PUBLISHED ON : அக் 21, 2012

நுரையீரல் நோய்கள் சிலவற்றில், இருமினால் ரத்தம் வர வாய்ப்பு உள்ளது. ரத்தம் வருவதால், உடனே, டி.பி., புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு, நெஞ்சு எக்ஸ்-ரே, சி.டி., ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்ய தேவைப்படலாம்.
1. என் குழந்தைக்கு, ஆறு வயது. பிரைமரி காம்ப்ளக்ஸ் இருப்பதாக, டாக்டர்கள் கூறுகின்றனர். அவனுக்கு மூன்று வயது ஆகும்போதே, ஆறு மாத காலம், பிரைமரி காம்ப்ளக்சுக்கு மருந்து கொடுத்துள்ளோம். மீண்டும் மருந்து கொடுக்க வேண்டுமா?
அரவிந்த், திண்டுக்கல்
'பிரைமரி காம்ப்ளக்ஸ்' என்பது, குழந்தைகளுக்கு, டி.பி., கிருமியால் ஏற்படும் தொற்றுநோய். இதற்கு ஒருமுறை மட்டும், ஆறு மாத காலம் மருந்து எடுத்தால் போதுமானது. Mantaux Test என்ற பரிசோதனை செய்து இருந்தால், ஆறு மாத காலத்திற்கு பின், நெகடிவ் ஆக மாறாது. எனவே மீண்டும் மீண்டும் உங்கள் குழந்தைக்கு மருந்து தேவையில்லை. நல்ல சத்தான உணவு, நல்ல காற்றோட்டமான இருப்பிடம், சுறுசுறுப்பான விளையாட்டு போதுமானது.
2. என் மகளுக்கு, 10 வயதாகிறது. உடல் எடை கூடுதலாக உள்ளது. இரவில் குறட்டை விடுகிறாள். பெரியவர்களின் தூக்கத்தை கண்காணிப்பது போல, என் மகளுக்கும் செய்ய வேண்டுமா?
சுரேஷ், திண்டிவனம்
குறட்டை விடும் குழந்தைகளுக்கு, டான்சில், அடினாய்டு போன்ற உறுப்புகள், பெரிதாக இருக்கும். இதற்கு, உங்கள் மகள் பற்றி, இ.என்.டி., டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டும். பருமான இருப்பதும், உங்கள் மகள் குறட்டை விடுவதற்கு காரணமாக இருக்கலாம். இன்றைய குழந்தைகளின் பெற்றோர், விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
மாலையில் விளையாடுவது, குழந்தைகளின் மூளைக்கும், மற்ற உறுப்புகளுக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைக்க வழிசெய்யும். கம்ப்யூட்டர் கேம், 'டிவி' போன்ற சாதனங்களில், குழந்தைகள் விளையாடுவதை விட, ஓடி விளையாடுவது மிகவும் முக்கியம்.
எனவே, உங்கள் மகள் எடையைக் குறைக்க, நொறுக்கு தீனியை குறைத்து, மாலையில் விளையாடுவது நல்லது. சிறுவயதில் குண்டாக இருந்தால், ஆஸ்துமா, ஓ.எஸ்.ஏ., போன்ற, பல நோய்கள் வர வாய்ப்புண்டு.
3. எனக்கு, 30 வயது ஆகிறது. ஒரு மாதகாலமாக இருமல், சளியுடன் சேர்ந்து ரத்தம் வருகிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
ஞானசூர்யா, சென்னை
நுரையீரல் நோய்கள் சிலவற்றில், இருமினால் ரத்தம் வர வாய்ப்பு உள்ளது. ரத்தம் வருவதால், உடனே, டி.பி., புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு, நெஞ்சு எக்ஸ்-ரே, சி.டி.,ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்ய தேவைப்படலாம்.
நுரையீரல் உள்நோக்கு கருவியான, 'ப்ராங்கோஸ்கோபி' செய்து, ரத்தம் வருவதற்கான காரணத்தை கண்டறியலாம். இக்கருவி மூலம் மருந்தை நுரையீரலுக்குள் செலுத்தி, ரத்தம் வருவதை நிறுத்த முடியும்.
அதிக ரத்தம் வந்தால், எந்த ரத்தக் குழாயில் இருந்து, ரத்தம் வருகிறது என்பதைக் கண்டறிந்து, அதை அடைக்க வழி வகுக்கிறது. எனவே நீங்கள் உடனடியாக நுரையீரல் நிபுணரை அணுகி, அவர் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
டாக்டர் எம்.பழனியப்பன், 94425 24147