PUBLISHED ON : டிச 22, 2013

மார்பை பிளந்து தான், இதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மருத்துவத் துறை வளர்ச்சியால், நுண்துளை வாயிலாகவே ஆபரேஷன் செய்து விட முடியும்
ராஜேஷ், சென்னை: எனக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. பெண் குழந்தை வேண்டும் என்பதே விருப்பம். என் மனைவி, ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறாள். 'ஸ்கேன்' செய்த டாக்டர், 'இதயத்தின் கீழ் பகுதியில், இரண்டு அறைகளுக்கு பதிலாக, ஒரு அறை தான் உள்ளது. குழந்தை பிறந்ததும், பாதிப்பு பெரிதாக இருக்கும்; அபார்ஷன் செய்து விடுங்கள்' என்கிறார். குழந்தையை காப்பாற்ற முடியாதா?
கண்டிப்பாக முடியும். அதற்கு தேவையான அனைத்து உடனடி மற்றும் பின் கவனிப்பு போன்ற அதிநவீன சிகிச்சைகள் உள்ளன. குழந்தை பிறந்ததும், நீல நிறமாக இருந்தால் (சயனோசிஸ்), நரம்பு வழியாக ஒரு குழாயை இணைத்து, 'கத்தீடர் செப்டாஸ்டமி' எனும் சிகிச்சையை, ஆஞ்சியோகிராம் மூலம் செய்து, உடனடியாக ஆபத்தின்றி காப்பாற்றி விடலாம். பின், 10 மாதத்தில், 10 கிலோ எடையை அடைந்ததும், முழு அளவில் குணப்படுத்த முடியும். பிறந்த குழந்தைகளை பராமரிக்கும், சிறப்பு சிகிச்சை உள்ள மருத்துவ மனைகளில் பிரசவம் பார்ப்பது அவசியம்.
சந்திரன், புதுக்கோட்டை: எனக்கு இதய நோய் உள்ளது. ஆபரேஷன் தான் தீர்வு என, டாக்டர் கூறுகிறார். பக்கத்து வீட்டு பெண்மணி, அரசு மருத்துவமனையில், ஆஞ்சியோகிராம் செய்து பார்த்து, மருந்து, மாத்திரை சாப்பிட்டால் போதும் என்கிறார். எனக்கு குழப்பமாக உள்ளது; என்ன செய்ய வேண்டும்?
ஓய்வில் இருக்கும்போதே நெஞ்சு வலி; தலை சுற்றல், மயக்கம், வியர்வை அதிகமாதல்; ஆஞ்சியோகிராம் செய்ததில், 'முக்கிய தமனி அடைப்பு, மூன்று பிரதான ரத்தக் குழாய்களில் அடைப்பு' ஆகியவை கண்டறியப்பட்டால், கட்டாயம் ஆபரேஷன் செய்ய வேண்டும். இது போன்ற அறிகுறிகள் இல்லை என்றால், மருந்து, மாத்திரைகளே போதும்; ஆபரேஷன் தேவையில்லை.
பானுமதி, திருவண்ணாமலை: எனக்கு வயது, 65. இதய நோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளது. சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. டாக்டரோ, தினமும் காலை, மாலை, 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்கிறார். கால் வீக்கத்துடன், வலியும் உள்ளது. நான் எப்படி சர்க்கரை அளவை குறைப்பது?
இதய நோய் அடைப்பு இருந்தால், 'எக்கோ' பரிசோதனை செய்து, இதயத்தின் செயல்பாடு சதவீதம் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். இதயத்தின் செயல்பாடு, 25 சதவீதம் இருந்தால், 50 சதவீதமாக மாற்ற, 'ஆன்டி பெயிலியர் டிரீட்மென்ட்' செய்ய வேண்டும்.
நெஞ்சு வலி இருந்தால், சுவாசக் கோளாறு இருந்தால், ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பை-பாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும். கால் வீக்கத்திற்கும், கால் வலிக்கும், விசேஷ செருப்பு அணிந்து நடை பயிற்சி செய்யலாம்; வலி இருக்காது; சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
ராமநாதன், ராமேஸ்வரம்: என், 87 வயதில் நெஞ்சு வலியுடன் கூடிய இதய பாதிப்பு ஏற்பட்டு, இதய செயல்பாடு, 20 சதவீதமே உள்ளது என கூறுகின்றனர். நான் ஆபரேஷன் செய்யலாமா? மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா?
நெஞ்சு வலியுடன், 10 அடி கூட நடக்க முடியாமல், ஆஞ்சியோகிராம் டெஸ்டில் மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், ஆபரேஷன் செய்வதே நல்லது. தற்போது, மார்பை பிளந்து, ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. மருத்துவத் துறை வளர்ச்சியால், நுண்துளை வாயிலாக, பை-பாஸ் ஆபரேஷனும் செய்ய முடியும். அதுபோன்று இல்லை என்றால், மருந்து, மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியும்; பயம் வேண்டாம்.
தாமரைச்செல்வி, புதுக்கோட்டை: எனக்கு வயது, 16. இதய வால்வு பாதிப்புக்கு, இரண்டு வால்வுகளையும் மாற்ற வேண்டும் என்கின்றனர்; இது சரியா, வேறு வழி ஏதும் உண்டா?
நீங்கள் குழந்தையாக இருந்தபோது, ருமாட்டிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிய வேண்டும். முட்டிக்கால் வீங்கி வலியுடன் கூடிய காய்ச்சலா, அடிக்கடி தொண்டை கட்டி, சளியால் ஏற்படும் காய்ச்சலா என, அறிய வேண்டும். அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்றால் மருந்து, மாத்திரைகள் போதும்.
'எக்கோ' பரிசோதனையில், இரண்டு வால்வுகளும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால், வால்வு மாற்றுவதே சிறந்தது. அதைத் தவிர, வால்வு சுருக்கம், குறைந்த அளவில் இருந்தால், ஆபரேஷன் செய்வதை தள்ளிப் போடலாம்; ஆபரேஷன் தேவைப்படாமலும் இருக்கலாம்.
டாக்டர். கே.எஸ்.கணேசன்
இதய நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை.

