"ஜிம்'முக்கு செல்லாமல் என்ன உடற்பயிற்சி செய்யலாம்?
"ஜிம்'முக்கு செல்லாமல் என்ன உடற்பயிற்சி செய்யலாம்?
PUBLISHED ON : அக் 24, 2010

கணேசன், சென்னை: என் மனைவிக்கு, 20 நாட்களுக்கு ஒருமுறையும், சில சமயங்களில் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் மாதவிலக்கு ஏற்படும்; அதுவும் மிகக்குறைந்த அளவு ரத்தப்போக்கே இருக்கும். எங்களுக்கு 8 வயதில் குழந்தை உள்ளது. தற்போது அவள் கர்ப்பமடையாத நிலையில், மார்பகத்திலிருந்து பால் சுரக்கிறது. இது எதனால்?
அசாதாரணமான சமயங்களில் இவ்வகை பால் சுரப்பு ஏற்படுவது, 'கேலக்டோரியா' எனப்படும். 25 சதவீத பெண்களுக்கு ஏற்படும்; ஆனால், இதை சாதாரண நிகழ்வாக எடுத்து கொள்ளக் கூடாது. சில மருந்து வகைகளால் இப்படி ஏற்படலாம்; சிலருக்கு தைராய்டு சுரப்பது குறைந்தால் இப்படி ஏற்படும். தைராய்டு சுரப்பதை சீர் செய்வதற்கான சிகிச்சை மேற்கொண்டால், இந்நிலையிலிருந்து மீளலாம். ஆனால், இது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. பால் சுரக்க காரணமாகும், 'புரோலாக்டின்' ஹார்மோன் சுரக்கும் அளவு, சிறுநீரகச் செயல்பாடு ஆகியவை குறித்தும் பரிசோதிக்க வேண்டும். பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடு குறித்து அறிய, மூளையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கலாம்.
சுந்தரலிங்கம், திருப்பூர்: உடற்பயிற்சியில் ஓட்டப்பயிற்சி சிறந்தது என படித்திருந்தாலும், இதற்கு இணையான வேறு பயிற்சி உள்ளதா? நான் ஜிம்முக்கும் செல்வதில்லை. மேலும், நான் இருக்கும் தெரு மேடு, பள்ளமாக இருப்பதோடு, நாய்களும் சுற்றித் திரிகின்றன...
நம்மால் முடிந்த உடற்பயிற்சிகளை, தினம் ஒரு மணி நேரம் செய்வதன் மூலம், இதை சரி செய்யலாம். ஓடுவது, குதிப்பது அல்லது விரைவாக நடப்பது போன்றவை, அதற்கு இணையான நல்ல பலனை கொடுக்கின்றன. உங்களால் ஓட்டப்பயிற்சி செய்ய முடியாவிட்டால், தொடர்ந்து அரை மணி நேரம் படியேறி இறங்குதல் அல்லது ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம்.
'ஸ்கிப்பிங்' செய்யும் போது, காலுக்குப் பொருந்தாத ஷூ அணிந்தால், உங்கள் முட்டியை பதம் பார்த்து விடும். நீச்சல் பயிற்சி நல்லது எனினும், உடல் எடையைத் தாங்கி செய்யப்படும் பயிற்சி அல்ல. எனவே, நீச்சலுடன் ஓட்டப் பயிற்சியோ, நடை பயிற்சியோ செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்தாலும், கூடவே 20 நிமிடம், உடலை நீட்டி, நெகிழ்த்தும் வகையிலான பயிற்சியும், யோகாவும் செய்ய வேண்டியது அவசியம்.
குணசேகரன், கம்பம்: 24 வயதான எனக்கு, இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய ஆண்குறி வளைந்து இருப்பதால் சிறுநீர் வெளியேறாமல், மற்றொரு துளை வழியாக வெளியேறுகிறது. இது என்னுடைய திருமண வாழ்க்கையை பாதிக்குமா?
'ஹைபோஸ்பாடியாசிஸ்' என்று இதற்கு பெயர். சிறுநீர் வெளியேறும் துளை, ஆண்குறியின் அடியில் காணப்படுவதால், இது போன்ற நிலை ஏற்படுகிறது. உங்களுக்கு, ஆண்குறியின் வட்டம், கீழ் நோக்கி இருக்கும். நீங்கள் குழந்தையாக இருந்தபோதே, பெற்றோர் இதை கவனித்திருக்க வேண்டும். வாலிப வயதில் இது போன்ற நிலை, உடலுறவு கொள்வதில் சிரமம் ஏற்படுத்தும். சிறுநீர் துளையை நேர்படுத்தும் வகையிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 3 வயதுக்குள் இதை செய்திருக்க வேண்டும்; எனினும், எந்த வயதினரும் செய்து கொள்ளலாம்.
- டாக்டர் கீதா மத்தாய்

