PUBLISHED ON : செப் 09, 2015

1. தைராய்டு சுரப்பி எவ்வாறு இருக்கும்?
தைராய்டு, பட்டாம்பூச்சி வடிவிலான ஒரு சுரப்பி. இது முன்புற கழுத்தின் கீழ் அமைந்துள்ளது. இது ஒன்றாக இணைந்துள்ள இரண்டு பகுதிகளால் ஆனது.
2. தைராய்டு சுரப்பியின் வேலை என்ன?
மூளையிலிருக்கும், 'பிட்யூட்டரி' சுரப்பியிலிருந்து சுரக்கும் டி.எஸ்.எச்., என்ற ஹார்மோன், தைராய்டு சுரப்பியிலிருந்து சுரக்கும் டி3, டி4 என்ற ஹார்மோன்கள் சுரப்பதற்கு உந்துதலாக இருக்கிறது.
3. தைராய்டு ஹார்மோன் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
நம் உடல் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துகிறது.
4. தைராய்டு ஹார்மோன் எவற்றை பாதிக்கிறது?
ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சுவாச வீதம், பசி, உணவருந்துதல், மலப்போக்கு, உடல்வெப்பம், மன செயல்பாடுகள், சரும நிறம், உடலுறவு இயக்கம் போன்றவற்றை பாதிக்கிறது.
5. தைராய்டு சுரப்பி, குறைந்த அளவிலான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்தால் என்ன ஆகும்?
அப்படிப்பட்ட நிலைக்கு, 'ஹைபோ தைராய்டிசம்' என்று பெயர். இது உடலில் ஏற்படும் ரசாயன எதிர்வினைகளின் சாதாரண சமநிலையை பாதிக்கும்.
6. ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் விடும், 'ஹைபோ தைராய்டிசத்தினால்' என்ன விளைவுகள் ஏற்படும்?
பொதுவாக ஆரம்ப கட்டத்தில், எந்தவித அறிகுறிகளும் தெரிவதில்லை. ஆனால் காலப்போக்கில், சிகிச்சை அளிக்கப்படாத, 'ஹைபோ தைராய்டிசம்' உடல் பருமன், மூட்டு வலி, மலட்டுத் தன்மை மற்றும் இதயநோய் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
7. 'ஹைபோ தைராய்டிசத்தின்' அறிகுறிகள் என்ன?
களைப்பாக உணர்தல், குறைவான இதயத் துடிப்பு, குறைவான நினைவாற்றல், பசி, மலச்சிக்கல், எடை அதிகரித்தல், எப்போதும் தூக்கம் வருவது போன்ற உணர்வு போன்றவை.
8. 'ஹைபோ தைராய்டிசம்' ஏற்படக் காரணம் என்ன?
ஆட்டோ இம்யூன் தைராய்டு பிரச்னை என்பது நோய் எதிர்ப்பு சக்தி தற்செயலாக தைராய்டு சுரப்பியை தாக்கி தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி செய்யும் திறனை பாதிக்கிறது. இதோடு பிறந்தது முதலே தைராய்டு சுரப்பி குறைபாட்டுடன் இருத்தல் போன்றவையே ஹைபோ தைராய்டிசம் ஏற்படக் காரணம்.
9. 'ஹைபோ தைராய்டிசத்தினால்' அதிகமாக பாதிக்கப்படக் கூடியவர்கள் யார்?
ஆண்களை விட பெண்களுக்கு, 'ஹைபோ தைராய்டிசம்' ஏற்பட, 10 மடங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். 50 வயதுக்கு பின், 'ஹைபோ தைராய்டிசம்' ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
10. மது மற்றும் புகைப்பிடித்தல் 'ஹைபோ தைராய்டிசத்தை' அதிகப்படுத்துமா?
கண்டிப்பாக. தைராய்டு நோய்க்கான வாய்ப்பை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பது மட்டுமல்லாமல், 'ஹைபோ தைராய்டிசத்தின்' பாதக விளைவையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, ரத்தக் குழாய்கள் மற்றும் இதயத்தின் மீதான விளைவுகளை அதிகரிக்கிறது.
எஸ்.ஜாகிர் உசைன்,
தைராய்டு அறுவை சிகிச்சை நிபுணர்.
இணை பேராசிரியர்,
ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை,
சென்னை.
போன்: 98410 76177

