PUBLISHED ON : செப் 27, 2015
பிரசவம் என்பது, பெண்களுக்கு மறு ஜென்மம் போன்றது. மொத்த உடல் சக்தியையும், பிரசவத்தின் போது பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதிக ரத்த இழப்பு ஏற்படுவது வழக்கம். பின், குழந்தை வளரும் வரை, ரத்தத்தை பாலாக தருவதால், அதிக சத்துக்கள் தேவைப்படும்.
இதனால், கர்ப்ப கால கவனிப்பை போல, பாலூட்டும் காலத்திலும், பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை உண்பது கட்டாயம். போதிய சத்துக்கள் இல்லாத பட்சத்தில், பால் சுரப்பு குறைந்து விடும். எனவே, கீரைகள், பேரீச்சைபழம், கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை, உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால், குழந்தையின் வளர்ச்சியில் குறைவிருக்காது. கொழுப்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த பொருட்களை, அடிக்கடி சாப்பிட வேண்டும்.
பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், சோளம் போன்ற கால்சியம் சத்துக்கள், அதிகம் கொண்ட உணவுகளை, கட்டாயம் உணவில் சேர்ப்பது நல்லது.
பாதாம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க்கடலை, மீன், முட்டை போன்ற, புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை, உண்பதால் பால் சுரப்பு அதிகரிக்கும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது, மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்க உதவும்.
அதிக கொழுப்பு உள்ள உணவு, கிழங்கு வகைகள் மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை, பிரசவம் ஆன பின், ஒரு மாத காலத்திற்கு தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதை சாப்பிடுவதால், வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளாறுகள் ஏற்படும்.
இதற்கு பதிலாக, இஞ்சி, பூண்டு, மிளகை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

