PUBLISHED ON : ஆக 05, 2021

அலுவலக வேலைகளை வீட்டில் இருந்தே செய்வது, 'ஜூம் - மீட், கூகுள் மீட்'டில், மீட்டிங்குகள், கலந்துரையாடல்களை நடத்துவது என கடந்த பல மாதங்களாக 'ஹெட் போன், இயர் போனின் இயர் - பட்டன்' காதுகளை ஒட்டியே இருக்கின்றன.
அதனால் என்ன, இயர் பட்டன், ஹெட் செட்டை பல மணி நேரம் மாட்டிக் கொள்பவர்களில், 22 சதவீதம் குழந்தைகள், 17 சதவீதம் வளர் இளம் பருவத்தினரின் காதுகள் பாதிக்கப்படுவதாக கூறுகிறது ஆய்வு.
எப்படி?
அழியும் செல்கள், வெளிக் காரணியால் சேரும் துாசு, மாசு போன்றவை நம் முயற்சி எதுவும் இல்லாமல், தானாகவே பிசின் போன்ற பொருளாக மாறி, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வெளியில் வந்து விடும்.
தினமும் பல மணி நேரம் காதில் மாட்டியிருக்கும் இயர் போன் இவை வெளியில் வர தடையாக உள்ளது. இயர் போனில் ஒட்டியுள்ள துாசுகளும் காதின் உள்ளே சென்று தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
தவிர, கேட்கும் திறன் இழப்பு, காயம், காதினுள் இரைச்சல் உட்பட பல பிரச்னைகள் வரலாம்.
வைரஸ், பாக்டீரியா தொற்று என்றால், அறிகுறிகள் தெரியும். ஆனால் பூஞ்சைத் தொற்று என்றால் வலி இருக்காது; அரிப்பு தான் வரும். கேட்கும் திறனை இழந்தால், பழைய நிலைக்கு வருவது சிரமம்.
சப்தம்
இயர் போனை காதில் மாட்டி கேட்கும் போது, அதிகபட்ச ஒலி அளவாக 105 - 110 டெசிபல் வரை கேட்கிறோம்.
85 டெசிபல் ஒலி அளவிற்கு மேல் சத்தத்தை இரண்டு மணி நேரம் தொடர்ந்து கேட்டாலே, காதுகளில் உள்ள நுண்ணிய திசுக்களில் சிதைவை ஏற்படுத்தும்.
அப்படியிருக்க, வழக்கமாக கேட்கும் அதிகபட்ச அளவு, ஐந்து நிமிடங்களிலேயே காதுகளில் வலியையும், பாதிப்பையும் ஏற்படுத்தி விடும். ஒரே சீராக, 60 - 85 டெசிபல் ஒலியில் கேட்பது தான் காதுகளுக்கு பாதுகாப்பானது.
தொடர்ந்து இயர் போனை உபயோகிக்காமல், அவ்வப்போது காதுகளுக்கு ஓய்வு தரலாம். காதின் உள் வைக்கும் எதையும் மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
டாக்டர் பிரவீன் பாஸ்கர்,
காது, மூக்கு, தொண்டை மருத்துவ ஆலோசகர்,
ரேலா மருத்துவமனை,
சென்னை.
