PUBLISHED ON : டிச 29, 2013

ஐம்பது வயதான நான், பனிக்காலத்தில், வெளி இடங்களில், நடைப்பயிற்சி செய்யலாமா?
பனிக்காலத்தில், அதிகாலை, வெளியில் செல்வது கண்டிப்பாக, நுரையீரலில் தொந்தரவை ஏற்படுத்தும். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்தால், குளிர்ந்த காற்று, நுரையீரலுக்குள் செல்லும். அதனால் மூச்சுக்குழாய் சுருக்கம் ஏற்படலாம்.
அதனால், நீங்கள் சூரியன் உதித்தபின், பனி நன்றாக குறைந்த பின், நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் வீட்டிற்கு உள்ளேயே, நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்தக் கூடாது. உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
என் குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது. மருத்துவமனைக்கு செல்லும்போதெல்லாம் எக்ஸ்-ரே எடுக்கின்றனர். இப்படி அடிக்கடி எடுக்கலாமா?
பொதுவாக குழந்தைகளுக்கு சளி பிடிக்க காரணம், வைரஸ் நோய் தொற்றாக இருக்கலாம். எக்ஸ்-ரே ஒருமுறை எடுத்து, என்ன பிரச்னை என, தெரிந்து கொள்வது அவசியம். குழந்தைகளுக்கு பல நேரங்களில், 'ஆன்டிபயாடிக்ஸ்' கூட தேவைப்படுவதில்லை. அவர்களுக்கு என்ன தொந்தரவு இருக்கிறது என, தெரிந்து, அதற்கு ஏற்றாற்போல, மருந்துகள் கொடுத்தால் போதும். மருத்துவமனை செல்லும்போதெல்லாம், எக்ஸ்-ரே எடுப்பது நல்லதல்ல.
டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை.

