PUBLISHED ON : அக் 21, 2012

*ராமசாமி, சிவகங்கை: என் கீழ்த் தாடையின் கடைசி பல்லில், தொடர்ந்து வலி உள்ளது. கன்னத்தில் அவ்வப்போது வீக்கம் ஏற்படுகிறது. அந்தப் பல், பாதி முளைத்த நிலையில் உள்ளது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
தாடையின் மூன்றாவது கடவாய் பற்கள், 'ஞான பற்கள்' எனப்படும். இவை பொதுவாக, 16 - 25 வயதுக்குள் முளைக்கும். இப்பற்கள், முழுவதுமாக முளைப்பதற்கு, தாடையில் இடம் இல்லாத நிலையில், இப்பற்களால் பலவித பிரச்னைகள் உருவாகும். பல், ஈறு மற்றும் தாடை முழுவதும், வலி உண்டாகும். கன்னத்தில் வீக்கம் வரக்கூடும்.
சிலருக்கு இப்பற்களால், தலைவலி, காது வலி வர வாய்ப்புள்ளது. இது மட்டுமின்றி, இப்பற்கள், அதன் முன்னால் உள்ள பற்களையும் சேதப்படுத்தும். இப்பற்கள், கடிப்பதற்கோ, உண்பதற்கோ உதவாது.
அதனால், பிரச்னை வரும் பட்சத்தில், இப்பற்களை அகற்றுவதே நல்லது. வலி உள்ள பல்லை எக்ஸ்-ரே எடுத்து, அதன் அமைப்புக்கு ஏற்றவாறு, சிறிய அறுவை சிகிச்சை மூலம், அந்தப் பல்லை அகற்ற வேண்டும்.
* அருண், கோவை: என் குழந்தைக்கு, மூன்று வயதாகிறது. அவன் முன் பற்களில், சொத்தை உள்ளது. சில பற்கள் உடைந்துள்ளன. இதற்கு ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டுமா அல்லது பல் விழும் வரை, காத்திருக்க வேண்டுமா?
உங்கள் குழந்தைக்கு வந்துள்ளது, சிறு குழந்தைகளுக்கு வரும், ஒருவகை பல் சொத்தை. இவை பெருமளவு, முன் பற்களை பாதிக்கும். அதோடு, வேகமாக பரவும் தன்மையுடையது. இதற்கு முக்கிய காரணம், தூங்கும் முன், புட்டியில் பால் குடித்து விட்டு, அப்படியே தூங்குவது. இதற்கு கண்டிப்பாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் சரியாக பேசவும், சாப்பிடவும், ஆரோக்கியமான பற்கள், மிக அவசியம். சொத்தையின் நிலைக்கேற்ப, பற்களை அடைக்க வேண்டும். பால் பற்களின் அமைப்பையும், ஆரோக்கியத்தையும் பொறுத்து தான், பின்நாளில் முளைக்கும், நிரந்தர பற்கள் இருக்கும். சரியான நேரத்தில், பால் பற்களில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், பின்னாளில் ஆரோக்கியமான பற்களை பெறலாம்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான், 94441 54551