PUBLISHED ON : ஜூன் 30, 2013
அமெரிக்காவில் மேற்படிப்புக்கு செல்ல உள்ளேன். அங்கு பல்சிகிச்சைக்கு நிறைய செலவாகும் என்கின்றனர். அங்கு சென்றபின் பற்களில் பிரச்னை வராமல் இருக்க, என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்?
அமெரிக்கா செல்வோர் கண்டிப்பாக பல் பிரச்னைகளை அலட்சியம் செய்யக் கூடாது. அந்த நாட்டில், இங்குள்ளதைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த பல்சிகிச்சையை செய்து கொள்ள முடியாது.
இப்பிரச்னைகளை எல்லாம் தவிர்க்க, நீங்கள் கிளம்பும் முன், இங்குள்ள பல்டாக்டரிடம் முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுசொத்தை இருந்தாலும் அதற்கேற்ப அடைத்துவிட வேண்டும். எடுக்க வேண்டிய பற்கள் இருந்தாலும் அவற்றை எடுத்துவிட்டு, செயற்கை பற்களை பொருத்திவிட வேண்டும். இத்தனையையும் தாண்டி சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் பல்வலி வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இங்கிருந்து செல்லும்போது வலிமாத்திரை மற்றும் உங்கள் உடலுக்கு பொருத்தமான ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் கொஞ்சம் எடுத்துச் செல்வது நல்லது. 'இம்பிளான்ட்' சிகிச்சை மற்றும் கம்பி போடும் சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு அவர்களின் பயணகாலதத்திற்கு ஏற்ப சிகிச்சையில் சில மாறுதல்களை செய்து சரியாக முடிக்கலாம். வெளிநாடு செல்லும் முன், பல் டாக்டரிடம் பரிசோதனை செய்து சரியான வழிமுறைகளை கடைபிடித்தால் பற்களை பற்றிய கவலை இல்லாமல் பயணம் இனிதாக இருக்கும்.
எனது வாயோரம் இருபுறமும், வெள்ளையாக வெடிப்பு போல உள்ளது. வாயை திறக்கும்போது சிலநேரம் வலிக்கவும் செய்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்று வாயோரம் வரும் வெடிப்புகளுக்கு 'ஆங்குலர் கீலைடிஸ்' என்று பெயர். இது பாக்டீரியா கிருமிகள் மற்றும் சில வகை பூஞ்சைகளால் ஏற்படும். நம் வாயில் சாதாரணமாக பல வகை கிருமிகள் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அவற்றால் எந்த பாதிப்பும் வராமல், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பார்த்துக் கொள்ளும். இந்த எதிர்ப்பு சக்தி குறையும்போது, அதேகிருமிகளால் புண்கள் அல்லது வெடிப்புகள் மற்றும் வீக்கம் வரும். வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் போன்ற உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு இந்தப் புண்கள் அல்லது வெடிப்புகள் அதிகமாக வரும். இளவயதினருக்கும், கர்ப்பிணிகளுக்கும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் இதுபோன்ற வெண்மைப் படலம் வரும்.
இதற்கு தகுந்த சிகிச்சை செய்யாவிட்டால் வாயின் உள்வரை பரவிவிடும். முதலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதா என பார்க்க வேண்டும். பல் டாக்டரின் ஆலோசனைப்படி, கிருமிநாசினி கலந்த களிம்பை வெடிப்புகளில் தடவ வேண்டும். அடிக்கடி அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும். சத்தான உணவு மற்றும் தேவைப்பட்டால் வைட்டமின் மாத்திரைகளும் சாப்பிட வேண்டும். இதிலும் சரியாகாவிட்டால் லேசர் சிகிச்சை மூலம் வெடிப்புகள் உள்ள செல்களை நீக்கி வாயோர வெடிப்புகள், புண்கள் மற்றும் வெள்ளை படலங்களை முற்றிலுமாக குணப்படுத்தலாம்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551