PUBLISHED ON : ஜூன் 30, 2013

என் கணவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. டாக்டர் சி.ஓ.பி.டி., நோய் உள்ளதாக கூறுகிறார். அப்படி உள்ளவர்கள் எந்த உணவை எடுக்க வேண்டும்?
சி.ஓ.பி.டி., என்பது 'க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிஸீஸ்' என்பதன் சுருக்கம். இந்த நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடுமுறை உள்ளது. இந்நோய் பாதித்தவர்கள் பால், சோயா, பருப்பு மற்றும் பயறு வகைகள், அசைவ உணவில் மீன், முட்டை வெள்ளைகரு @பான்ற புரதச்சத்து மிகுந்த உணவை எடுக்க வேண்டும். சாப்பிடும் போது மூச்சிரைத்தால் மெதுவாக சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் உணவு வயிறு நிறைந்த உணர்வை அளித்தால் குறைந்த அளவில், ஆனால் அடிக்கடி சாப்பிடவும். உடல் எடை அதிகம் இருந்தால் அதை குறைக்க முயற்சிக்க வேண்டும். நம் உடல் எடை நம் உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். எளிதாக ஜீரணமாகக் கூடிய புரதச்சத்து உள்ள உணவை உட்கொள்ளுங்கள்.
என் மனைவிக்கு நுரையீரல் நோய் இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை, சாதாரண வார்டுக்கு மாற்றும்போது அவரை பரிசோதித்த டாக்டர், ஏ.பி.ஜி., பரிசோதனை செய்யும்படி கூறினார். அப்படி என்றால் என்ன?
ஏ.பி.ஜி., என்பது 'ஆர்ட்ரியல் பிளட் காஸ்அனாலிசிஸ்' என்ற ரத்தப் பரிசோதனை. ஆர்ட்ரி எனப்படும் தமனியில் இருக்கும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு அளவுகளை குறிப்பது தான் ஏ.பி.ஜி., பரிசோதனை. நுரையீரலில் நோய் மற்றும் நம் உடம்பின் வளர்சிதை மாற்றத்தில் (மெட்டபாலிக் இம்பேலன்ஸ்) அதிகளவில் மாற்றம் இருந்தாலும், ஏ.பி.ஜி.,யில் மாற்றம் வரும். உடலில் எந்த ஒரு நோய் இருந்தாலும், அதன் தீவிரத்தை கண்டறிய இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிக்கு தொடர்ந்து ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைடின் அளவுகளை கண்டறிய பல நவீன கருவிகள் உள்ளன. இது நோயாளியின் சிகிச்சைக்கு உதவியாக இருக்கிறது.
என் கணவருக்கு நுரையீரலில் கேன்சர் உள்ளது. கேன்சர் கட்டி மூச்சுக்குழாயை அழுத்துவதால் அதை விரிவுபடுத்த ஸ்டென்ட் வைக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர். ஸ்டென்ட் நுரையீரலில் எங்கே வைக்கப்படும்?
கேன்சர் கட்டி மூச்சுக்குழாயை அழுத்திக் கொண்டே இருந்தால், சுவாசப்பாதை சுருங்கி இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும். அதை தடுக்க வலதுபக்கம் உள்ள அகலமான சுவாசக்குழாய் அல்லது இடதுபக்கம் உள்ள அகலமான சுவாசக் குழாயில் எந்தப் பக்கம் கேன்சர் கட்டி உள்ளதோ அப்பகுதியில் ஸ்டென்ட் பொருத்தப்படும். கேன்சர் கட்டியை சுருக்குவதற்கு லேசர் முறையையும் கையாளலாம். அது பயனளிக்காத நிலையில் ஸ்டென்ட் பொருத்துவது நல்லது. சில சமயங்களில் கேன்சர் கட்டி சுவாசப் பாதைக்கு வெளியே இருந்தும் அழுத்திக் கொண்டே இருக்கும். அதற்கும் ஸ்டென்ட் பொருத்துவது நல்லது. நுரையீரலில் நோய் தொற்றுக்கூட சுவாசப்பாதையில் சுருக்கம் ஏற்படுத்தும். அதற்கும் ஸ்டென்ட் சிகிச்சை உதவியாக இருக்கிறது.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147