பாதத்தில் எரிச்சல் ஏற்பட காரணம் என்ன? சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
பாதத்தில் எரிச்சல் ஏற்பட காரணம் என்ன? சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
PUBLISHED ON : ஜூலை 11, 2010

கே.உமா சங்கர், காரைக்குடி:
என் வயது 55. எனக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் 7 ஆண்டுகளாக உள்ளது. மாத்திரை எடுத்து வருகிறேன். ரத்தத்தில் சர்க்கரை 180 மி.கி., முதல் 200 மி.கி., (சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து) வரை உள்ளது. ரத்த அழுத்தம் 130/80. எனக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆண்மைக் குறைவு உள்ளது. அதாவது விரைப்புத் தன்மை குறைவு, உறவின் ஆரம்பத்திலேயே விந்து வெளிப்படுதல் உள்ளது. இதை தவிர்க்க, தக்க மருந்துகள் எடுப்பது பற்றி ஆலோசனை வழங்குமாறு வேண்டுகிறேன்.
நீரிழிவு நோய் ஏற்பட்டால், நரம்பு மண்டலங்கள் சீராக செயல்படுவது தடைபடும். நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் ஒன்று விரைப்புத் தன்மை ஏற்படுத்துவதும், விந்தணுவை வெளியேற்றுவதும். உங்கள் உடலில், அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ளது. அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிரச்னைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் எடை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. அதிக எடையும், பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். உடலுறவுக்கு முந்தைய, ஊக்க விளையாட்டுகளில் கூடுதல் நேரம் ஈடுபடலாம்.
கண்ணன், போரூர்:
என் வயது 47. எனக்கு சர்க்கரை நோய் ஏதும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக, பாதம் மற்றும் விரல்களில் எரிச்சல் (குதிகால்களில் எரிச்சலும், வலி இல்லை) மிகவும் அதிகமாக உள்ளது. ஆர்த்தோ மற்றும் பொது மருத்துவர்களிடம் காண்பித்தும் சரியாகவில்லை. என் எடை 86 கி.கி., இதே போன்று என் தந்தைக்கும், 35 ஆண்டுகளாக உள்ளது. அவருக்கும் சர்க்கரை நோய் இல்லை. இதற்கு தீர்வு தான் என்ன? சித்தாவில் இருந்தால் கூறவும்.
உங்களுக்கு பாதம் மற்றும் விரல்களில் எரிச்சல் ஏற்படுவது, நரம்பு தொடர்பான பிரச்னை தானே தவிர, நீரிழிவு நோய்க்கு தொடர்பிருக்கும் என்று கூற முடியாது. உங்கள் தந்தைக்கும் இதே போன்று பிரச்னை இருந்தால், வைட்டமின் பி சத்து குறைபாடே தவிர, நீரிழிவு பிரச்னை அல்ல. வயிற்று செல்களில் காணப்படும் ஒரு ரசாயனம், உணவிலிருக்கும் பி12 சத்தை உறிஞ்ச பயன்படுகிறது. இந்த ரசாயனக் குறைபாடு, சில குடும்பங்களில் பரம்பரையாக காணப்படுகிறது. இவர்கள், பி12 ஊசி போட்டு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். சுண்ணாம்பு மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நிறைந்த, 'டிரிப்டோமர், டெக்ரெடால்' மாத்திரைகள் சாப்பிடுவதும் பயன் தரும்.
என்.பாலசுப்ரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்:
23 வயதாகும் என் மனைவிக்கு, மேல் உதட்டில் முடி உள்ளது. என் மனைவி சிவப்பாக உள்ளதால், முடி தெளிவாக தெரிகிறது. இதனால் தினமும் அவள் வருத்தப்பட்டு, மனமுடைந்து போகிறாள். எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. வீட்டு மருந்துகள் உபயோகித்தும், எந்த மாற்றமும் இல்லை. மருத்துவரிடம் சென்றால், கிரீம் அல்லது லேசர் சிகிச்சை செய்ய சொல்கின்றனர்....
பெரும்பாலான பெண்களுக்கு, மேல் உதட்டில் மெல்லிய முடிகள் உண்டு. உங்கள் மனைவி போல, சிவந்த நிறத்தில் உள்ளவர்களுக்கு, அது வெளிப்படையாக தெரியும். தைராய்டு, ஹார்மோன், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ஆகிய பிரச்னைகள் ஏதும் உள்ளதா என்பதை, பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளுங்கள். பொது மருத்துவரோ, தோல் நிபுணரையோ அணுகலாம். இது போன்ற பிரச்னைகள் இருந்தால், அதை சரி செய்தாலே, உங்களுக்கு தீர்வு கிடைக்கும். இந்த பிரச்னைகள் ஏதும் இல்லையெனில், வேக்சிங், திரெட்டிங், லேசர் சிகிச்சை மூலம் நிரந்தரமாக முடியை அகற்றுதல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

