PUBLISHED ON : ஜன 06, 2013
குருமூர்த்தி, கோமதிபுரம்: எனக்கு பல பற்களில் சொத்தை உள்ளது. பற்களை எடுத்துவிட்டு எவ்வளவு சீக்கிரம் பல் 'செட்' கட்டலாம்?
இம்மீடியட் டென்சர்' என்னும் ஒரு வகை பல் 'செட்'கள் செய்யலாம். இந்த பல் 'செட்'கள் பற்களை எடுத்தவுடன் அணியலாம். இதற்கான அளவுகளை பற்களை எடுப்பதற்கு முன்னரே பதிவு செய்ய வேண்டும். அதன்படி, பற்களை எடுத்தவுடன் இவற்றை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் 24 மணிநேரத்திற்கு கழற்ற கூடாது. இதனால், நாக்கு மற்றும் உணவுப் பொருட்கள் பல் எடுத்த இடத்தில் படாமல் சீக்கிரம் ஆற உதவும். அதற்கு பிறகு வழக்கமாக கழற்றி மாட்டும் பல் 'செட்' போல உபயோகப்படுத்தலாம். இவ்வகை உடனடியாக பல் 'செட்' அணிவதன் மூலம் பேசுவதோ சாப்பிடுவதோ தடைபடாது. வெளி இடங்களுக்கு தன்னம்பிக்கையுடன் செல்லலாம். ஆனால், இந்த பல் 'செட்'களை முறையாக பராமரிக்க வேண்டும். பற்களை அகற்றி 6 மாதம் ஆன பின் ஆறிய ஈறுகளுக்கு ஏற்றவாறு இந்த பல் 'செட்'களை மாற்றியமைத்து பொருத்திக்கொள்ள வேண்டும்.
மகாலட்சுமி, திருமங்கலம்: எனக்கு சில பற்களில் ஈறுகள் கீழே இறங்கி, பார்ப்பதற்கு அவை மட்டும் நீளமாக தெரிகின்றன. சில நேரங்களில் அவ்விடங்களில் கூச்சம் ஏற்படுகின்றன. இதற்கு என்ன செய்யலாம்?
பல்லின் மேற்பகுதியும், வேர் பகுதியும் சேரும் இடத்தில் தான் பல்லின் ஈறு ஆரம்பிக்க வேண்டும். அழுத்தமாக பல் தேய்ப்பது. கோணலான பல் வரிசை, நாள்பட்ட ஈறு நோய் போன்ற சில காரணங்களால் ஈறு அவ்விடத்தில் இருந்து கீழே இறங்கும். அப்பொழுது பல்லின் வேர் பகுதி வெளியே தெரிய ஆரம்பிக்கும். இதுவே கூச்சத்திற்கு காரணம். இந்த பற்களில் சொத்தை வருவதற்கும் வாய்ப்பு அதிகம். இதற்கு 'கிராப்டிங்' என்னும் அறுவை சிகிச்சை முறையில் ஈறுகளை பழைய நிலைக்கு கொண்டு வரலாம். இச்சிகிச்சை முறையில் ஈறுகளின் கீழே உள்ள கிருமிகளை நீக்கி விட்டு அவற்றை உரிய இடத்தில் வைத்து சில மருந்துகளையும் சேர்த்து கட்டி விட வேண்டும். இந்த நவீன சிகிச்சை முறை மூலம் 10 முதல் 14 நாட்களில் ஈறுகள் ஆரோக்கியமாகி, பற்களும் பலம் பெரும்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551