PUBLISHED ON : செப் 02, 2015
கே.கார்த்திக், மேடவாக்கம், சென்னை: நான் எப்போதும் சோர்வாகவே உள்ளேன். இதனால், உடலில் நச்சுக்கள் அதிகம் இருக்கும் என்கின்றனர். நச்சுக்கள் இருப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்ன?
உடலில் தேங்கும் சில, 'டாக்ஸின்'கள் மனநிலையை மாற்றி, ஒருவித மந்த நிலையுடனும், குழப்பமான மனதுடனும் இருக்க வைக்கும். கெட்ட கொழுப்புகள் அதிகம் சேர்ந்தால், உடல் எடை உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரும்; தூக்கமின்மையால் அவதிப்படக் கூடும். அதுவும் இரவு நேரத்தில் தூக்கம் வரும்; ஆனால் வராது என்று இருக்கும். உடல் துர்நாற்றம், வாய் துர்நாற்றம், கடுமையான துர்நாற்றத்துடன் மலம் மற்றும் சிறுநீர் வெளியேறுவது போன்றவை கூட, 'டாக்ஸின்'கள் உடலில் அதிகம் இருப்பதற்கான அறிகுறியே. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், செரிமான மண்டலம், 'டாக்ஸின்'களால் அதிக அளவில் நிரம்பியுள்ளது என்று அர்த்தம்.
ஐ.ராஜேந்திரன், பொது மருத்துவர், சென்னை.
வி.தினேஷ், பெருங்குடி, சென்னை: நான் 'நிக்கோடின் சூயிங் கம்' மெல்லுவேன். அதற்கு அடிமை என்று கூட சொல்லலாம். இதனால் வரும் உடல் கோளாறுகள் என்ன?
'நிக்கோடின் சூயிங் கம்' பயன்படுத்திய பலர், பார்வை பிரச்னையை சந்தித்தது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது, புகை பிடிப்பதற்கு சமம். பார்வையில் பிரச்னை ஆரம்பித்தால், 'நிக்கோடின் சூயிங் கம்'களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சிலர் முடி உதிரும் பிரச்னையை சந்திக்க நேரிடும். ஏனெனில், 'நிக்கோடின்' மயிர்க்கால்களை பாதித்து, அதனால் முடி உதிர்வதை அதிகரிக்கும். அதிகளவில், 'நிக்கோடின் சூயிங் கம்' பயன்படுத்துவோர், எப்போதும் ஒருவித பதற்றத்தை சந்திப்பர். 'நிக்கோடின்' உடலின் மைய நரம்பு மண்டலத்தை பாதிப்பது தான், அதற்கு காரணம்.
க.அருண், நரம்பியல் நிபுணர், சென்னை.
ச.மாலதி, மாங்காடு, சென்னை: 'ஆட்டிசத்தின்' ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன? 'ஆட்டிசம்' குழந்தைக்கு உள்ளது என்பது, எந்த வயதில் தெரியவரும்?
கண்களை நேரடியாக பார்க்க மாட்டார்கள்; அவர்களை பார்த்து சிரிக்கும் போது பதிலுக்கு சிரிக்க மாட்டார்கள்; பொருட்களை சரியாக பின்பற்ற மாட்டார்கள்; கவனத்தை ஈர்க்க சத்தம் எழுப்ப மாட்டார்கள்; கொஞ்சும் போது எந்தவித உணர்வையும் வெளிக்காட்ட மாட்டார்கள்; மழலையில் பேச மாட்டார்கள்; தங்களை தூக்கி கொள்ளும்படி உங்களிடம் வர மாட்டார்கள். இயல்பான குழந்தையின் குணநலன்களிலிருந்து வேறுபட்டு இருப்பார்கள். ஆட்டிசம் குழந்தைக்கு இருக்கிறது என்பது ஒரு வயது தாண்டியதும் தெரிய வரும்.
ஆ.இந்திராணி, குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.
