கழுத்தில் கருமை தோன்ற காரணம் என்ன? சில சந்தேகங்கள்... சில பதில்கள்
கழுத்தில் கருமை தோன்ற காரணம் என்ன? சில சந்தேகங்கள்... சில பதில்கள்
PUBLISHED ON : ஜூலை 25, 2010

வே.புஷ்ப மாலதி, வத் தலக்குண்டு: எனது கணவரின் வயது 40. மூக்கின் மீது கருப்பாகவும், கண்ணை சுற்றி கீழ்ப்பகுதியில் கருவளையமும், மேலும் மூக்கையொட்டி இரு பகுதிகளிலும், தழும்பு போன்றும் காணப்படுகிறது. என்ன காரணம்? அதற்குரிய தீர்வை கூறுங்கள்?
மருந்துகளின் பக்க விளைவாக தோலில் நிறம் கூடியிருக்கலாம். சல்பா அடங்கிய மருந்துகளும், வலி நிவாரணிகளும், உடலின் சில இடங்களில் இது போன்று நிறமற்ற அல்லது அதிக நிறம் ஏற்படும் தன்மையை ஏற்படுத்தி விடும். உங்கள் கணவர் மருந்து ஏதும் உட்கொள்ளவில்லை எனில், 'ஹைபர் ஹோமோசிஸ்டினீமியா' என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். உடலில் இயற்கையாக தோன்றும் அமினோ அமிலம் அளவு, ரத்தத்தில் அதிக அளவு கலந்திருக்கலாம். வயது ஏற ஏற, இந்த அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால், மூக்கு, கண் ஆகிய இடங்களைச் சுற்றி கருமை நிறம் ஏற்படும்.
பாலிக் அமிலம் அடங்கிய மருந்துகள் சாப்பிட்டு இதை குணப்படுத்தலாம். கழுத்தில் இது போன்று கருமை நிறம் தோன்றினால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகக் கருதலாம். மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும்.
ரெட்டின் ஏ அல்லது 4 சதவீதம் ஹைட்ரோக்வினான் அடங்கிய மருந்துகள் பயன்படுத்தலாம். டால்கம் பவுடர் போடக் கூடாது. பவுடர் போட்டு வெயிலில் நடப்பது, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, முகத்தில் கரும்படலம் ஏற்பட்டு விடும். எஸ்.எப்.15 அடங்கிய சன்ஸ்கிரீன் கிரீம் பூசிக் கொண்டு, கருப்பு நிற குடையுடன் வெயிலில் சென்றால், இது போன்ற கருமையை தவிர்க்க முடியும்.
ஏ.விவேக், கருமாத்தூர், மதுரை: என் வயது 25. இளம் வயதிலேயே முடி கொட்டுதல் அதிகமாக உள்ளது. தலையின் மையப் பகுதியில் முடிகள் உதிர்ந்து, அடர்த்தி குறைந்தும், ஆங்காங்கே சொட்டையாகவும் உள்ளது. முடி உதிர்வதை தடுக்கவும், இழந்த முடிகளைப் பெறவும், சொட்டையில் முடி வளரவும் மருந்து, மாத்திரை உண்டா? சொட்டை பிரச்னைக்கான காரணத்தை கூறவும்.
பெண்களை விட, ஆண்களுக்கு இள வயதிலேயே முடி கொட்டத் துவங்கி விடும். முன் தலையில் துவங்கி, உச்சந்தலையில் முழு முடியும் கொட்டும். தலையின் இரு பக்கத்திலும் வழுக்கை ஏற்படும். ஆண்கள் வழுக்கை என இதை அழைப்பர். இது பரம்பரையாக ஏற்படுவது; தவிர்க்க முடியாதது.
'மினாக்சிடில்' என்ற மருந்து தட வலாம். எனினும், இதை நிறுத்திய பின், மீண்டும் முடி கொட்டி விடும். பெரும்பாலானோர், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' செய்து கொள்கின்றனர். பிளாஸ்டிக் சர்ஜன்கள் இதைச் செய்வர். இல்லையெனில், ஆங்கில நடிகர் யூல் பிரைனர் அல்லது டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசி போல, தலையை அப்படியே விட்டு விடலாம். ஏனெனில், 'பால்டு இஸ் பியூட்டிபுல்' என்றழைக்கப்படுகிறது!
ஆர்.முரளி கிருஷ்ணன், கோவை: 20 வயது இளைஞன் நான். என் தலையில், வேகமாக முடி உதிர்கிறது. இதை தடுப்பது எப்படி?
உங்கள் தலையில் 'வேகமாக முடி கொட்டுகிறது' என்று நீங்கள் கூறுவதால், தலை முழுவதிலும் இருந்து முடி கொட்டுவதாகக் கருதுகிறேன். இது பரம்பரையான முடி உதிர்தல் பாணி இல்லை என்றும் கருதுகிறேன். சத்துணவு சாப்பிடாமை தான் இதற்கு முக்கிய காரணம். தினமும் நான்கு வேளையும், பழம், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, கால்சியம் சி சத்து அடங்கிய மாத்திரைகள் சாப்பிடலாம். அனைத்தையும் ஒரே வேளையில் விழுங்கக் கூடாது. 12 மணி நேர இடைவெளியில் சாப்பிட வேண்டும். தலைக்கு குளிக்கும் போது, 'மில்க் பேபி ஷாம்பூ' பயன்படுத்தவும். தலை குளித்த பிறகு, 'பேபி ஆயில்' தடவவும். பல் அகலமாக உள்ள சீப்பால், மென்மையாக தலையை வாரிக் கொள்ளவும்.
கே.அருண் பெருமாள், விருதுநகர்: 20 வயதான எனக்கு, பருக்கள் அதிகமாக வருவது ஏன்? அதற்கு என்ன மருந்து, சோப்பு பயன்படுத்தலாம்?
தினமும் மூன்று வேளை முகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டு, ஒரு ஈரத் துணியை, நீக்கோ சோப்பில் தேய்த்து, அந்த துணியால் முகத்தை நன்கு துடைக்க வேண்டும். பின், மீண்டும் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். சிகப்பழகு கிரீம், டால்கம் பவுடர் ஆகியவை பயன்படுத்துவதை நிறுத்தவும். 5 சதவீதம் பென்சாய்ல் பெராக்சைடு அடங்கிய ஜெல்லை, இரவு தூங்கச் செல்லும் முன் முகத்தில் பூசினால், பருக்கள் மறையும்.

