PUBLISHED ON : அக் 22, 2017

கேரக்டருக்கு தேவைப்படும் விதத்தில் மட்டும் உடல் அமைப்பு இருந்தால் போதும் என, 'வொர்க் - அவுட்' செய்பவர் இல்லை மகேஷ் பாபு. 365 நாட்களும் தன், 'பிட்னெஸ்சில்' கவனமாக இருப்பவர். 18 ஆண்டுகளுக்கு முன், கல்லுாரி மாணவனாக இருந்தபோது, குண்டாக, அதிக உடல் எடையுடன் இருந்தவர். சினிமாவில் நுழைந்த முதல் நாளில் இருந்தே, தோற்றத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
இவரின், 'டயட்' அட்டவணையை, மனைவி நம்ரதா ஷ்ரோத்கர் கவனித்துக் கொள்கிறார். சமச்சீரான உணவு முறை தான், மகேஷின் பிட்னெஸ் ரகசியம். மூன்று வேளை உணவுக்கு இடையில், இரண்டு அல்லது மூன்று வேளை, 'ஸ்நாக்ஸ்' சாப்பிடுவார்.
தினசரி உணவில், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, விட்டமின்கள், தாதுக்கள் என, ஒரு நாளைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சீராக இருக்கும்படி பார்த்துக் கெள்வார். காலையில், ஓட்ஸ், முட்டை, பழங்கள், உலர்ந்த நட்ஸ், மதியம், பிரவுன் அரிசி சாதத்துடன், சிக்கன், மீன், மட்டன் இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து சாப்பிடுவார். இரவில், முட்டை அல்லது சிக்கனுடன், கோதுமை ரொட்டி.
வாரத்தில் ஐந்து நாட்கள், 'வொர்க் -அவுட்!' ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சியில், அதிகம் கவனம் செலுத்துவது ஸ்ட்ரெச்சிங். தசைகள் வலிமையாக இருக்க வேண்டும், ஆறடிக்கு மேல் உயரம் என்பதால், ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்பது, மகேஷ் பாபுவின் விருப்பம்.
- மகேஷ் பாபு, தெலுங்கு சூப்பர் ஸ்டார்

