PUBLISHED ON : டிச 15, 2013

சர்க்கரை நோயுள்ள எனக்கு வலதுபுறத்தில் தீராத வலி உள்ளது. எனது தோள்பட்டையை அசைக்கவும் முடியவில்லை. ஒரு டாக்டர், 'எனக்கு மயக்கம் கொடுத்து தோள்பட்டையை திருப்பி விட வேண்டும்' என்றும், மற்றொரு டாக்டர், 'மூட்டு நுண்துளை சிகிச்சை செய்து சரிசெய்யலாம்' என்றும் கூறுகின்றனர். இதில் எதை செய்வது நல்லது?
உங்களுக்கு, 'புரோசன் சோல்டர்' என்னும் நோயில் தோள்மூட்டினில் உள்ள உறை இறுகி இருக்கும். ஆர்த்ராஸ்கோபி செய்தால், இறுகிய உறுப்பை வானொலி அதிர்வு அலைகள் கொண்ட கருவிகள் மூலம் துல்லியமாக சீரமைக்க முடியும். வலியும் இருக்காது. இயல்பான வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப முடியும்.
அதுவே மயக்க மருந்து கொடுத்து, தோள்பட்டையை திருப்பி விடும்போது, வலி அதிகமாக இருக்கும். மேலும் மீண்டும் இறுகுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே நவீன தொழில்நுட்பத்தில் செய்யப்படும், ஆர்த்ராஸ்கோபி சிகிச்சை முறையே சிறந்த பலனை அளிக்கும்.
எனது வயது 22. ஓராண்டுக்கு முன் விளையாடும்போது, மூட்டினில் அடிபட்டதில், 'ஏ.சி.எல்., லிகாமென்ட்' கிழிந்துவிட்டது. மூட்டினில் நிலையற்ற தன்மையை உணர்ந்த எனக்கு, தற்போது வலியும், ஓசையும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன?
விளையாடும்போது மூட்டினில் அடிபட்டு, ஏ.சி.எல்., லிகாமென்ட் கிழிவது சகஜமானதுதான். அப்படி கிழிந்தால், அதை கூடிய விரைவில் சீரமைத்துக் கொள்ள வேண்டும். லிகாமென்ட் சரியாக இயங்காவிட்டால், மூட்டினில் தேய்மானம் மற்றும் மெனிஸ்கஸ் என்ற உறுப்பு கிழிவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், ஏ.சி.எல்.,லிகாமென்ட்டை ஆர்த்ராஸ்கோபி மூலம் சீரமைத்தால், நான்கு மாதங்களில் மீண்டும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியும். மேற்கொண்டு விளையாடும்போது, மூட்டினில் உறையை அணிந்து நன்றாக 'வார்ம் அப்' செய்தபின் விளையாடினால் இவ்வாறு லிகாமென்ட் கிழிவதை தவிர்க்க முடியும்.
74 வயதான எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் வலது முழங்காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூட்டு அசைவு ஓரளவே உள்ளது. தற்போது இடது முழங்காலில் வலி உள்ளது. அதிலும், மூட்டு மாற்று சிகிச்சை செய்ய உள்ளேன். மூட்டின் அசைவு அதிகமாக இருப்பதற்கு சமீபத்தில் 'ஹைபிளக்ஸ் என்னும் மூட்டு' வந்துள்ளதாக அறிகிறேன். அதை பொருத்தினால் மூட்டின் அசைவு நன்றாக இருக்குமா?
மூட்டு மாற்று சிகிச்சை வலி நிவாரணம் அளிக்கும். மூட்டின் அசைவை பொறுத்தவரை, மூட்டினில் சிகிச்சைக்கு முன் இருந்த அசைவின் அளவு, செய்யப்படும் தொழில் நுணுக்கத்தை பொறுத்தவை ஆகும். ஹைபிளக்ஸ் என்னும் மூட்டு போடப்பட்டாலும், சரியான தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டால்தான் மூட்டின் அசைவு நன்றாக இருக்கும். இதை மனதில் கொண்டு டாக்டரிடம் ஆலோசனை செய்யவும்.
டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,
மதுரை. 93442- 46436

