PUBLISHED ON : அக் 29, 2017

இந்தியாவில், இளம் வயதினரை அதிகம் தாக்கும் கேன்சர்களில், மார்பகக் கேன்சர், முதலிடத்தில் உள்ளது. கேன்சர் குறித்த விழிப்புணர்வு இல்லாதது;
ஆரம்ப நிலையிலேயே கண்டறியத் தவறுவது போன்றவை, கவலை அளிப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும், ஐ.சி.எம்.ஆர்., கூறுகிறது.
'வரும், 2020ல், 17.3 லட்சம் பேர், புதிதாக கேன்சரால் பாதிக்கப்படுவர்; இவர்களில், 8.8 லட்சம் பேர் இறக்க வாய்ப்புண்டு' எனவும், அந்த அறிக்கை கூறுகிறது. கர்ப்பப்பை வாய், நுரையீரல் என, பல்வேறு விதமான கேன்சர் பாதிப்புகள் இருந்தாலும், முதலிடத்தில் இருக்கும் மார்பகக் கேன்சர், 20 வயதிலிருந்து, 40 வயதிற்கு உட்பட்டவர்களை, அதிகம் பாதிக்கிறது. உணவு, வாழ்க்கை முறை மாற்றம், அதிக உடல் பருமன், மரபியல் காரணங்கள் என, கேன்சருக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதனால் தான் கேன்சர் வருகிறது என்பதற்கு, உறுதியான எந்த காரணமும் இதுவரை தெரியவில்லை.
கேன்சரால் பாதிக்கப்பட்டோரில், 12.5 சதவீதம் பேர் மட்டுமே, ஆரம்ப நிலையில் சிகிச்சைக்கு வருவதாகவும், அந்த அறிக்கையில் உள்ளது. கேன்சர் எனத் தெரிந்தவுடன், அதை நம்பிக்கையோடு எதிர்கொண்டு, மீண்டவர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
வாழ கற்று கொடுத்தது கேன்சர்! - கவுதமி தாடிமல்லா, நடிகை, கேன்சர் விழிப்புணர்வு ஆர்வலர்
வாழ்க்கை எனக்கு, 'ஸ்டார்' அந்தஸ்து உட்பட, எல்லாம் கொடுத்திருக்கிறது. அதோடு, நிறைய பிரச்னைகளையும்... என் பெற்றோர், ஒருவர் பின் ஒருவராக இறந்தது, திருமண முறிவு, தனி மனுஷியாக மகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு... இப்படி.
என் பெற்றோர் இறப்பும், திருமண முறிவும், மிகப்பெரிய பாதிப்பை, என் வாழ்க்கையில் ஏற்படுத்தின. ஆனால் கேன்சர், எனக்கு அப்படி ஒரு பாதிப்பை தரவில்லை. காரணம், எனக்கு ஏன் கேன்சர் வந்தது என்ற காரணத்தைத் தேடினால், நிச்சயமாக காரணம் இருக்கிறது.
நான், மிக அதீத மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என, எனக்கு தெரியவில்லை. என் குடும்பத்தில் யாருக்கும் கேன்சர் இல்லை. என் மரபணுவில் கேன்சர் இல்லை. எனக்கு வந்ததற்கு காரணம், என், 'ஸ்ட்ரெஸ்!'
இது, என் உடலில் ஏற்பட்ட ஒரு மாற்றம். என் பெற்றோர், டாக்டர்கள் என்பதால், குழந்தையில் இருந்தே, மருத்துவம் குறித்த புரிதல், நோய் பற்றிய விபரங்கள் தெரியும். எனக்கு கேன்சர் என உறுதியானவுடன், 'அய்யோ...' என, அடித்துக் கொண்டு அழவில்லை; பதறவில்லை. 'ஓகே... கேன்சர் வந்துவிட்டது... அடுத்து என்ன செய்ய வேண்டும்?' என்று தான் யோசித்தேன்.
கேன்சர் வந்த பின், வாழ்க்கையை எப்படி வாழ்வது என, கற்றுக் கொண்டேன். யதார்த்தமாக வாழ்வது எப்படி, தினசரி வாழ்க்கையில் நிறைவாக
இருப்பது எப்படி... இப்படி நிறையக் கற்றுக் கொண்டேன்.
எனக்கு, ஏன் கேன்சர் வந்தது என்ற கேள்வியை கேட்க ஆரம்பித்த வினாடியில் தோன்றியது, 'வாழ்க்கை என்பது இது அல்ல. சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்வி, சவால்கள் என, எவ்வளவோ உள்ளது. ஆனால், இவற்றை எல்லாம், முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு என்ன, எப்படி செய்ய வேண்டும்' என்ற, சுய சிகிச்சையை அன்றிலிருந்து ஆரம்பித்தேன்.
நம் உடம்பை பற்றி, நமக்கு தெரிய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், மனம் என்ன விரும்புகிறதோ, அதை சாதிக்க முடியும். நம் உடம்பிற்கு என்ன தேவை என்பதை புரிந்து, அதை மட்டுமே செய்ய வேண்டும். உடம்பை ஒரு வேற்று கிரகவாசி போல நடத்துவது தவறு. உடம்பிற்குள் தானே நாம் வாழ்கிறோம்! அதை முழுமையாக மதிக்கக் கற்றுக் கொண்டால், பிரச்னை வராது.
நிச்சயம் போராட்டம் தான்! - பேபி நடராஜன், குடும்ப தலைவி
கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன், என், 39வது வயதில், வலது பக்க மார்பகத்தில், கேன்சர் கட்டி இருப்பது தெரிந்தது. அதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே, என் வலது தோள்பட்டை, மார்பு பகுதியில் வலி இருந்தது.
அந்நேரத்தில், என் கணவர், கேரளாவில், ஒரு தனியார், 'டிவி' ஒன்றில் வேலையில் இருந்தார்.
சென்னையில், என்னோடு, மாமியார், மாமனார், 10வது படிக்கும் என் மகள். அருகிலேயே, நாத்தனார் வீடு. ஆனாலும், இந்த வலியை பற்றி வெளியில் சொல்ல தயக்கம், பயம். அதனால், யாரிடமும் சொல்லவில்லை. தொடர்ந்து வலி இருக்கவே, என் மாமியாரிடம் சொன்னேன். அவர், 'ஒன்றும் இருக்காது; கடவுள் இருக்கிறார்' என, ஆறுதல் சொன்னார்.
ஒரு நாள், தேங்காய் உரித்த போது, தாங்கிக் கொள்ள முடியாத வலி, அலறி விட்டேன். என் மகள் பயந்து, 'அம்மாவுக்கு, நெஞ்சு வலி' என, உறவினர்களை அழைத்து வந்து விட்டாள்.
என் கணவரின் சகோதரர், டாக்டர். அவரிடம் சொல்லி, கார்ப்பரேட் மருத்துவமனையில், 'பயாப்சி' எடுத்து, கேன்சர் என, உறுதியான உடன், ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்தனர்.
அங்கிருந்த டாக்டர், 'உங்களுக்கு, இரண்டாம் நிலை கேன்சர் கட்டி. அதனால், அடையாறு கேன்சர் மையத்திற்கு செல்வது தான் சரியாக இருக்கும்' என்றார். உடனே, இங்கு வந்து விட்டேன்.
அதன்பின், ஆறு சுற்று கீமோதெரபி; 20 சுற்று ரேடியேஷன் கொடுத்தனர். கீமோவால், எனக்கு முடி கொட்டவே இல்லை என்பது, ஆறுதலான விஷயம். ஆனால், மற்ற பக்க விளைவுகள் அனைத்தும் இருந்தன.
கீமோவால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும்; அதனால், இளநீர், மோர் நிறைய குடிக்க வேண்டும். ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து விடும்; எனவே, சத்தாக சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழம், மாதுளை தினமும் சாப்பிட வேண்டும் என, கீமோவில் ஏற்படும் பக்க விளைவுகளை விளக்கினர்.
என் கணவர் வீட்டிலும் சரி; என் உடன் பிறந்தவர்களும் சரி; நன்றாக, 'சப்போர்ட்' செய்தனர். சிகிச்சை முடிந்து, வாழ்க்கை இயல்பாகி விட்டது. மகளுக்கு திருமணம் முடித்து விட்டேன்; பேத்தி இருக்கிறாள்.
கேன்சர், அதற்கான சிகிச்சை என்பது, நிச்சயம் பெரிய போராட்டம் தான். கேன்சரிலிருந்து, நான் முழுமையாக வெளியில் வந்து விட்டேன். ஆனாலும், கொசு கடித்த தடிப்பைப் பார்த்தால் கூட, ஒரு பயம் வருவதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். அதெல்லாம் தற்காலிகமானது தான். நம் மீதும், டாக்டர் மீதும் வைக்கும் நம்பிக்கை, கேன்சரில் இருந்து வெளியில் வர உதவும்.
அதிக வலிமையுடன் உணர்கிறேன்! - ரமாமணி ரவி, குடும்ப தலைவி
கேன்சர் என தெரிந்த போது, 30களின் ஆரம்பத்தில் இருந்தேன். எனக்கு, பெரிய அதிர்ச்சி என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம், எனக்கு பிறந்த குழந்தை, 'ஸ்பெஷல் சைல்டு!' என்னால் மட்டுமே, இது போன்ற குழந்தையை வளர்க்க முடியும் என்பதால் தான், கடவுள் கொடுத்து இருக்கிறார்.
பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர்களுக்குத் தான், அவற்றை கடவுள் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால், என்
குழந்தைக்காகவே வாழ்க்கை என, இருந்த சமயத்தில், என் பிரச்னை பெரிதாக தெரியவில்லை.
என் கவலை எல்லாம், 'எப்போது சிகிச்சை முடியும்... என் குழந்தையுடன் வழக்கம் போல நான் இருக்கப் போகிறேன்...' என்ற கேள்வி தான். 'சிகிச்சைக்கும், குழந்தையோடு நீ இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? எப்போதும் போல, இப்போதும் குழந்தையுடன் இருக்கலாம்' என்றார், டாக்டர் சாந்தா.
நம்மால் முடியாத போது, நம் பிரச்னையை சரி செய்வதற்காகவே, அர்ப்பணிப்போடு இருப்பவர்களிடம், நம் உடம்பை ஒப்படைத்து விட வேண்டும். சிகிச்சைக்குப் பின், அதிக வலிமையாக என்னை உணர்கிறேன்.
எனக்கு ஆறுதல் தந்தது இது! - லதா சீனிவாசன், ஊடகவியலாளர்
இடது பக்க மார்பகத்தில், கேன்சர் கட்டி, இரண்டாம் நிலையில் இருந்தது உறுதியான போது, என் வயது, 30. திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்தேன்.
பொருளாதார பிரச்னை இல்லை என்றாலும், திருமணம் ஆகாத இளம்பெண், கேன்சரால் ஒரு பக்க மார்பகத்தை இழக்கும் போது, எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். நான், 'அப்செட்' ஆனால், என் பெற்றோர் இடிந்து விடுவர்.
ஏளனமாக, பரிதாபமாக, இளக்காரமாக, வேடிக்கையாக பார்ப்பவர்களை எதிர்கொள்வதே பெரிய சவால்.
நம் சமூகத்தில், திருமணம் நடந்தால் மட்டுமே, ஒரு பெண்ணின் வாழ்க்கை, 'செட்டில்' ஆகும். என் நோயுடன் சேர்த்து, இந்த பிரச்னைகளை எல்லாம் சமாளிப்பதற்கான தைரியம், நம்பிக்கையை கொடுத்தது, கேன்சர் மையம்.
எந்த கார்ப்பரேட் மருத்துவமனையில் வேண்டுமானாலும், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு, எனக்கு வசதி இருக்கிறது.
ஆனால், கேன்சர் மையத்தை நான் தேர்வு செய்ததற்கு காரணம், கேன்சர் என்ற ஒரு விஷயத்திற்கு மட்டுமே, பிரத்யேகமான வசதிகளுடன் இருக்கிறது.
தவிர, வசதி உள்ளவர்கள் பணம் கட்டி, சிகிச்சை செய்தால், வசதி இல்லாத யாரோ ஒருவருக்கு, அவர்களால் இலவசமாக சிகிச்சை செய்ய முடிகிறது. எனக்கு, இது மிகுந்த ஆறுதல் தந்த விஷயம்.
வாழ வேண்டும் என்ற வைராக்கியம்! - மனோரமா சேகர், மத்திய அரசு ஊழியர் (பணி நிறைவு)
கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் இது. அது, நவம்பர் மாதம். என் இரண்டாவது மகளுக்கு, திருமணம் நிச்சயத்திருந்தோம். திருமண வேலைகளில், பரபரப்பாக இருந்தேன்.
திருமணம் முடிந்து, மகளை மும்பை வீட்டில் செட்டில் செய்த பின், அன்று இரவு படுக்கும் போது, வலது பக்க மார்பு கனமாக இருப்பதை போல உணர்ந்தேன்; வலியும் இருந்தது.
சில வாரங்களாகவே, வலது மார்பில் கனமான உணர்வும், லேசான வலியும் இருந்தது. ஆனால், மகளின் திருமண மும்முரத்தில், கவனம் இதில் இல்லை. ஒரு வாரத்திற்கு பின், சென்னை திரும்பியவுடன், மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ மையத்தில் காண்பித்தேன்.
தொட்டுப் பார்த்த உடனேயே, 'வலது மார்பில், கேன்சர் கட்டி உள்ளது. கட்டி மூன்றாம் நிலையில் இருக்கிறது. உடனடியாக, அடையாறு கேன்சர்
மையத்திற்கு செல்லுங்கள்' என, சொல்லி விட்டனர்.
கேன்சர் என்ற வார்த்தையை கேட்டவுடன், நமக்கு வருமே பயம், பதற்றம், இயலாமை, வெறுமை என, கவலையான உணர்வு, அதை, வார்த்தைகளில் சொல்லவே முடியாது.
'ஆப்பரேஷன் செய்து தான் ஆக வேண்டும். ஆனால், அதற்கு முன், 'கீமோதெரபி' ஆரம்பித்து விடலாம்' எனச் சொன்னார், டாக்டர் சாந்தா.
ஆப்பரேஷனுக்கு முன், மூன்று சுற்றுகள் கீமோதெரபி கொடுத்தனர். 'சலைன்' வழியாக, அந்த மருந்து உள்ளே போக ஆரம்பித்தவுடன், சகிக்க முடியாத ஒரு வாசனை, உடலின் உள்ளிருந்து வந்து, வாந்தி வரும். என்ன சாப்பிட்டாலும் ருசி தெரியாமல், மண்ணை சாப்பிடுவது போல இருக்கும்.
கடந்த, 2000 பிப்., மாதம், எனக்கு ஆப்பரேஷன் நடந்தது. அதன்பின், மூன்று சுற்று கீமோதெரபி, 20 முறைகளுக்கும் மேல் ரேடியேஷன் என, சிகிச்சை தொடர்ந்தது. கீமோ சிகிச்சைக்கு பின், தலைமுடி முழுவதும் கொட்டிவிட்டது. வெளியில் செல்வதற்கே சங்கடமாக இருந்தது.
டாக்டர் சாந்தா, 'நிச்சயம் நீங்கள் வேலையில் சேர வேண்டும். வழக்கம் போல, அலுவலகம் செல்ல வேண்டும். இரு பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டீர்கள். வீட்டில், கணவரும், நீங்களும் மட்டுமே. அதனால், எல்லா நேரமும், உடல் பிரச்னைகளை மட்டுமே நினைத்தபடி, பேசியபடி இருப்பீர்கள்; இது சரியல்ல. மனதளவில் இதிலிருந்து வெளியில் வந்து, வழக்கம் போல, வேலைகளைச் செய்வது தான் நல்லது' என்றார்.
எல்லாருக்கும் தெரிந்து விட்டது. ஆண்கள் நடுவில் வேலை செய்யும் போது, அவர்கள் பார்வையை எப்படி சமாளிப்பது என்ற பயம்; தவிர, 'விக்' வைத்து சென்றால், ஒரு மாதிரி பார்ப்பரே... இப்படி பல தயக்கங்கள், பயங்கள்.
ஆனாலும், டாக்டர் மேடம் கொடுத்த தைரியம், நம்பிக்கை தொடர்ந்து என்னை அலுவலகம் செல்ல வைத்தது. வேலையில் இருந்த போது, கேரம் விளையாட்டில், நான், தேசிய சாம்பியன். கடவுள் நம்பிக்கையும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, 'ஊழ்வினைப் பலன், அனுபவிச்சு தான் ஆகணும்' என்றனர்.
'இல்லை... இது ஊழ்வினை இல்லை; என் வாழ்க்கையை, நான் வாழணும். என் பேரன், பேத்திகளைப் பார்க்கணும்' என, வைராக்கியம் ஏற்படுத்திக் கொண்டேன்.
கீமோ, ரேடியேஷன் சிகிச்சை முடிந்து, தொடர்ந்து, 10 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டேன்.
முதலில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அப்புறம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை என, 'செக் - அப்'பிற்கு வருவேன்.
இப்போது, நான் முழுமையாக கேன்சரில் இருந்து வெளியில் வந்து விட்டேன்.
சிகிச்சை முடிந்து, எட்டு ஆண்டுகள் வேலைக்கு போனேன். நல்ல சங்கீதம் கேட்பேன். எப்போதும் நாம சங்கீர்த்தனம் செய்வேன். பாவம் பார்த்தவர்களின் முன், வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் தான், இந்த, 71 வயதிலும் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
நிச்சயம் சரியாகிவிடும்... நான் தான் சாட்சி! - ஜெயஸ்ரீ ஜெயராமன், தனியார் நிறுவன ஊழியர்
'டிவி'யில், மார்பக கேன்சர் குறித்து, ஒரு டாக்டர் விளக்கம் தந்ததை கேட்ட போது, என் வலது மார்பகத்தில், அவர் சொல்வதை போல, அறிகுறிகள் இருப்பதை உணர்ந்தேன். என் கணவரிடம் சொன்னேன். அந்த சமயத்தில், ஒரு காஸ்மெடிக் கம்பெனியில், 4,000 ரூபாய் சம்பளத்தில், வேலை செய்தேன். உடனடியாக, கேன்சர் மையத்திற்கு வந்து, ஆப்பரேஷன் செய்து கொண்டேன்.
கீமோ, ரேடியேஷன் சிகிச்சைகளும் இருந்தன. தலைமுடி கொட்டுவது உட்பட, எல்லா பக்கவிளைவுகளும் இருந்தன. சிகிச்சை எடுத்த நேரத்தில், சமையல் செய்வது உட்பட, வெப்பம் நேரடியாகத் தாக்கும் வேலைகளை செய்ய வேண்டாம் என, டாக்டர் சொன்னார். சில மாதங்கள் கழித்து, தொடர்ந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டேன். ரேடியேஷன் கொடுக்கும் நாட்களில், அலுவலகத்தில், 'பர்மிஷன்' போட்டு வருவேன். 20 நிமிடங்கள் ரேடியேஷன் இருக்கும்; அதன்பின், வழக்கம் போல, அலுவலகம் சென்று விடுவேன்.
என் அலுவலக நண்பர்கள், யாரும் இதை பற்றி பேசி, என்னை சங்கடத்தில் ஆழ்த்தாமல், ஆதரவாக இருந்தனர். நான், 'செக் - அப்'பிற்கு வரும் நாட்களில், கேன்சர் என்ற சொல்லை கேட்டவுடன், அதிர்ந்து போய், பயத்தோடு இருப்பவர்களிடம், நானே வலிய சென்று, என் அனுபவங்களை சொல்லுவேன். 'பயப்படத் தேவையில்லை. நம்பிக்கையுடன் இருங்கள். நிச்சயம் சரியாகி விடும். நான் தான் அதற்கு சாட்சி' என்று!

