தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அசைத்து பார்க்கும் அச்சமும், பேராசையும்

அசைத்து பார்க்கும் அச்சமும், பேராசையும்

அசைத்து பார்க்கும் அச்சமும், பேராசையும்


PUBLISHED ON : மார் 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனதை வெள்ளையடிக்கும் முன், தேவையில்லாத குப்பை எண்ணங்களை நீக்கச் சொன்னேன். தேவையில்லாத எண்ணம் எது என்று எப்படி அறிவது? நம் பெரும்பாலான எண்ணங்களே, தேவையில்லாதது தான்.

காரணம், எதிர்மறை உணர்வுகள் தான், அதிக எண்ணங்களை தோற்றுவிக்கும். நல்ல எண்ணங்கள், உங்கள் சக்தியை, செயலுக்கு மாற்றி விடும்; எண்ண ஓட்டங்களை நிறுத்தி விடும்.

சந்தேகம்



மகிழ்ச்சி என்றால், உற்சாகப் பெருக்கை சொல்லிலும், செயலிலும் காட்டத் துவங்குவீர்கள். அதுவே பதற்றம், பயம், கோபம், பொறாமை எனில், அது நுாற்றுக்கணக்கான எண்ணங்களை உற்பத்தி செய்யும். உதாரணத்திற்கு, அலுவலகம் செல்லுகையில், வீட்டை பூட்டினோமா என்ற சந்தேகம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அது, என்னென்ன எண்ணங்களை ஏற்படுத்தும்?

'மெட்ரோவில் போவதால், போன் கூட செய்ய முடியவில்லையே! சே! இன்னிக்கு பார்த்து அவசரமாய் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருந்ததே... எல்லாம் இந்த கேடு கெட்ட புது பாசால் தான்... வீட்டை பூட்டும் போதா மாமியார், 'கரெக்டா' போன் செய்யணும்? எடுக்காட்டி வேறு பொல்லாப்பு... வர வர வயசாச்சு.

'அதான் மறதி... பத்திரிகைகளை படிச்சா, 'அல்சைமர்ஸ்' அது, இதுன்னு பயங்கரமா எழுதுறான். அதெல்லாம் வராம இருக்கணும்! எல்லாம், 'டென்ஷன்' தான்.

'எப்ப பையனுக்கு வேலை கிடைக்குதோ, அப்போ தான் குறையும் இந்த டென்ஷன்! பக்கத்து வீட்டு மாமிக்கு போன் பண்ணி, 'செக்' பண்ணச் சொல்லணும்; ஆனா, அவ பாதி நேரம், போன உடனே எடுக்க மாட்டா... எல்லாம் எனக்குன்னு வந்து சேரும்!'

வலை வலையாய் இப்படி சிந்தனைகள் வருவது இயல்பு தானே? அதனால் தான், கவலைப்படுகையில் ஆயிரம் பய எண்ணங்கள் வரும்; அதிர்ஷ்டவசமாய், அவற்றில், 1 சதவீதம் கூட நிறைவேறாது. ஆனால், எண்ணங்களை உற்பத்தி செய்து தள்ளுவது, மனதின் வேலை.

தவறான முடிவு



பணத்தை பொறுத்தவரை, பெரும்பாலான மக்களின் உணர்வும், எண்ணமும் பற்றாக்குறையைச் சுற்றி தான் இருக்கும். இந்த பயமும், பாதுகாப்பற்ற உணர்வும் தான், நம் பல தவறான முடிவுகளுக்கு காரணமாக இருக்கும்.

பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட பல நேரங்களில் காரணமாக இருப்பது, 'நெகடிவ் சென்டிமென்ட்' தான் என்பர். இதில், தர்க்க ரீதியான உண்மை என்பதை விட, உணர்வுபூர்வமான அபிப்பிராயங்கள் தான், பெரும் தாக்கம் செய்கின்றன.

பங்குச் சந்தை முதலீட்டாளர், வாரன் பபெட், வெற்றிகரமான முதலீடு பற்றி சொல்லுகையில், ஒரு எளிய உளவியல் சூத்திரம் கூறுகிறார்: இரண்டு உணர்வுகளை கடந்து செல்லுங்கள். உங்கள் முதலீட்டு முடிவுகள், நெடுங்காலத்தில் ஒரு நல்ல முடிவாக இருக்கும். அந்த இரண்டு உணர்வுகள், பயம் மற்றும் பேராசை.

சந்தை உயரும் போது பேராசை கொள்ளுதலும், சந்தை விழுந்து நொறுங்குகையில், அச்சம் கொள்ளுதலும் இயல்பானவை தான். ஆனால், இந்த தீவிர மன நிலைகளைத் தவிர்த்து, ஒரு பக்குவமான மன நிலையில், பங்குகளை வாங்கி விற்பவர்கள் தாம், நல்ல முதலீட்டாளர்களாக ஆக முடிகிறது என்கிறார்.

மனம் கிளர்ச்சியடையாத போது, அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்க சாத்தியமாகிறது. ஏறும் சந்தையில் நல்ல விலைக்கு விற்பதும், இறங்கும் சந்தையில் குறைந்த விலைக்கு பங்குகள் வாங்குவதும், பயத்தையும், பேராசையையும் துறந்தால் மட்டுமே சாத்தியம்.

யோசித்துப் பார்த்தால், இது எல்லா பண முடிவுகளுக்கும் பொருந்தும். பல ஆண்டுகள் கழித்துப் பார்த்த நண்பர் ஆளே மாறியிருந்தார்.

திருமணத்தின் போது நல்ல வேலை, வீடு, வண்டி, நகைகள் என, செழிப்பாக இருந்தவர், மிகுந்த சோர்வாக காணப்பட்டார். விசாரித்ததில், 'ஊரைச் சுற்றி கடன்' என்றார். எப்படி என்று அவரே சொன்னார்.

வட்டி வியாபாரம்



அவர் தம்பி, ஊருக்குள் வட்டி வியாபாரம் செய்பவர்; இவரோ, தனியார் பள்ளி ஆசிரியர். படிக்காத தம்பி பெரிய வீடு, சொத்துக்கள் என்று குவிக்க, ஆசை இவருக்கும் தொற்றிக் கொண்டது. தம்பி மூலம் வட்டிக்கு விட ஆரம்பித்தார். ஆரம்பத்தில், நல்ல வருமானம் வர வேலையை விட்டார். பின், அவரே முழு நேரம், தம்பிக்கு போட்டியாய், வட்டி வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்.

முதல் பற்றாக்குறை வரும் போது, நகைகளை வைத்து, அதிக வட்டிக்கு பணம் கொடுத்தார். ஒரு கட்டத்தில், ஒரு பெரிய தொகை வாங்கிய ஆள் தலைமறைவாக, வாங்கிய கடனை கட்ட, வீட்டை அடகு வைத்தார்.

மனைவி, நகைகள் இழந்து, வீடு அடகு வைத்த துயரில் சண்டை போட, இவர் அடிக்க, கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

ஆதார திறன்கள்



தொழிலே வேண்டாம் என, கொடுத்த பணம் அனைத்தையும் திரும்ப கேட்டிருக்கிறார். சிலர் தந்தனர்; பலர் வட்டி மட்டும் தந்தனர். வட்டி கேட்கப் போன இடத்தில், ஒருவர் மீட்டர் வட்டி என்று போலீசில் புகார் செய்ய, அது பேப்பரில் வந்தது. எல்லாவற்றையும் இழந்தது, வட்டியில் வரும் அதிக காசுக்கு பேராசைப்பட்டது தான் என்றார்.

ஆனால், அவர் தம்பி, இன்றும் சிறப்பாக வட்டி வியாபாரம் செய்கிறார். தம்பியைப் பார்த்து, பேராசை மட்டும் கொண்ட அண்ணன், தம்பியிடம் இருந்த திறன்கள் பற்றி யோசிக்கவேயில்லை.

யாருக்கு கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும், எப்படி திருப்பி பெற வேண்டும், எப்படி முதலை சுழற்றி எடுப்பது என்ற ஆதார திறன்களை பெற்றதுமல்லாமல், ஒரு அளவிற்கு மேல் வட்டியை ஏற்றாமலும், பல நேரங்களில் முதல் முடங்குகையில், ஏதும் செய்யாமல் இருப்பதும், எவ்வளவு பெரிய முடிவுகள் என, அண்ணன் புரிந்து கொள்ளவேயில்லை.

அச்சம் தவிர்ப்பது நல்லது; பேராசையை தவிர்ப்பது, மிக மிக நல்லது!

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

கட்டுரையாளர், உளவியல் மற்றும் நிர்வாக ஆலோசகர்

gemba.karthikeyan@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us