PUBLISHED ON : மார் 18, 2020

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், ஐரோப்பிய நாடான இத்தாலியை மிக மோசமாக பாதித்து உள்ளது. இந்த வைரசின் அபாயத்தை துவக்கத்தில் முழுமையாக உணராத இத்தாலி மக்கள், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கிட்டதட்ட, ஆறு கோடி மக்கள் தொகை உள்ள இத்தாலியில், தொற்றினால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதன் தீவிரத்தை உணர்ந்த அரசு, வீட்டை விட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என்று உத்தரவிட்டு உள்ளது.
பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அந்நாட்டு பெண், கிறிஸ்டினா ஹிக்கின்ஸ் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. நான் வசிக்கும் இத்தாலியின் பெர்காமோ பகுதி, 'கொரோனா'வால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க செய்தி ஊடகங்கள், இது பற்றிய செய்திகளை, இப்பகுதியின் மோசமான நிலைமையை வெளியிடவே இல்லை.
அரசு, பகுதியின் மேயர், பள்ளி நிர்வாகம் என, நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தான், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காத்திருக்கும் நிலையில் நாம் இல்லை. நாம் எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, கொரோனாவைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை, நாம் ஒவ்வொருவரும், நமக்கு நாமே எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.யதார்த்த நிலையை உணர்ந்து, நம் பகுதியை காப்பாற்ற, நமக்கு கிடைத்த வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்து, அதன் அறிகுறிகள் வெளிப்பட, இரண்டு வாரங்கள் ஆகும். அறிகுறிகள் வெளியில் தெரியாத நாட்களில், தங்களுக்கு பாதிப்பு இருப்பது தெரியாமல், கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றவர்களால் தான், இந்த அளவு பரவி, நிலைமை படு மோசமாகி விட்டது. மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில், கூட்டம் நிரம்பி வழிகிறது. இத்தாலியின் மொத்த மக்கள் தொகை, ஆறு கோடி. ஆறு கோடி பேரையும் வைரஸ் தொற்றி விடுமோ என்ற அச்சத்தில், பிரதமர், கோன்டே, யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று கூறுகிறார். அவர் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, தொற்று மேலும் பரவினால், மொத்த இத்தாலியும் நிலை குலைந்து விடும்; இத்தாலியே இல்லாமல் போகலாம். லொம்பார்டியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கைகளை விடவும், அதிகமாக நோயாளிகள் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. மருத்துவமனையில், வராண்டாக்கள் உட்பட இருக்கும் இடங்களில் எல்லாம், அவசர சிகிச்சை பிரிவு புதிதாக ஏற்படுத்தி உள்ளனர்.
தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, வரும் வாரங்களில் அதிகாகிக் கொண்டே போனால், நிலைமை என்னவாகும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது.கடந்த வாரம், டாக்டர் ஒருவர் செய்தித்தாளில் எழுதிய கட்டுரையில், கொரோனா தொற்றால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு யாருக்கெல்லாம் உள்ளது; சிகிச்சை அளித்தாலும் பலன் இல்லாமல் யார் இருக்கின்றனர் என்பதை, முதலிலேயே கணக்கிட துவங்கி விட்டோம் என எழுதுகிறார். அந்த அளவிற்கு டாக்டர்களின் பணிச்சுமை அதிகரித்து விட்டது.
டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்களின் நிலையை நினைத்தால், இன்னும் அச்சமாக உள்ளது. ஓய்வே இல்லாமல், பல நாட்கள் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கின்றனர். தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். இவர்களுக்கும் தொற்று வந்துவிட்டால், என்ன செய்வது? டாக்டர்களே இல்லாமல் போனால் நிலைமை என்னவாவது?
நீண்ட நாட்களாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு உள்ள, 70 வயதிற்கும் மேலானவர்களுக்கே, தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என, இனி யாரும் சொல்ல வேண்டாம். சில நாட்களாக, 40, 45, 18 வயதில் உள்ளவர்கள் எல்லாம் தொற்றுடன் வருகின்றனர். அலுவலகம், பள்ளிகளுக்கு செல்ல வேண்டாம். பிறந்த நாள் விழாக்கள், கொண்டாட்டங்களை ரத்து செய்யுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். லேசான அறிகுறிகள் இருக்கும் போதே, தனிமையில் இருந்து, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள். நாட்டை பாதுகாக்க, நம்மால் முடிந்ததை எல்லாம் செய்வோம்.
