PUBLISHED ON : செப் 13, 2020

மழைக் காலம் ஆரம்பித்தாலே, கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும்; 'டெங்கு' பாதிப்பும் துவங்கி விடும். மழைக் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள், கொசு வழியாக பரவுவது, நீர் மூலம் பரவும் தொற்றுகள், காற்றில் பரவும் தொற்றுகள் என, மூன்று விதங்களில் பரவும்.
கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால், மற்ற தொற்று நோய்கள் குறித்து அதிக அளவில் கவனம் செலுத்தவில்லை. தற்போது, குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு துவங்கி உள்ளது.
பாதிப்பின் தீவிரம், அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கலாம். மழை பெய்தவுடன் நீர் தேங்கி, கொசு உற்பத்தி ஆனதும், கொசுவின் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, புளு காய்ச்சல் போன்ற வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்பு அதிக மாக இருக்கும். இதோடு, ஒட்டுண்ணியையும் கொசு பரப்புவதால், மலேரியா பாதிப்பும் வரலாம்.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் என்றதும், அச்ச உணர்வு அனைவருக்கும் வந்து விடுகிறது; இது தேவையில்லை. எல்லா பருவத்திலும் டெங்கு வைரஸ் பரவுகிறது என்றாலும், மழைக் காலத்தில் பரவல் மிகவும் அதிகமாக இருக்கும். தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிக அளவில் இருப்பதே, இதற்கு முக்கிய காரணம்.
டெங்கு வைரசால் பாதித்த ஒருவரை கொசு கடிக்கும் போது, கொசுவின் உடலில் அந்த வைரஸ் சென்று தங்கி விடும். அதே கொசு வேறு ஒருவரை கடித்தால், கொசுவில் இருக்கும் வைரஸ் அவரையும் பாதிக்கும்.
டெங்கு பாதிப்பு வந்தவர்களில், 75 சதவீதம் பேருக்கு பாதிப்பு வந்ததே தெரியாது; தானாகவே சரியாகி விடும். காய்ச்சல், தலைவலி, கண் வலி, உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் பாதித்த மீதி, 25 சதவீதம் பேரில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே, இந்த அறிகுறிகள் தீவிரமாகலாம்.
டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா மூன்றிலும் காய்ச்சல் தான் பொதுவான அறிகுறி.
கொசு கடித்ததில் இருந்து, ஒரு வாரத்திற்குள் அறிகுறிகள் தெரியும். டெஙகுவின் அறிகுறிகள் அனைத்தும், ஒருவருக்கே இருக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு ஒரு அறிகுறி வரலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறியும் சிலருக்கு ஏற்படலாம். டெங்கு பாதிப்பு இல்லாமல், சாதாரண வைரஸ் காய்ச்சலும், டெங்கு காய்ச்சல் போன்றே தான் சிலருக்கு இருக்கும்.
டெங்கு வைரஸ் காய்ச்சல் என்றால், இரண்டு நாளில் தானாகவே சரியாகி விடும்.
காய்ச்சல் இல்லாத நேரத்தில், குழந்தைகள் நன்றாக விளையாடுவர்; சாப்பிடுவர். வேறு எந்த உடல் தொந்தரவும் இருக்காது. இதற்கு மாறாக, ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கிறது.
சோர்வாக, விளையாடாமல் படுத்தபடியே இருப்பது, வாந்தி, வயிற்று வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் காய்ச்சலுடன் இருந்தால், டெங்கு இருக்கலாம். பரிசோதனை செய்து, உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
மோசமான விளைவுகள்
ஒட்டுண்ணியால் கொசு வழியே பரவும் மலேரியாவும், காய்ச்சல் அறிகுறியுடன் தான் தெரியும்; ஆனால், இதில் நிறைய மோசமான விளைவுகள் ஏற்படலாம். குளிர் காய்ச்சல் வந்து, உடல் நடுக்கம் ஏற்படும்.
அதேபோன்று, சிக்குன் குனியாவும் காய்ச்சலுடன் வந்தாலும் மூட்டுகள், தசைகளில் வலி அதிகம் இருக்கும். இந்த மூன்றிற்கும் தடுப்பு மருந்து கிடையாது என்பதால், வருமுன் காப்பதே சிறந்தது.
சுத்தமான நீரில் மட்டுமே கொசு முட்டையிடும் என்பதால், எந்த இடத்திலும், வீட்டிலும், வெளியிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது ஒன்று தான் வழி.
சமீப ஆண்டுகளில், வீட்டுத் தோட்டம் போடுவதில் ஆர்வம் அதிகரித்து, பெரும்பாலான வீடுகளில், குறைந்த பட்சம் தொட்டி களில், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் செடிகள் வளர்க்கின்றனர். இவற்றில் எல்லாம் நீர் தேங்காமல் இருக்கிறதா என்று, அவ்வப்போது பார்த்து சுத்தம் செய்து விட வேண்டும்.
டெங்கு சிகிச்சை
டெங்குவிற்கு என்று பிரத்யேக சிகிச்சை கிடையாது. 'சப்போர்டிவ் ட்ரீட்மென்ட்' என்று சொல்லப்படும், ஆதரவு சிகிச்சை மட்டுமே தருவோம். வைரஸ் தொற்றுக்கு, 'ஆன்டி வைரல்' மருந்துகள் கிடையாது. ரத்தக் கசிவு ஏற்பட்டால், தட்டணுக்கள் செலுத்துவோம். தோலில் இளஞ்சிவப்பு நிற தடிப்புகள், வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு என்று, பிரச்னையின் தீவிரத்திற்கு ஏற்ப, ஆதரவு சிகிச்சை இருக்கும்.
பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள், அதிகமாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவதற்கு காரணம், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக இல்லாமல், வளரும் நிலையில் இருப்பது தான். சளி, இருமலை உண்டாக்கும் பொதுவான புளு வைரசில், ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. அதனால் தான், 5 வயது வரையிலும், அடிக்கடி சளி பிடிக்கிறது.
குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது, வேளைக்கு பசித்து உணவு சாப்பிடுகிறது, ஓடியாடி விளையாடுகிறது என்றால், அடிக்கடி இது போல சளி பிடிப்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
மலேரியா
மலேரியா இருப்பது உறுதி யானால், அதற்கு பிரத்யேக சிகிச்சை உள்ளது. நடுக்கத்துடன் காய்ச்சல், விட்டு விட்டு காய்ச்சல் வருவது, காய்ச்சல் வந்த, அடுத்த மூன்று - நான்கு மணி நேரத்தில் சரியாகி விடும்; அடுத்த நாள் எதுவும் இருக்காது. சிலருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருக்கலாம். இது, மலேரியாவின் அறிகுறிகள்.
சிக்குன் குனியா
டெங்குவைப் போலவே ஆதரவு சிகிச்சை மட்டுமே இதற்கும் தர முடியும். தாங்க முடியாத மூட்டு வலி, காய்ச்சல் இதன் அறிகுறிகள். எவ்வளவு தீவிர வலி இருந்தாலும், மூன்று மாதங்களில் சரியாகி விடும்.
புளு காய்ச்சல்
காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன், புளு காய்ச்சலை உருவாக்கும் வைரசில், பல வகைகள் உள்ளன. இதில், 'ஹெச் 1, என் 1' என்ற வைரஸ், பன்றிக் காய்ச்சலை உருவாக்கக் கூடியது. 'ஹெச் 3, என் 2' இது இன்னொரு வகை புளு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ். புளு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ், சுவாச மண்டலத்தின் கீழ்ப் பகுதியை பாதிக்கும் போது, 'இன்புளுசென்சியா நிமோனியா' பாதிப்பு வரலாம்; இதுவும் ஆபத்தானது.
புளு பாதிப்பை உண்டாக்கும் வைரசில், ஒவ்வொரு ஆண்டும் மரபணு மாற்றம் ஏற்படுவதால், ஆண்டுதோறும் மழைக் காலம் துவங்குவதற்கு முன், ஆகஸ்ட் மாதத்தில் புளு தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.
செய்ய வேண்டியவை
டெங்கு பாதிப்பு இருந்தால், திரவ உணவுகளை அதிகமாக குடிக்க வேண்டும். வழக்கமாக இருக்கும் அறிகுறிகளை விடவும் தீவிரமாக காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, உடல் வலி, ரத்தக் கசிவு போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
ஈறுகளில் ரத்தம், சிறுநீர், மலத்தில் ரத்தம் வருவது, நினைவு இழப்பது, சுவாசிப்பதில் சிரமம் போன்றவையும், டெங்குவின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக, டாக்டரின் உதவி பெற வேண்டியது அவசியம்.
இஞ்சி, பூண்டு, மஞ்சள், ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், நட்ஸ் போன்ற எதிர்ப்பு சக்தியை தரக் கூடிய உணவுகளை, குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும்.
வளரும் குழந்தைகளுக்கு எல்லா சத்துக்களும் தேவை என்பதால், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்காமல், அளவோடு தர வேண்டும்.
டாக்டர் எஸ்.ஷோபனா,
குழந்தைகள் நல மருத்துவர்,
மகளிர் மருத்துவ மையம், கோவை.

