PUBLISHED ON : மே 08, 2022

கடந்த பல ஆண்டுகளாக பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை கேன்சரும், மார்பக கேன்சரும் முதல் இரண்டு இடத்தில் மாறி மாறி இடம் பிடிக்கின்றன. சமீபகாலமாக, 30 - 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்களே, மார்பக கேன்சரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; அதிலும், பாதிப்பு வெளியில் தெரியும் போதே, மிக தீவிரமான நிலையில் இருக்கிறது.
இளம் பெண்களின் மார்பகங்கள் அடர்த்தியாக இருக்கும்; இதனால், சுய பரிசோதனை செய்யும் போது, மிகச் சிறிய கட்டிகள் தெரிவதில்லை. தோல் லேசாக தடித்து இருந்தால் சந்தேகம் வருவதும் இல்லை. 40 வயதிற்கு முன், 'மேமோகிராம்' செய்வதில்லை. இதனால், கட்டி வெளியில் தெரியும் போதே, மூன்று, நான்காம் நிலை கேன்சராக இருக்கிறது.
தாமதமான திருமணமும், குழந்தைப் பேறும், தாய்ப்பால் தராமல் இருப்பதும் பிரதான காரணியாக இருக்கலாம். முந்தைய தலைமுறை அதிக குழந்தைகளை பெற்றனர். குழந்தையின் 2 வயது வரையிலும் தாய்ப்பால் கொடுத்தனர்; அது, மார்பகங்களுக்கு பாதுகாப்பை தந்தது. வேதிப் பொருட்கள், ரசாயன உரங்கள் கலந்த, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவை மறைமுகமான காரணிகளாக இருக்கலாம் என்பது என் கருத்து.
மார்பக கேன்சர் வரும் குடும்ப பின்னணி இருப்பவர்கள், மரபணு பரிசோதனை செய்து, 'பிஆர்சிஏ1, பிஆர்சிஏ2' ஆகிய மரபணு இருந்தால், மார்பக கேன்சர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போன்று இரு மார்பகங்கள், கர்ப்பப்பை, கருக்குழாயை நீக்கும் அளவிற்கு கவனமாக இல்லாவிட்டாலும், தேவையான முன் கவனத்துடன் இருக்க உதவும்.
சிகிச்சையில் தாமதம் ஏன்?
குடும்ப வாழ்க்கையில் பிரச்னை வந்து விடுமோ என்ற பயம், கூச்சம் காரணமாக வெளியில் சொல்வதில்லை. 'குடும்ப பொறுப்புகளை முடித்து விட்டு பார்க்கலாம்' என்ற அலட்சியம் ஒரு பக்கம்; 'இந்த வயதில் எப்படி கேன்சர் வரும்' என்ற தவறான எண்ணம்; 'வலி தான் இல்லையே; ஒன்றும் இருக்காது' என்ற நம்பிக்கை.
இப்படி, ஏதாவது காரணம் வைத்து குறைந்தது ஆறு மாதங்கள் - ஒரு ஆண்டு வரை தாமதம் செய்கின்றனர். கட்டி தான் என்று தெரிந்த பின், எங்கே போவது என்ற குழப்பம், மார்பகத்தை முழுதாக எடுத்து விடுவரோ என்ற பயம்.
எல்லாருக்கும் மார்பகத்தை எடுக்க வேண்டியதில்லை. அதே போல, கைகளுக்கு கீழ் உள்ள நிணநீர் கட்டியில், 10 - 20 சதவீதம் மட்டுமே கேன்சர் கட்டி இருக்கும்; 80 சதவீதம் பரவி இருக்காது. அதனால், அவசியம் இல்லாமல் இக்கட்டிகளை எடுத்தால் கைகள் வீங்கி விடும்.
கேன்சர் என்றாலே இறந்து விடுவர் என்ற தவறான எண்ணம் இன்றளவும் உள்ளது. என் நோயாளிகள் பலர், முறையான சிகிச்சைக்கு பின், 20 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்கின்றனர். கேன்சர் என்று தெரிந்த மூன்றாவது நாளே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். பெண் மருத்துவரிடம் தான் ஆலோசனைக்கு செல்ல வேண்டும் என்றும் விரும்புகின்றனர். தாமதம் ஆவதற்கும், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்.
மகப்பேறு மருத்துவர்களுக்கு மார்பக கேன்சர் என்ற பாடமே கிடையாது. பல டாக்டர்கள் இது பற்றிய போதிய விபரம் தெரியாமல், 'எந்தப் பிரச்னையும் இல்லை' என்று அனுப்பி விடுகின்றனர். 'பிரார்த்தனை செய்தால் சரியாகும்; வேறு மருத்துவ முறைகளுக்கு செல்லலாம்' என்று பல காரணங்களால் தாமதமாக வருவதால் தான் நோய் முற்றி விடுகிறது. கேன்சர் என்று தெரிந்தால், தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
டாக்டர் ராஜா சுந்தரம்,
கேன்சர் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்,
குளோபல் மருத்துவமனை, சென்னை.
