PUBLISHED ON : ஆக 29, 2010

*நாராயணமூர்த்தி, சேலம்: எனக்கு, தொடை இடுக்கில் தாங்க முடியாத அரிப்பு ஏற்பட்டு, அப்பகுதி சிவந்து விடுகிறது. அலுவலக மீட்டிங்கில் இருக்கும் போது கூட தாங்க முடியாத அரிப்பு ஏற்பட்டு, அறையை விட்டு அகன்று, சொரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது...
'டினியா க்ரூரிஸ்' என்று இதற்கு பெயர். 'ஜாக் இட்ச்' என்றும் இதைக் கூறுவர். இது ஒரு பூஞ்சை தொற்று. நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படும் தொற்று இது.தினமும் இரண்டு வேளை நீக்கோ சோப்பு போட்டு குளிக்க வேண்டும். தொடை இடுக்கை சுத்தமாகத் துடைத்து விட்டு, 'டெர்பாபைன்' அல்லது 'க்ளோட்ரிமேசோல்' போன்ற மருந்துகள், இந்த அரிப்பைத் தவிர்க்க பயன்படும். 'டெர்பாபைன்' களிம்பு பூசி, அதன் மேல் 'க்ளோட்ரிமேசோல்' பவுடர் போடலாம். இரண்டு வாரங்களில் குணமாகும். எனினும், மருந்தைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். இறுக்கமான உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும். ஸ்டிராய்டு கலந்த மருந்துகளைப் பூசிக் கொண்டால், இந்த உபாதை அதிகமாகி விடும்.
* செந்தில், திண்டிவனம்: எனக்கு விரையின் ஒரு பக்கம் வீக்கம் ஏற்பட்டுள்ளது. நான் நின்றிருக்கும் நிலையில், அந்த இடத்தில் வீக்கம் தெரிகிறது. படுத்திருந்தால், வீக்கம் தெரிவதில்லை. எந்த நிலையிலும் வலி தெரிவதில்லை. என்னது இது?
உங்களுக்கு அந்தப் பகுதியில், தசைக் கீழிறக்கம், அதாவது 'ரெட்யூசிபுள் இன்க்வினல் ஹெர்னியா' ஏற்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. வயிற்றின் கீழ்ப் பகுதி, விரையின் மேல் பகுதியில் இறங்கும் போது, இந்த உபாதை ஏற்படும்.அந்தப் பகுதி, நகரும் வகையில் இடம் இருக்கும் வரை, பிரச்னை ஏதும் ஏற்படாது. கீழிறங்கிய பகுதி, திடீரென நிலைத்து நின்று விட்டால், கடுமையான வலி ஏற்படும். ஆபத்தான நிலை இது. மருத்துவரிடம் சென்று, உங்கள் நிலை குறித்து விளக்கி, அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.
* ராமச்சந்திரன், ஆற்காடு: ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பிரச்னை, எனக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு அழகு சிகிச்சை செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். வழுக்கையால், வயதான தோற்றம் ஏற்பட்டு விட்டது. 20 வயது தான் கடந்துள்ளேன்; திருமணமும் ஆகவில்லை. எனக்கு ஆலோசனை கூறுங்கள்...
வழுக்கை ஏற்படுவது, வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பிரச்னை என இனி கருத வேண்டாம். வழுக்கையை மறைக்க எவ்வளவோ மருத்துவ வசதிகள் இப்போது உள்ளன.
'மினாக்சிடில்' என்ற ரசாயன லோஷன், கடைகளில் கிடைக்கும். அதை தினமும் தடவிக் கொண்டால், முடி வளரும். லோஷன் தடவுவதை நிறுத்தினால், தலைமுடி கொட்டி விடும். அதிக முடி இருக்கும் இடத்திலிருந்து, வழுக்கை விழுந்த இடத்திற்கு, நாற்று போல மாற்றி நடும் முறையும் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வழுக்கை விழுந்த தோலை அகற்றும் சிகிச்சை முறையும் உண்டு. அறுவை சிகிச்சை செய்வதில் ஒப்புதல் இல்லையெனில், 'விக்' வைத்து வழுக்கையை மறைக்கலாம்.

