PUBLISHED ON : டிச 10, 2023

பருவநிலை மாறும் போது, முழு திறனுடன் கிருமிகள் செயல்பட துவங்கும். இதனால், தற்போது வைரஸ், பாக்டீரியா தொற்றுகளால் டெங்கு, சிக்குன் குனியா, புளூ தொற்று அதிகம் பரவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவத்தில் பரவும் வைரசில் எத்தகைய மரபணு மாற்றம் அடைந்துள்ளது என்பதன் அடிப்படையில் தடுப்பூசி தயாரிக்கப்படும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தடுப்பூசி போட்டால், ப்ளூவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஒரு வைரஸ் அதிக அளவில் பரவும் போது, அவற்றில் மரபணு மாற்றமும் அதிக முறை நடக்கும். இதற்கு கொரோனா வைரஸ் நல்ல உதாரணம். தற்போது எந்த அளவுக்கு தொற்று வருகிறதோ, அந்த அளவுக்கு மரபணு மாற்றமும் வைரசில் நடக்கும்.
சீனாவில் பரவும் நிமோனியா வைரஸ் நம்மையும் பாதிக்கிறதா என்பதை உறுதி செய்ய, எந்த வித பரிசோதனையும் நாம் செய்வதில்லை. லேசான, மிதமான, தீவிரமான என்று மூன்று வகைகளாக சுவாச பாதிப்பை பிரித்து, முதல் இரு வகைக்கு பரிசோதனை அவசியம் இல்லை என்று வைத்துள்ளோம். தீவிர பாதிப்பாக இருந்து, ஐ.சி.யு., - தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்தால் மட்டும் நிமோனியா தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்கிறோம். சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருப்பவர்களுக்கு தொற்றின் தீவிரம் அதிகம் உள்ளது. இவர்களில் சிலருக்கு, 'ஹெச்1என்1' எனப்படும் பன்றிக் காய்ச்சல் இருக்கிறது. இதற்கு நம்மிடம் பயன்பாட்டில் இருக்கும் ஒரே மாத்திரையான 'டேமி ப்ளூ' கொடுத்தால் குணமாகிவிடும்.
இந்த வைரஸ் பரவல் பிப்ரவரி இறுதி வரை இருக்கும் என்பதால், இப்போதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நிமோனியாவிற்கு போடப்படும் நீமோகாக்கல் தடுப்பூசியை, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது ஒரு டோஸ், ஐந்து ஆண்டுகளுக்கு பின் இன்னொரு டோஸ் போட வேண்டும்.
டாக்டர் அஸ்வின் கருப்பன்,பொதுநல மருத்துவர், சென்னை 044 - 4477 7000