே. வித்யா, சிவகங்கை: என் வீட்டில் சமையலுக்கு தினமும் நல்லெண்ணெய் பயன்படுத்துகிறேன். இது நல்லதா? சமையலுக்கு எந்த வகை எண்ணெய் பயன்படுத்தலாம்?
சமையல் எண்ணெயை பொறுத்தவரை, தாளிப்பதற்கு சிறிதளவு உபயோகப்படுத்துவது தவறில்லை. எந்தவகை எண்ணெயாக இருந்தாலும், பொறிக்க பயன்படுத்துவது தவறு. வடை, அப்பளம், முறுக்கு, பூரி, சிப்ஸ் போன்ற பொறித்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெயில் ஆலிவ், சூரியகாந்தி, நல்லெண்ணெய், 'ரைஸ் பிரான்' பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை எண்ணெய் வகைகளை மாற்றுவது நல்லது. இந்தவாரம் நல்லெண்ணெய் உபயோகித்தால், அடுத்த வாரம் ஆலிவ் எண்ணெய்... இப்படி மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். பொறிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை, எக்காரணம் கொண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 45 கலோரி உள்ளது. நல்ல உடல்நலம் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 5 டீஸ்பூனும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்கள் 2 டீஸ்பூன் எண்ணெய் பயன்படுத்தலாம்.
டி.அரவிந்த், கம்பம்: ஆஞ்சியோகிராம் என்றால் என்ன? ஒருவருக்கு எத்தனை முறை செய்யலாம்?
ஆஞ்சியோகிராம் என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை முறை. கையில் அல்லது காலில் இருந்து இருதயத்திற்குள் குழாய் (கதீட்டர்) செலுத்தப்பட்டு, அதில் மருந்தை செலுத்தி பல்வேறு கோணங்களில் 'எக்ஸ்ரே' முறையில் இருதயம் படமாக்கப்படும். இந்த பரிசோதனையில் இருதய ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளதா, எந்த இடத்தில், எத்தனை சதவீதம் உள்ளதென கண்டறியலாம். இதன் முடிவுகளைப் பொறுத்து, மூன்றுவித சிகிச்சை முறை அமையும். மருந்து சிகிச்சை, பலூன் மற்றும் ஸ்டன்ட், பை பாஸ் அறுவை சிகிச்சை முறையில் எது ஒருவருக்கு தேவை என்பதை, இருதய டாக்டரே முடிவு செய்வார். ஒருமுறை ஆஞ்சியோகிராம் செய்தால், அதன் முடிவுகள் ஆறுமாதங்கள் வரை செல்லும். இது பரிசோதனை முடிவு என்பதால், ஆறுமாதங்களுக்கு ஒருமுறை, நோயாளிகளைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
- டாக்டர் விவேக்போஸ்,
மதுரை.