PUBLISHED ON : ஜூன் 26, 2022

'உலக மக்களிடையே, சமச்சீரான உணவுப் பழக்கம் உள்ளதா?' என்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு நடத்தி, 'ஈட் லேன்செட்' என்ற பெயரில் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில், நம் நாட்டைப் பற்றி வெளியாகியுள்ள விபரங்கள்:
அதிக கார்போ ஹைட்ரேட் உணவையே சாப்பிடுகின்றனர்; புரதம் மிகக் குறைவாகவே, 'டயட்'டில் இடம் பெறுகிறது; சைவம், அசைவம் சாப்பிடும் இருவருக்கும் இது பொருந்தும். தேவையான அளவிற்கு காய்கறி, பழங்கள் சாப்பிடுவதில்லை. சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிக அளவு விரும்புகின்றனர்.
முழு தானியங்களை சாப்பிடுவதே நல்லது என்று தெரிந்தாலும், அரிதாகவே உணவில் இடம் பெறுகின்றன. கிராமப்புறங்களில் காலங்காலமாக இருக்கும் சிறுதானிய உணவுகள் பற்றி நகர்ப்புற மக்களுக்கு தெரிவதில்லை.
பொருளாதார வசதி இருப்பவர்களும், இந்திய பாரம்பரிய உணவை சாப்பிடுவதில்லை. வசதி குறைந்தவர்களின் உணவில், அதிகம் இடம் பெறுவது மாவுச் சத்து. நெய் சாப்பிடுவது, நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்; இதுவும் உணவில் இடம் பெறுவதில்லை.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், சாப்பிடும் உணவு, செய்யும் உடலுழைப்பிற்கு தேவையானதை விடவும் குறைவாகவே இருந்தது; ஆனால், அதிக உணவு, குறைந்த உடலுழைப்பு என தற்போது மாறி விட்டனர். பொருளாதார வசதி அதிகம் உள்ளவர்களின் உணவில் பழங்கள், காய்கறிகள் அதிகம் இடம் பெறுகின்றன. கூடவே, கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள், சர்க்கரை சாப்பிடுவதும் அதிகரித்து உள்ளது.
துரித உணவுகள் சாப்பிடவே பெரும்பாலும் விரும்புகின்றனர். மொத்தத்தில், ஈட் லேன்செட் பரிந்துரைக்கும் முழு தானியங்கள், அதிக புரதம், குறைந்த கொழுப்பு, நுண்ணுாட்டச் சத்துகள் அடங்கிய சமச்சீரான டயட்டை இந்தியர்கள் சாப்பிடுவதில்லை.
- 'லேன்செட்' மருத்துவ இதழ்
