PUBLISHED ON : ஜூன் 24, 2012
1. நாற்பது வயதான எனக்கு, சமீபகாலமாக மிக அதிகமாக எச்சில் சுரப்பது போல உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
உமிழ்நீர் வாயினுள் அதிகம் இருப்பதற்கு, இரண்டு காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, நாள் ஒன்றுக்கு, 0.5 முதல், 1.5 லிட்டர் அளவு உமிழ்நீர், நம் வாயினுள் உருவாகிறது. உமிழ்நீர் சுரப்பிகள் அதிகமாக சுரக்கும்போது, உமிழ்நீர் உற்பத்தி கூடலாம். இதுபோல வாயினுள் உள்ள உமிழ்நீரை சரியாக விழுங்க முடியாவிட்டாலும், இப்பிரச்னை ஏற்படலாம்.
சரியாக செரிமானம் இல்லாததால் ஏற்படும் நோய், வாய் மற்றும் தொண்டையில் ஏற்படும் இன்பெக்ஷன், புதிதாக கட்டப்பட்ட, பொருந்தாத பல்செட், அதிக டான்சில் வளர்ச்சி மற்றும் தசை நோய்கள் காரணமாக, உமிழ்நீரை சரியாக விழுங்க முடியாது.
சில சமயங்களில், டி.பி., போன்ற பிற நோய்களாலும் இப்பிரச்னை ஏற்படலாம். எனவே காரணத்தை கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் இப்பிரச்னையை சரிசெய்யலாம். தங்களை பரிசோதித்த பின், தேவை இருப்பின் அதிக உமிழ்நீர் சுரப்பை குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
2. எனது தந்தையின் வயது 65. இரு ஆண்டுகளுக்கு முன் இதய நோய்க்காக, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்யப்பட்டு, மாத்திரை எடுத்து வருகிறார். கீழ் கடைவாய் பல் ஆடுகிறது. இவருக்கு பல் எடுக்கலாமா?
பொதுவாக பற்கள், மிக சிறிதளவு ஆட்டத்துடன் இருந்தால், பல்லை சுற்றியுள்ள எலும்பு நன்றாக இருப்பின், ஈறுகளை சுத்தம் செய்து, காப்பாற்ற முடியும். ஆகவே, அவரை பரிசோதித்து பின் பல் எடுக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். பல் எடுக்க முடிவு செய்தால் ஒரு சிறிய ரத்தபரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், பொதுவாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்தவர்கள் ரத்தம் உறையாமல் இருக்க சில மாத்திரைகள் உட்கொள்வர். ஆகையால் பல் எடுத்தபின், அந்த இடத்தில் ரத்தம் உறைவதற்கான நேரத்தை கணக்கிட, இப்போது, ஐ.என்.ஆர்., எனப்படும் பரிசோதனை அளவை, பார்க்க வேண்டும். தற்போதைய ஆய்வின்படி, இந்த அளவு, 1.5க்கு கீழ் இருந்தால், இதய நோய்க்கான மாத்திரைகளை நிறுத்தாமல், பல் எடுக்கலாம். இத்துடன், இதய நிபுணரின் ஆலோசனையையும் பெற்று, பல்லை எடுக்கலாம்.
டாக்டர் எஸ்.முத்துராமன், மதுரை.

