ஆர்.செந்தமிழ், மதுரை: கருவுற்று இருக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை எவை?
நிதானமாக இருக்க வேண்டும், டென்ஷன் ஆகக் கூடாது. குறைந்தது, 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தாய், சேய் நலம் தொடர்பான புத்தகங்களை படிக்கலாம். கர்ப்பமுற்ற முதல் நான்கு வாரத்திலும், நிறை மாதத்தில், நான்கு வாரத்திலும், கணவன் - மனைவி சேர்க்கையை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
எஸ்.ராஜலட்சுமி, திண்டுக்கல்: கர்ப்பமான பெண்கள், எந்தெந்த நேரத்தில் உடனடியாகச் சென்று டாக்டரை பார்க்க வேண்டும்?
கால், முகம் வீங்குதல், வயிற்று வலி, பிறப்பு உறுப்பில் இருந்து உதிரப்போக்கு, கண் பார்வை திடீரென மங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரை பார்ப்பது நல்லது. மேலும் காய்ச்சல், தொடர்ச்சியான வாந்தி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் (நீர்க்கடுப்பு), பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறுதல், சிசு அசைவின் தன்மை மாறுதல் போன்றவை ஏற்பட்டாலும், டாக்டரை உடனடியாக அணுகி, ஆலோசனை பெறுவது நல்லது.
சி.பார்வதி, உத்தமபாளையம்: கருவை சுமக்கும் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகை எவை?
பச்சை இலையுள்ள காய்கறிகளில், 'போலிக்' அமிலச்சத்து உள்ளது. இவற்றை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் புரதம், கொழுப்புச்சத்து, இரும்பு, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி அடங்கிய காய், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், மனதுக்கு விருப்பமான, உடலை பாதிக்காத உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆர்.விஜயலட்சுமி, பரமக்குடி: கர்ப்பமான பெண்கள், எவ்வகை உடற்பயிற்சியை மேற்கொள்வது, உடலுக்கு நலம் பயக்கும்?
ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் முன் செய்த உடற்பயிற்சிகளை தொடரலாம். ஆனால், அதிகம் களைப்படையாதவாறு, உடற்பயிற்சி செய்வது முக்கியம். வேலைக்குச் செல்லும் பெண்கள், நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.
கே.செல்வி, சிவகங்கை: எத்தகைய பெண்கள் உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது?
வளர்ச்சி குன்றிய கரு, இரட்டைக் குழந்தை கரு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள், டாக்டரிடம் ஆலோசனை பெற்று, பின், உடற்பயிற்சி செய்வதே நல்லது.
எல்.அன்னபூரணி, விருதுநகர்: கர்ப்பிணிப் பெண்கள் எத்தனை மாத இடைவெளிகளில், என்னென்ன மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்?
கருவுற்றதில் இருந்து, ஏழு மாதம் வரையிலும், மாதம் ஒருமுறையும், எட்டு மற்றும் ஒன்பதாவது மாதங்களில், மாதம் இருமுறையும், கடைசி, 10வது மாதத்தில், ஒவ்வொரு வாரமும், பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
முதல் பரிசோதனையாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அறிய வேண்டும். ரத்த வகை, சர்க்கரை அளவு, பால்வினை நோய், எச்.ஐ.வி., வைரஸ், மஞ்சள் காமாலை வைரஸ் தொற்று, சிறுநீரில் உப்புச்சத்து, சர்க்கரை சத்து, தேவைப்பட்டால், 'கல்ச்சர் டெஸ்ட்' செய்து கொள்ள வேண்டும்.
டாக்டர் என்.கே.மகாலட்சுமி
தேனி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை.

