PUBLISHED ON : மே 01, 2022

'நான்கில் ஒருவருக்கு கேட்கும் திறன் பாதிக்கும் நிலை விரைவில் வரும்' என, உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. மூன்றில் ஒருவர் அதிக சத்தத்தால் கேட்கும் திறனை இழந்துள்ளனர். இதை சுலபமாக தவிர்த்திருக்க முடியும்.
தொழிற்சாலைகளில், 85 டெசிபலுக்கு மேல் தொடர்ந்து சத்தத்தை கேட்கும் போது, காதுகளில் தீவிரமான பாதிப்பு ஏற்படும். 'காக்ளியா' எனப்படும் உள் காதில் மெல்லிய நரம்பு செல்களை சிதைத்து, செயலிழக்கச் செய்யும்.
தொடர்ந்து பல மணி நேரம் 'இயர் போன்' பயன்படுத்தினாலும் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும். மிக நுண்ணியதாக இருக்கும் இந்த நரம்பு செல்கள், ஒருமுறை சிதைந்தால், மீண்டும் புதுப்பிக்க முடியாது.
கேட்கும் திறனை இழப்பது, ஒரே நாளில் ஏற்படாது; மிக மெதுவாக நடக்கும். தொடர்ந்து அதிக ஒலியை கேட்பதால், சிறிது சிறிதாக கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறனில் ஏற்படும் சிறிய மாற்றத்தை கவனித்து, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றால், பிரச்னை பெரிதாகாமல் தடுக்க முடியும்.
எல்லா நேரமும் இயர் போனை மாட்டி, பாட்டு, சினிமா, அரட்டை என்று இருந்த 'டீன் - ஏஜ்' பெண்ணுக்கு, சரி செய்யவே முடியாத அளவிற்கு, நரம்பு செல்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. மேலும் பாதிப்பு வராமல் தடுக்க ஆலோசனை, தேவையான மருந்துகளை பரிந்துரைத்தேன்.
ஐ.டி.,யில் வேலை செய்யும் இளைஞர், எந்த சத்தமும் கேட்கவில்லை என்று வந்தார். சிகிச்சைக்கு பின், முழு நிவாரணம் பெற்றார். யாருக்கு எந்த அளவு பாதிப்பு வரும் என்று கணிக்கவே முடியாது.
ஆரம்ப கட்ட அறிகுறிகள்
காதுக்குள் மணி அடிப்பது போன்ற ஒலி, முணுமுணுக்கும் சத்தம், ஓடாத கிரைண்டர், மிக்சி போன்றவற்றின் சத்தம், சத்தமான சூழலில் பிறருடன் நேரில், போனில் பேசுவது கேட்காத நிலை போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
காதுகளை பாதுகாக்க
அதிக சத்தமாக பேசுவதை, கேட்பதை தவிர்ப்பது, அதிக ஒலி உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, அதிக சத்தமாக, பல மணி நேரம் இயர் போனில் கேட்பதை தவிர்க்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை, ஆண்டுக்கு ஒரு முறையும்,
அதன்பின் ஏழு மற்றும் பிளஸ் 1 வகுப்பிலும் பரிசோதனை அவசியம். 18 - 50 வயது வரை குறைந்தபட்சம், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 50 வயதிற்கு மேல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும் முழு காது பரிசோதனை கட்டாயம்.
வெளிப்புற காதுகளில் தொற்று உள்ளதா என்பதை அறிய, 'ஆட்டோஸ்கோப்' என்ற பரிசோதனையும், தேவைக்கு ஏற்ப மற்றவையும் செய்வோம்.
டாக்டர் எஸ்.கோவிந்தராஜ்,
காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ மருத்துவமனை, வானகரம், சென்னை.
044 - 2653 7777
