தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/என்னவானது நம் மாணவ செல்வங்களுக்கு? விளக்குகிறார் மனநல மருத்துவர்

என்னவானது நம் மாணவ செல்வங்களுக்கு? விளக்குகிறார் மனநல மருத்துவர்

என்னவானது நம் மாணவ செல்வங்களுக்கு? விளக்குகிறார் மனநல மருத்துவர்


PUBLISHED ON : பிப் 12, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

''வகுப்பறையில் வேறுபாடான மனநிலை, உடல் நிலை உள்ள அனைத்து மாணவர்களும்ஒரே மாதிரியாக அதிக மதிப்பெண் பெற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது தவறு. வகுப்பறையில் ஆசிரியர் - மாணவர் மோதலுக்கு இதுவே அடிப்படை காரணம்,'' என, கோவையை சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் மணி கூறினார்.

சென்னை பள்ளி ஆசிரியர், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. என்னவானது நம் மாணவர்களுக்கு? குறைபாடு, கற்பித்தலிலா, மாணவர்கள் கற்பதிலா? இலைமறைவு காய் மறைவாக இருந்த அனைத்தையும், கற்றுக் கொடுக்கும் நவீன தொழில் நுட்பத்திலா?

கோவையைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் மணி விளக்குகிறார்:

மனிதனுக்கு மனிதன், மனநலம் வேறுபடுகிறது. சிலர், டென்ஷன் ஆக இருப்பர்; வேறு சிலர் அமைதியாக இருப்பர். அதே போல் ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமான மனநலம் கொண்டவை. வகுப்புக்கு செல்ல பயப்படும் குழந்தை, கற்றலில் குறைபாடுள்ள குழந்தை, எதிர்மறை எண்ணம் கொண்ட குழந்தை, வசதி மற்றும் வறுமையான பின்னணியில் வளரும் குழந்தைகள், கவனச் சிதறல், கண் பார்வை குறைபாடுள்ள குழந்தை, நினைவு மற்றும் அறிவுத்திறன் குறைந்த குழந்தை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தை, வலிப்பு, ஆஸ்துமா, சர்க்கரை நோய்கள் உள்ள குழந்தை, மன தளர்ச்சி உள்ள குழந்தை, பெற்றோரை பிரிந்து வசிக்கும் குழந்தை... என, ஒரு வகுப்பில் இவ்வளவு வெவ்வேறான மனநலம், உடல் நலம், பொருளாதார பின்னணி, குடும்பச் சூழல் கொண்ட குழந்தைகள் உள்ளனர். ஆகவே, ஒருவருக்கு கற்பிப்பதை போல் அனைவருக்கும் கற்பிப்பதும், அனைவரிடமும் அதிக மதிப்பெண்களை எதிர்பார்ப்பதும் தவறு. புத்திக் கூர்மை என்பது, பாரம்பரியம் சார்ந்தது. ஆனால், இவற்றை புரிந்து கொள்ளாத ஆசிரியர்கள் சிலர், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை, திட்டுகின்றனர்; சக மாணவ, மாணவியர் முன்னிலையில், குறை கூறுகின்றனர்.

குறைவாக மதிப்பெண் பெறுவதற்கான காரணத்தை கண்டறிந்து, தீர்வு காணும் ஆசிரியர்கள் குறைவு. தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் பிரஷருக்கு கீழ்படிய, அவர்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. இன்றைய காலகட்டத்தில் சிறியவர், பெரியவர் என, எவருக்கும் மனதளவிலோ, உடலளவிலோ குறை கூறுவது, திட்டுவது, தண்டிப்பது பிடிப்பதில்லை. சகிப்புத் தன்மையும் குறைந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் உரிமையை தாங்களே எடுத்துக் கொள்கின்றனர். ஆகவே, மாணவர்களை திட்டுவதும், அடிப்பதும், பிரச்னைக்கு தீர்வு தராது. மதிப்பெண் சார்ந்த நமது தேர்வு முறையிலும், மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகரின் உதவியுடன், ஒவ்வொரு பள்ளியிலும், மாதந்தோறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது, பிரச்னைகளுக்கு தீர்வு தரும்.

பொதுவாகவே 14, 15 வயது மாணவர்களுக்கு, பிரச்னைகளை பகுத்து ஆராயும் குணம் (அஞண்tணூச்ஞிt கூடடிணடுடிணஞ்) இருக்காது. இந்த வயதில், மற்றவர்களைப் பார்த்து, 'காப்பி' அடிக்கும் எண்ணம் மேலோங்கும் என்பதால், சினிமா ஹீரோக்களை அப்படியே பின்பற்றுகின்றனர்.

எதார்த்த நிலைகள் குறித்து, ஆசிரியர்கள் தான் இந்த மாணவர்களுக்குப் பொறுமையாக விளக்க வேண்டும். பள்ளிகளில் சிறு வயது முதலே தியானம், யோகா, கவுன்சிலிங் பயிற்சிகள் அளிப்பதும் பயன் அளிக்கும்.

இவ்வாறு டாக்டர் மணி கூறினார்.

'வாழ்க்கைத் திறன் பயிற்சி அளிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை'

''ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'லைப் ஸ்கில்'(வாழ்க்கைத் திறன்) பயிற்சி அளிக்க, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது, முடிவு எடுக்கும் திறனை வளர்ப்பது, தகவல் தொடர்பு திறன் வளர்ப்பு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன் உள்ளிட்ட திறன்களை வளர்க்க, பயிற்சி பெற்ற பள்ளியின், 'கவுன்சிலர்' முன்னிலையில், மாதம் ஒருமுறையாவது பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த திறன்கள் சென்றடைந்து விட்டால், பள்ளி ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு, பிரச்னைகள் விஸ்வரூபம் எடுப்பதை தவிர்க்கலாம்,'' என்றார் டாக்டர் மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us