PUBLISHED ON : மே 29, 2022

கோடை காலத்தில் பொதுவாக குழந்தைகளை பாதிக்கும் கை, வாய், பாதங்களில் ஏற்படும் கொப்புளங்கள் இவை. 'ஹேண்ட், மவுத், புட் டிசீஸ்' என்று இதற்கு பெயர். 'காக்சாக்கி ஏ -- 16' என்ற வைரசால் ஏற்படும் பாதிப்பு இது.
கடந்த சில நாட்களாக, 'தக்காளி காய்ச்சல்' என்று புதிதாக ஒரு காய்ச்சல் உருவாகி இருப்பதைப் போன்று செய்திகள் வருகின்றன. அப்படி ஒரு காய்ச்சலை, குழந்தைகள் நல டாக்டர்கள் இதுவரை பார்த்ததில்லை.
கடந்த சில மாதங்களாகவே சென்னை, மும்பை, கேரளா என்று பெரும்பாலான நகரங்களில் இதன் பாதிப்பு உள்ளது; இந்த ஆண்டு சற்று அதிகம் உள்ளது. அதிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஒரு குழந்தையிடம் இருந்து, மற்ற குழந்தைகளுக்கும் எளிதில் தொற்றும் அபாயம் உள்ளது.
உள்ளங்கை, பாதங்கள், வாயைச் சுற்றி, பின்பக்கம் மட்டும் வியர்வை போன்று சிவந்த கொப்புளங்கள் இருக்கும்.
வைரஸ் பாதித்த மூன்று - ஆறு நாட்களில் குழந்தை வழக்கம் போல விளையாடாமல் சோர்வாக இருப்பது, 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல், தொண்டை வறண்டு போவது போன்றவை அறிகுறிகள். சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இல்லாமல் கொப்புளங்கள் மட்டும் இருக்கலாம்.
சில சமயங்களில் கொப்புளங்கள் முதலில் வந்த பின், மற்ற அறிகுறிகள், அதை தொடர்ந்தும் வரலாம். சில குழந்தைகளுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் வெறும் நீர் கோர்த்த கொப்புளங்கள் மட்டும் வருகிறது. இதற்கென்று தனியான சிகிச்சையோ, மருந்துகளோ கிடையாது; வைரஸ் பாதிப்பிற்கு தரப்படும் சிகிச்சையை தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் மூக்கிலிருந்து வழியும் நீர், எச்சில், கொப்புளங்களில் இருந்து வழியும் நீர், மலம், தும்மல், இருமல் இவற்றின் மூலம் மற்ற குழந்தைகளை தொற்றும்; எனவே, பாதித்த குழந்தையை தனிமைப்படுத்துவது நல்லது.
அடிக்கடி கைகளை வாய்க்குள் கொண்டு செல்லும் பழக்கம் குழந்தைக்கு இருக்கலாம். கைகளை அடிக்கடி கழுவி விட வேண்டும். சுகாதாரமான சூழலும், மருத்துவ கண்காணிப்பும் இருந்தால் போதும்.
உடல் முழுதும், முகத்திலும் கொப்புளங்கள் இருந்தால் தான் அம்மை. கை, வாய், கால்களில் மட்டும் இருந்தால், அம்மை என்று தவறாக நினைத்து மருத்துவ ஆலோசனை பெறாமல் இருக்கக் கூடாது.
டாக்டர் தீபா ஹரிஹரன்,
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சென்னை
98410 71435
