PUBLISHED ON : ஜூலை 03, 2022

'சுலபமாக உடல் எடையை குறைப்பது எப்படி?' இது தான் பலரும் கேட்கும் கேள்வி. ஒரு சிலருக்கு இதுவே மனநோய் போல மாறி வருகிறது. பள்ளிக் குழந்தைகள் முதல் முதியோர் வரை, அனைவருக்கும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.
இதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளை பார்க்கும் போது, ஒரு சமயம் பரிதாபமாகவும், சில சமயங்களில் வேதனையாகவும் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், உடல் பருமனுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
தற்போது உள்ள விளம்பர உலகமும், அது சார்ந்த நவீன ஊடகங்களும் ஒல்லியாக இருப்பவர்களே ஆரோக்கியமானவர்கள், அழகானவர்கள் என்ற போலி சாயத்தை பூசுகின்றனர். அதனால் ஏற்பட்ட விளைவு, தெருவுக்கு ஒரு உடற்பயிற்சி கூடம்; சமூக வலைதளங்களில் தரப்படும் உடல் எடையை குறைக்கும், 'டிப்ஸ்'கள்.
'பேலியோ, கீட்டோ' என்று பல வகையான, வாயில் நுழையாத 'டயட்'டுகளும் உள்ளன. ஒருவர், 'எண்ணெய் பொருள் சாப்பிட்டால் உடல் எடை கூடும்...' என்று சொல்கிறார். இன்னொருவர், 'எண்ணெயில் பொரித்த பொருட்களை மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்...' என்கிறார்.
'மூன்று வேளையும் சரியான அளவில் உணவு சாப்பிடுங்கள் எடை குறையும்...' என்று மற்றொருவர் சொன்னால், '16 மணி நேரம் எதுவும் சாப்பிடாதீர்கள் எடை குறையும்...' என்பார் அடுத்த நபர். எதை நம்புவது, எதை பின்பற்றுவது என்ற குழப்பமே மிஞ்சுகிறது
.
உடல் பருமன் என்று எதை எடுத்துக் கொள்வது?
அவரவரின் உடல் அமைப்பிற்கு ஏற்ற நிலையில், உடல் எடை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடையில் இருந்து, 20 கிலோ அதிகமாக இருந்தால், அதை உடல் பருமன் என்று சொல்வோம்.
ஒருவர், 150 செ.மீ., உயரம் இருந்தால், அவரின் உடல் எடை 50 கிலோவாக இருக்க வேண்டும். பொதுவாக நாம் நினைப்பது போல, அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதால், உடல் எடை அதிகரிக்கிறது என்பது உண்மையில்லை.
சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை கூடும். துரித உணவு, அதிக அளவில் குளிர்ச்சியான உணவு, துாக்கமின்மை, மனச் சோர்வு, அதிக நேரம் துாங்குவது, உடற்பயிற்சியின்மை, ஹார்மோன் குறைபாடுகள், மரபியல் காரணிகள் போன்ற காரணங்களால் செரிமானம் மந்தமாகும்.
இதன் காரணமாக உடலில் கழிவுகள் தேக்கமடைந்து, சரியான ரத்த சுழற்சி இல்லாமல், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதற்கு முன், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். எடை குறைக்க வேண்டிய அவசியம் இருப்பவர்கள், என்ன மாதிரியான உணவு முறைகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்து பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொருவரின் உடல் தேவையும் மாறுபட்டது என்பதால், சமூக வலைதளங்களில் சொல்வதை அப்படியே செய்வது கூடாது. சரியான நேரத்திற்கு துாங்க வேண்டும். இது இல்லாமல், என்ன மாதிரியான உணவு முறைகள், உடற்பயிற்சியை பின்பற்றினாலும் பலன் இருக்காது. அவரவர் உடலுக்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்து, சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
ஒரு சிலருக்கு சிறுதானிய உணவுகள் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்; ஒத்துக்கொள்ளாது. சிறுதானியம் சாப்பிட்டால் உடல் உடை குறையும் என்று தொடர்ந்து அதை சாப்பிடக் கூடாது; இதனால், தேவையற்ற பிற உபாதைகளை அது தரும்.
உடற்பயிற்சி அவசியமானது. ஆனால், அதை குறிப்பிட்ட நேரத்தில் செய்தால் போதும். சிலர், இரண்டு, மூன்று மணி நேரம் உடற்பயிற்சி கூடாரங்களில் நேரத்தை செலவிடுகின்றனர். தினமும், 20 நிமிட நடை பயிற்சி, ஐந்து நிமிட மூச்சு பயிற்சி, 10 நிமிடம் சூரிய நமஸ்காரம் செய்தால் போதுமானது. கிழங்கு வகைகள், முட்டை, இறால், பேக்கரி வகைகள், துரித உணவுகள், குளிர்பானங்களை தவிர்க்கலாம்.
வெள்ளைப் பூசணி, பீர்க்கங்காய், இஞ்சி, கறிவேப்பிலை துவையல், கோவைக்காய், பப்பாளிக்காய், குடை மிளகாய், சுண்டைக்காய், ஆட்டு ஈரல் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்; இவை, உடல் எடையை குறைக்க உதவும்.
செரிமான உறுப்புகளை சரிவர பாதுகாக்கச் செய்யும் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், சீரகம் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர் மது கார்த்தீஷ்
சித்த மருத்துவர், சென்னை.
99944 93687
