PUBLISHED ON : ஆக 10, 2025

பல நரம்பியல் கோளாறுகளின் பொதுவான அறிகுறியாக தலைவலி இருந்தாலும், தலைவலிக்கு பிரதானமாக சில காரணங்கள் உள்ளன.
முதலாவது, கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றத்தில், இரவு நேர வேலை அதிகமாகி விட்டது. இதனால், துாங்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வேலை செய்வது, தலைவலி வருவதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, பலவிதமான வெளிப்புற காரணிகள் மைக்ரேன் தலைவலியை துாண்டினாலும், துாங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிக முக்கிய காரணியாக உள்ளது.
ஏன் ஒன்பது மணி நேரம்?
துாங்க ஆரம்பித்த முதல் 90 நிமிடங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வோம். அதன்பின் சில மைக்ரோ வினாடிகள், அதாவது, 1 வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் விழிப்பு வரும்.
அந்த நேரத்தில் ஆழ்ந்த சுவாசம், திரும்பி படுப்பது போன்ற செயல்கள் நடப்பது வழக்கம். இதற்கு பின், அடுத்த 10 -- 20 நிமிடங்கள் மிதமான உறக்கம், அதன் பின், சில மைக்ரோ வினாடிகள் மீண்டும் விழிப்பு வரும். அடுத்த 60 நிமிடங்கள் ஆழ்ந்த உறக்கம் இருக்கும்.
ஆழ்ந்த உறக்கம், விழிப்பு, மிதமான உறக்கம் என்ற இந்த சுழற்சியில், துாக்கத்தின் ஆரம்பத்தில் ஆழ்ந்த உறக்கம் அதிக நேரமும், காலையில் விழிப்பதற்கு முன் மிதமான உறக்கம் நீண்ட நேரமும் இருக்கும்.
அதிகாலையில் வரும் கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதற்கு, அந்த நேரத்தில் நாம் மிதமான உறக்கத்தில் இருப்பது தான் காரணம்.
தினமும் இரவில் உறங்கும் போது, ஆழ்ந்த துாக்கம், விழிப்பு, மிதமான துாக்க சுழற்சி ஏழு முறை இயல்பாக நடக்க வேண்டும். இதற்கு ஒன்பது மணி நேர துாக்கம் அவசியம்.
துாக்கத்தில் என்ன நடக்கும்?
மத்திய நரம்பு மண்டலத்தில் கிளிம்பேடிக் - என்ற அமைப்பு இருக்கிறது.
இந்த அமைப்பு, தினசரி நடந்த நிகழ்வுகளில், நினைவில் பதிய வைக்க வேண்டியவை, அழிக்க வேண்டிய தேவையற்ற நினைவுகளை பிரிப்பது, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவது போன்ற செயல்களை செய்கிறது. உறக்க சுழற்சியில் ஆறு முறை ஆழ்ந்த துாக்கம் இருக்கும்.
ஆழ்ந்த உறக்கத்தில் ஏற்படும் ரெம் எனப்படும், கண்களின் அசைவு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நாளில் ஆறு மணி நேரம் மட்டுமே துாங்கினால், இந்த சுழற்சியில் ஒன்றிரண்டு குறையும். இதனால், செரிமானம் தொடர்பான பிரச்னை முதலில் ஆரம்பிக்கும். போதுமான அளவு நச்சுகள் வெளியேறாமல் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
துாக்கமின்மையால் ஏற்படும் குறிப்பிட்ட சில கோளாறுகளை குணப்படுத்த முடியாது.
தொடர்ந்து நச்சுகள் உடலில் சேர்ந்து, தேவையற்ற புரதங்கள் மூளையில் படிந்து விடும்.
இது பின்னாளில் மறதி நோய் -டிமென்ஷியா, அல்சைமர் ஏற்பட வாய்ப்பாக அமையும். அதனால், துாக்கம் மிகவும் அவசியம்.
பொதுவாக, 60 வயதிற்கு மேல் வரும் இப்பிரச்னை தற்போது 45 வயதிலேயே வருகிறது. உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இது, மூளை நரம்பு செல்களிடையே புதிய தொடர்பை ஏற்படுத்த உதவும்.
தினசரி ஒழுங்கு முறையை என்னால் கடைப்பிடிக்க முடியாது. வார இறுதியில் சேர்த்து துாங்குகிறேன் என்றால் பலன் தராது.
காரணம், இது உயிரி கடிகார சுழற்சியையும், ஹார்மோன் செயல்பாட்டையும் பாதிக்கும்.
தற்போது சராசரி துாக்க நேரம் -ஆறு மணி நேரம் என்றாகி விட்டது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் துாக்கம் தொடர்பான நோய் பரவல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
டாக்டர் பிரபாஸ் பிரபாகரன், நரம்பியல் மருத்துவ ஆலோசகர், சென்னை 044 - 2000 2001, 9877715223enquiry@simshospitals.com

