PUBLISHED ON : ஜூன் 30, 2013
* பி.ராமநாதன், மதுரை: எனக்கு இரு மாதங்களாக சிறிது தூரம் நடந்தாலே கீழ்வரிசை பல்லுடன், கீழ்த்தாடையிலும் வலி ஏற்படுகிறது. பல் டாக்டர் வலிமாத்திரை தந்தும் பலனில்லை. நான் என்ன செய்வது?
ஒருவர் நடக்கும் போது தாடையிலோ, கீழ்வரிசை பல்லிலோ வலி ஏற்பட்டால் அது இருதய நோயாக இருக்க வாய்ப்பு அதிகம். நடக்கும் போது நடுநெஞ்சிலோ, இடது, வலது கைகளிலோ, முதுகிலோ, தாடை, பற்கள், மேல்வயிறு பகுதிகளில் வலி ஏற்பட்டால், அது இருதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் உடனடியாக ஒரு இருதய டாக்டரை சந்தித்து, எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகளை செய்வது அவசியம். ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் தேவைப்படும். அதன் முடிவுக்கு ஏற்ப, சிகிச்சை முறையும் அமையும்.
* என். ராஜாராம், திண்டுக்கல்: என் சகோதரருக்கு ஒரு மாதத்திற்கு முன் விபத்தில் நெஞ்சில் அடிபட்டது. இன்னும் வலி குறையவில்லை. இது இருதய நோயாக இருக்குமா?
நெஞ்சில் அடிபட்டவருக்கு மார்பக எக்ஸ்ரே, எக்கோ பரிசோதனை தேவைப்படும். இதில் மார்பினுள் உள்ள எந்த உறுப்பில் அடிபட்டுள்ளது? எனத் தெரிந்து விடும். நுரையீரல், இருதயம், தசை, எலும்பில் அடிப்பட்டதா என்பதையும் கண்டறிய இயலும். சிலருக்கு மார்பக சி.டி.ஸ்கேன் தேவைப்படும். இதில் இன்னும் தெளிவாக கண்டறிய முடியும். இவை அனைத்தின் முடிவும் நார்மல் ஆக இருந்தால், சாதாரண தசைவலியாக இருக்கலாம். அதற்கு சில நாட்கள் வலிமாத்திரைகளை எடுத்தால் போதும்.
* கே.பால்ராஜ், பரமக்குடி: எனக்கு இரு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக, 'PIO GLITAZONE' மருந்து எடுக்கிறேன். இம்முறை டாக்டரிடம் சென்றபோது, அந்த மாத்திரையை நிறுத்திவிட்டு, வேறு மாத்திரை தந்துள்ளார். நான் அந்த மருந்தை எடுத்தது தவறா?
'PIO GLITAZONE' என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்தும் மருந்து. இதன் பக்கவிளைவாக எடை அதிகரிக்கும். இதுதவிர, சிலருக்கு இம்மருந்தை எடுப்பதால், 'ஹார்ட் பெயிலியர்' உண்டாகலாம் எனத் தெரிய வந்துள்ளது. சில நாடுகளில் இம்மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்கள் டாக்டர் 'பயோ கிளிட்டசோன்' மருந்தை நிறுத்தி விட்டு வேறு மருந்தை தந்திருக்கக் கூடும். உங்கள் டாக்டரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
* வி. கார்த்திகேயன், சாத்தூர்: என் வயது 41. எப்போதும் என் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 100க்கு மேல் உள்ளது. இது வியாதியின் அறிகுறியா?
நார்மலாக நடுத்தர வயதினருக்கு ஒரு நிமிடத்திற்கு நாடித்துடிப்பு 60 முதல் 100 வரை இருக்கும். இந்தத் துடிப்பின் அளவு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். முக்கிய காரணமாக ரத்தசோகை, காய்ச்சல், தைராய்டு கோளாறுகள், இருதய கோளாறுகள் உள்ளன. உங்களுக்கு ரத்தம், தைராய்டு, இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள் தேவைப்படும். இவற்றின் முடிவு நார்மலாக இருந்தாலும், உங்கள் இருதய துடிப்பு கூடுதலாக இருந்தால், உடற்பயிற்சி போதவில்லை என கருதலாம். தினமும் 45 நிமிடங்கள் நீங்கள் நடைப்பயிற்சி செய்தால் சில மாதங்களில் இருதய துடிப்பு, சரியான அளவிற்குள் வந்து விடும்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344