தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/கண்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்!

கண்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்!

கண்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்!


PUBLISHED ON : நவ 28, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் வேகமாக பரவிவரும் நோய்களில் ஒன்று, நீரிழிவு நோய். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா இருக்கும். 1995ம் ஆண்டு, 1.8 கோடியாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2030ல், எட்டு கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு தெரியுமா?

* வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, நகர்புறத்தில் 28 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 5 சதவீதமாகவும் உள்ளது. இவர்களில் 18 பேர், நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

* நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு, தங்கள் நோய் பற்றி தெரிந்திருப்பதில்லை.

* நீரிழிவு நோயாளிகளில் மிகவும் குறைந்தவர்களே, கண் பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

* கண் மருத்துவர்கள் அனைவரும், நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சையளிக்கும் பயிற்சி பெற்றவர் அல்லர்.

* ஒரு நீரிழிவு நோயாளிக்கு பார்வையிழப்பு ஏற்படும் அபாயம், நீரிழிவு நோய் அற்றவரை விட 25 மடங்கு அதிகம்.

* நீரிழிவு நோயானது, கண் பார்வையிழப்பு, இருதய கோளாறு, சிறுநீரக கோளாறு, நரம்புகள் பாதிப்பு மற்றும் உடல் ஊனம் விளைவிக்கும் அபாயமுடையது.

* சமச்சீரான உணவு, தேவையான உடற்பயிற்சி மற்றும் தகுந்த சிகிச்சை மூலம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவு நோயால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்:

பல பொருட்களிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள், விழியின் முற்பகுதியான, 'கார்னியா' எனப்படும், விழி வெண்படலம் மற்றும் குவிய தூரத்தை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்த, 'கிரிஸ்டலைன் லென்ஸ்' எனப்படும் விழி ஆடி ஆகியவற்றின் மூலம், விழித்திரையில் குவிக்கப்படுகிறது. விழித்திரையானது ஒளிச்சக்தியை மின் சக்தியாக மாற்றி, உணர்வலைகளை பார்வை நரம்பின் மூலம் மூளைக்கு செலுத்துகிறது. எனவே, விழித்திரையின்றி நம் பார்வை சாத்தியமாகாது. கண்புரை, கண்ணீர் அழுத்த நோய் மற்றும் விழித்திரையில் பாதிப்பு ஆகியவற்றை, நீரிழிவு நோய் தோற்றுவிக்கும். நீரிழிவு நோய் உள்ள அனைவருக்குமே, விழித்திரை பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு நீரிழிவு நோயால், விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ரத்த நாளங்களின் மூலம் தேவையான ஊட்டச்சத்தை விழித்திரை பெறுகிறது. இந்த ரத்த நாளங்கள், நீரிழிவு நோயால் பலவீனமடைகின்றன. பலவீனமடைந்த ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு, விழித்திரையையும், அதன் மூலம் பார்வைத்திறனையும் பாதிக்கும். நமது விழித்திரையின் குழிவான மையப்பகுதி, 'மேக்குலா' எனப்படும். இப்பகுதியில் ஏற்படும் ரத்தக்கசிவு, முழுமையான பார்வை இழப்பை ஏற்படுத்தும். இவ்வாறு விழித்திரையில் ஏற்படும் ரத்தக்கசிவால், விழித்திரையின் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான ஊட்டச்சத்து சென்றடையாது. எனவே, விழித்திரையானது தாமாகவே சில புதிய ரத்த நாளங்களை உருவாக்கும். இப்புதிய ரத்த நாளங்கள், இயற்கையாகவே உள்ள ரத்த நாளங்களை விட, மிகவும் பலவீனமானதாக இருக்கும். இவை, மேன்மேலும் அதிகப்படியான ரத்த கசிவிற்கு வழிவகுக்கும். இந்நிலை, 'ப்ரோலிபரேடிவ் டயபடிக் ரெட்டி னோபதி' என்றழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்:

* இந்நோய் ஆரம்ப அறிகுறிகள் ஏதுமற்றது. விழித்திரை அதிகளவில் பாதிப்படையும் வரை, பார்வைத்திறனில் மாற்றங்கள் தெரியாது.

* ரத்த நாளங்களில் ரத்தக்கசிவு ஏற்பட தொடங்கும் போது, கண்முன்னே கரும்புள்ளிகள் மிதப்பது போன்று தோன்றலாம்.

* விழித்திரையின் மையப்பகுதியான, 'மேக்குலா' பாதிப்படையும் போதே, பார்வைத்திறனில் பெருமளவு மாற்றங்கள் தெரியும். எனவே, நீரிழிவு நோயாளிகள் சீரான கால இடைவெளிகளில், கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது இன்றியமையாதது.

விழித்திரை பாதிப்பை கண்டறியும் முறைகள்:

பார்வை திறன் பரிசோதனை

* முழுமையான விழித்திரை பரிசோதனை: குறிப்பிட்ட மருந்துகளின் மூலம் கருவிழிப்படலம் பெரிதாக்கப்பட்டு, 'ஆப்தல்மாஸ்கோப்' எனப்படும் கருவியின் மூலம் விழித்திரையின் முழுப்பகுதியும் பரிசோதனை செய்யப்படும்.

டூ ஆஞ்சியோகிராபி: ரத்தக்கசிவை முழுமையாக கண்டறிய, 'ப்ளோரசென்ட் ஆஞ்சியோகிராபி' எனப்படும் பரிசோதனை செய்யப்படும். இதில், 'ப்ளோரசென்ட்' எனப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத சாயப்பொருள், ரத்த நாளத்தில் செலுத்தப்படும். இப்பொருள் ரத்தத்தில் செலுத்தப்பட்டு, பல்வேறு கால இடைவெளிகளில் விழித்திரையின் புகைப்படம் எடுக்கப்படும். இப்படங்களிலிருந்து மிகச்சிறிய அளவு, ரத்தக்கசிவையும் தெளிவாக கண்டறிய முடியும்.

விழித்திரை பாதிப்பிற்கான மருத்துவ சிகிச்சை முறைகள்:

இதற்கு, இருவகையான மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று: லேசர் சிகிச்சை; மற்றொன்று: அறுவை சிகிச்சை முறை. இவ்விரு முறைகளுமே, பார்வை இழப்பை தடுக்கும் ஆற்றல் பெற்றவை.

லேசர் சிகிச்சை:

லேசர் சிகிச்சை முறை, புறநோயாளிகள் பிரிவிலேயே செய்யப்படும் எளிய சிகிச்சை முறை. கண்களின் கருவிழிப்படலம் பெரிதாக்கப்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படும் இடங்களில், லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யப்படும். 'மேக்குலா' பகுதியில் ஏற்படும் பாதிப்பு மற்றும் 'ப்ரோலிபரேடிவ் டயபடிக் ரெடினோபதி' ஆகிய இரு நிலைகளுக்குமே லேசர் சிகிச்சை ஏற்றது.

லேசர் ஒளிக்கற்றையானது, ரத்தக்கசிவை சரி செய்வதற்கு மட்டுமல்லாமல், புதிதாக தோன்றும் பலவீனமான ரத்த நாளங்களை அழிப்பதற்கு பயன்படுத்தப்படும். மேற்கொண்டு ஏற்படும் பார்வை இழப்பையும் இது தடுக்கிறது.

 'விட்ரியஸ்' அறுவை சிகிச்சை:

சில நோயாளிகளுக்கு ஏற்கனவே விழியின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக்கசிவை நீக்க, 'விட்ரெக்டமி' எனப்படும் அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படும். இதுவும், பார்வையிழப்பு அதிகமாகாமல் தடுக்க உதவும்.

தடுப்பு முறைகள்:

நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பை, முழுமையாக தடுக்க முடியாது. எனினும், பின்வருவனவற்றை கடைபிடிப்பதன் மூலம் அதற்கான ஆபத்தை கணிசமாக குறைக்க முடியும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல், புகைப்பிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு பழக்கம். 30 வயதிற்குள் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டிற்குள் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 30 வயதிற்கு மேல் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால், கண் மருத்துவரை அணுக வேண்டும். நீரிழிவு நோய் இருப்பின், கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதத்திற்குள் கண் பரிசோதனை செய்தல் அவசியம்.

-சங்கர நேத்ராலயா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us