PUBLISHED ON : ஜூலை 24, 2021

அதிகப்படியான உடல் எடை என்பது, நம் உடல் சேர்த்து வைக்கும் கொழுப்பு. இது திசுக்களில் படர்கிறது.
குழந்தைகள், வளர் இளம் பருவத்தினரிடம் உடல் எடை அதிகரிப்பது பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த வயதில் ஒல்லியாக இருப்பதே நாகரிகம், அழகு என்ற மனநிலை அவர்களிடம் உள்ளது.
'சிக்ஸ் பேக், எய்ட் பேக்' என்று தசைகளை வலிமைப்படுத்துவதில் ஆர்வம் உள்ள இளம் வயதினர், கொழுப்பைக் குறைத்து, 'பிட்'டாக இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. இவர்களும் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையுடன் இல்லாமல், அதிக எடையுடன் இருக்கின்றனர்.
அதிகப்படியான கலோரி தவிர, உடல் சக்தியில் சமச்சீரற்ற தன்மை, மரபியல் காரணங்கள், தைராய்டு கோளாறு, மதுப் பழக்கம், மனநலப் பிரச்னைகள், உடற்பயிற்சி இல்லாதது, உணவுப் பழக்கம், துாக்கமின்மை, பசியைக் கட்டுப்படுத்துவது ஆகியவை உடல் பருமனுக்கான காரணிகள்.
கொழுப்பு செல்கள், இன்சுலின் உட்பட அனைத்து ஹார்மோன் சுரப்பையும்தேவையைத் தாண்டி அதிக அளவில் சுரக்கச் செய்யும்; செல் வளர்ச்சி காரணிகளையும் அதிகப்படுத்தும். இதனால் இரண்டு, நான்கு, எட்டு என்று இரண்டின் மடங்காக பிரியும் இயல்பான செல் பிரிதலை துாண்டி, பன்மடங்காக பிரியச் செய்யும். அடிக்கடி நிகழும் இம்மாற்றம், கேன்சர் செல்கள் உருவாக வழி செய்கிறது.
அதிக உடல் பருமன், மார்பகம், கணையம், சிறுநீரகம், கருப்பை, கல்லீரல், மேல் வயிறு, மூளையில் கட்டி, தைராய்டு சுரப்பி, பித்தப் பை, கருக் குழாய், என்று 13 வகையான கேன்சரை உருவாக்குகிறது.
டாக்டர் என்.தினகரன்,
ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,
முன்னாள் பேராசிரியர்,
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை,
சென்னை.
98411 51599
