தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இருபது ஆண்டுகள் தழும்பை இரண்டே வாரத்தில் ஏற்படுத்தும்!

இருபது ஆண்டுகள் தழும்பை இரண்டே வாரத்தில் ஏற்படுத்தும்!

இருபது ஆண்டுகள் தழும்பை இரண்டே வாரத்தில் ஏற்படுத்தும்!


PUBLISHED ON : செப் 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் பாதித்த 30 சதவீதம் பேருக்கு, மிதமான, தீவிரமான பாதிப்பு ஏற்பட்டு, நுரையீரலில், 'பைப்ரோசிஸ்' என்ற தழும்புகள் உருவாகி, கோளாறுகள் நீண்ட காலத்திற்கு இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இதனால் நுரையீரலின் திறன் குறைந்து விடும். தொற்று சரியான பின் எதற்கு என்று பலர் மருத்துவ ஆலோசனைக்கு மீண்டும் வருவதில்லை. இதனால் பல நேரங்களில் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமாகி விடுகிறது.

ஆறு மாதங்கள் கழித்து, 'இன்னும் மூச்சு வாங்குகிறது, இருமல் குறையவில்லை, பழையபடி வேலை செய்ய முடியவில்லை' என்று கூறுகின்றனர். சர்வதேச அளவில் பல ஆய்வுகள் இது பற்றி வெளி வந்திருக்கிறது. தொற்று குணமான ஆறு மாதங்கள் கழித்து, 'ஸ்கேன்' எடுத்துப் பார்த்தால், 30 சதவீதம் பேருக்கு நுரையீரலில் உள்ள தழும்பு நிரந்தரமாக இருக்கிறது.

ஆறு மாதங்களில் அலுப்பு, அசவுகரியம் இருந்திருக்கும். அதிகம் நடக்காமல், வெளியில் எங்கும் செல்லாமல், வீட்டிலேயே இருந்ததால் பெரிதாக வெளியில் தெரிந்திருக்காது. நோய் பாதிப்பில் இருந்து வெளியில் வந்து விட்டோம் என்று நினைப்போம்; ஆனால், தொற்று ஏற்படுவதற்கு முன் இருந்த நிலைக்கு வந்து விட்டோமா என்பது தெரியாது.

தற்போது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளியில் வர துவங்கியவுடன், பழைய மாதிரி எதுவும் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது.

ஒரு வாரம் போதும்

இது போன்ற தழும்புகளை, எந்த தொற்றாலும் உடனடியாக நுரையீரலில் உருவாக்க முடியாது. தொழிற்சாலை அல்லது மாசு நிறைந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நுரையீரல் சிறிது சிறிதாக பாதிப்படைந்து, தழும்புகளால் ஏற்படும் செயலிழப்பு, கொரோனா பாதிப்பால் ஒரே வாரத்தில் ஏற்பட்டு விடுகிறது.

காசநோய் போன்ற தீவிர நோயை ஓராண்டு கவனிக்காமல் விட்டால் தான் இது போன்ற பாதிப்பு ஏற்படும். ஆனால், கொரோனா வைரஸ் இரண்டு வாரத்திற்குள் தழும்பை உருவாக்கி விடும் அளவிற்கு வீரியமாக உள்ளது.

இந்த பாதிப்பை குறைப்பதற்கு, 'ஸ்டிராய்டு' மருந்துகள் அவசியம். தொழிற்சாலை மாசால் ஏற்படும் பைப்ரோசிஸ் நிரந்தரமாக தழும்பாக இருந்து விடும். இதைப் போன்றே வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட தழும்பும் இருக்கும் என்று துவக்கத்தில் நினைத்தோம்.

சரியான நேரத்தில் மருந்து கொடுத்தால் சரியாகி விடுகிறது. ஐம்பது சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டாலும், பாதிப்பை 90 சதவீதம் சரி செய்து விட முடிகிறது. தொடர்ச்சியான அறிகுறிகளை அலட்சியம் செய்யக் கூடாது. மூன்று மாதம், ஆறு மாதங்கள் ஆன பின்னும் பழைய நிலைக்கு வர முடியவில்லை என்றால், என்ன காரணம் என்று தெரிந்து அதை சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம். அலட்சியம் செய்தால் நிரந்தர பாதிப்பை தவிர்க்க முடியாது.

தழும்புகளை ஏற்படுத்தும் 'பைப்ரோடிக்' நுரையீரல் நோய்கள் நிறைய உள்ளன. இதற்கான மருந்துகளும் வழக்கத்தில் உள்ளன. வழக்கத்தில் உள்ள அந்த மருந்துகளையே தற்போது கொரோனாவால் ஏற்படும் தழும்புகளை சரி செய்யவும் தரலாம் என்று சர்வதேச அளவில் சிபாரிசு செய்துள்ளனர். அதைத்தான் தற்போது தருகிறோம். வைரஸ் பாதித்தால், 14 நாள் தனிமையில் இருந்தால் சரியாகி விடும் என்ற தவறான அபிப்ராயமும் உள்ளது.

சிகிச்சை

தழும்புகளை குறைக்க மருந்துகள், இன்ஹேலர், சுவாசப் பயிற்சி, படிப்படியான ஏரோபிக் பயிற்சி சொல்லிக் கொடுத்து, தசைகளின் வலிமையை அதிகரித்து, ஊட்டச்சத்து மிக்க உணவு வாயிலாக தங்களை தாங்களே எப்படி பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பதை கற்றுத் தருகிறோம்.

இதற்கென்றே, 'பல்மினரி பிசியோதெரபிஸ்ட்' இருக்கின்றனர். வெளிநோயாளியாகவே பயிற்சி பெற்று செல்லலாம்.

டாக்டர் அருண் சம்பத்,

நுரையீரல் சிறப்பு மருத்துவர்,

சென்னை.

93840 83062

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us