தற்போது இளைய சமூகத்தின் மத்தியில், பெரும் பிரச்னையாக உலா வருவது நரை முடி. மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் போன்றவைகளால், இன்றைய தலைமுறையினருக்கு, 20 வயதிலேயே தலைமுடி நரைக்க துவங்கி விடுகிறது. இன்னும் சில காரணங்களும் உள்ளன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம்.
தற்போதைய ஆய்வு ஒன்றில், தலையில் அதிகளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும், தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும். உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும், நரை முடி வரும்.
அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக, டயட்டில் இருக்கிறார்கள். இதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது வருகிறது. உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பதும், நரைக்கு முக்கிய காரணம் என, மற்றொரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், காப்பர் தான் உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது.
இத்தகைய சத்து குறைபாட்டால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து வெள்ளை முடி ஏற்படுகிறது. காப்பர் சத்து அதிகம் உள்ள கடல் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சைவம் எனில், எலுமிச்சை, காளானில் அதிகம் உள்ளது. இதை முறையாக உட்கொண்டால், இளமையில் நரை வராமல் தடுக்கலாம்.