PUBLISHED ON : நவ 28, 2010

அ.மல்லிகா, சென்னை: குடலிறக்கம் எதனால் ஏற்படுகிறது? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
குடலிறக்கத்தில் பல வகை உண்டு. தொப்புள் அல்லது அதற்கு கீழ் பகுதி, கீழிறங்குவது ஒரு வகை. வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதைத் தொடர்ந்து, குடலிறக்கம் ஏற்படுவது மற்றொரு வகை. ஆண்களுக்கு தொடை இடுக்கில், குடல் இறங்கி விடும். அடி வயிற்றுத் தோல் மென்மையாக இருந்தால், குடல், அந்த தோலில் மேல் அமர்ந்து விடும். பிறப்பிலேயே உறுதியற்ற தோல் இருந்தால், இந்நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே தீர்வு. ஏற்கனவே வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், அடி வயிற்றில் பரவலான இடம் கொண்டவர்கள், முறையான உடற்பயிற்சி செய்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தால், குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி: ரத்த கொதிப்பு நோய் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? கண்டறியும் பரிசோதனைகள், குணப்படுத்தும் நவீன சிகிச்சை முறைகள் மற்றும் நோய் வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
'பிளட் பிரஷர்' என்பதை தான், ஆ.க., என அழைக்கிறோம். 140/90 என்ற அளவில் தான் இது இருக்க வேண்டும். இதற்கு மீறினால், அதிக ரத்த அழுத்தம் இருப்பதாக பொருள். பெரும்பாலான இளைஞர்களுக்கு, ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. பல ஆண்டுகளில் மெல்ல மெல்ல உருவாகிறது இது. சில நேரங்களில், உடலில் தோன்றும் கட்டிகள், ரத்த நாளங்களில் குறைபாடு, சிறுநீரக நோய், சில மருந்துகள் சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பெற்றோரில் யாருக்காவது ரத்த அழுத்தம் இருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கும் ஏற்படுகிறது. அதிக உடல் எடையுடன் இருப்பவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. புகை பிடிப்பவர்கள், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமாக குடிப்பவர்களின் இருதயம் பழுதடைவதால், அவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளவர்கள், புகை பிடிப்பதையும், குடிப்பதையும் நிறுத்த வேண்டும். யோகா, தியானம் ஆகியவற்றுடன் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. உணவில் உப்பை குறைப்பது நல்லது.
க.விஷ்வப்ரியா, வத்தலக்குண்டு: காதுகளில் அடிக்கடி அரிப்பு உண்டாகிறது? சுத்தம் செய்தால் 'பங்கஸ்' வருகிறது. இது எதனால், என்ன செய்ய வேண்டும்?
காதிலிருந்து பூஞ்சை (பங்கஸ்) வெளிவருகிறதா அல்லது வேறு ஏதேனும் கசிவு ஏற்படுகிறதா என்பது எனக்கு தெரியவில்லை. பூஞ்சை உருவானால், காதில் வலி உண்டாகும். ஒவ்வாமை அல்லது 'செபோரிக் டெர்மாடைட்டிஸ்' என்றழைக்கப்படும் தோல் நோய் ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும். காது, மூக்கு தொண்டை நிபுணரை அணுகி, உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். கடைகளில் விற்கப்படும் காது சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தினால், உங்கள் உபாதை அதிகரிக்குமே தவிர, குறையாது. காதை சுத்தம் செய்ய, பஞ்சு மொட்டுக் குச்சி, காது குரும்பி ஆகியவற்றை பயன்படுத்தினால், காதின் உட்புறம் தோல் சிதைந்து வலியும், அரிப்பும் மேலும் அதிகரிக்கும்.
- டாக்டர் கீதா மத்தாய் குழந்தை நல மருத்துவர், வேலூர்.
